வவுனியாவில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கிராமங்களில் தனித்து காணப்படுகின்ற வீடுகளை இலக்கு வைத்து வீட்டின் பின்பகுதியூடாக செல்லும் திருடர்கள் வீட்டில் உள்ளவர்கள் அணிந்திருக்கும் தோடு, சங்கிலி உள்ளிட்ட நகைகளை கத்தி முனையில் அபகரித்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வவுனியா பொலிசாரும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியாவில் மூன்று இடங்களில் ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது.

வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் இரு வீடுகளுக்குள் கறுப்புத்துணி, ஜெக்கற் என்பவற்றை அணிந்தவாறு நுழைந்த குழுவினர் கத்தி முனையில் அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றனர்.

s2

அன்றைய தினம் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள பன்சி கடை ஒன்றும் உடைக்கப்பட்டு 43,000 ரூபாய் பணம் மற்றும் சில பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இவைகுறித்து வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை தீவிரப்படுத்தினர். இதன்போதே பொலிசாருக்கு அந்த தகவல் கிடைத்தது.

பூந்தோட்டம் பகுதியில் உடைக்கப்பட்ட கடை தொடர்பில் வாய் பேசமுடியாத தந்தையும், அவரது மகனும் அளித்த வாக்குமூலங்களே குற்றவாளியை கைதுசெய்ய உதவியுள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வசிப்பவரே இ.இராமகிருஸ்ணன் (வயது 58). வாய் பேசமாட்டாதவர். இவரது மனைவியும் வாய் பேசமாட்டாதவர். இவர்களுக்கு கிருசாந்தன் (வயது 12), டயானா (வயது 9) என்னும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.

திருட்டுப்போன சம்பவ தினம் இவர்களது மரவேலை செய்யும் பட்டறையுடன் கூடிய வீட்டுக்கு வந்த வாய்பேசமாட்டாத இளைஞன் ஒருவன் கதைத்துக் கொண்டு இருந்துள்ளான்.

முன்னரும் குறித்த இளைஞன் தொடர்பாக அறிமுகம் இருந்தமையால் அவனது செயற்பாடுகளில் இராமகிருஸ்ணனுக்கு சந்தேகம் இருந்தது.

இதனால் தனது மகனை அழைத்து இவன் தொடர்பாக கவனமாக இருக்குமாறும் வீட்டில் இருந்து எதையாவது கொண்டு போயிருவான் பார்த்துக் கொள்ளுமாறும் கூறியிருந்தார்.

சுமார் 3 மணிநேரம் கதைத்து விட்டு இரவு 9 மணிபோல் அங்கிருந்து நடந்து சென்றுள்ளான். இதனை அவதானித்த 12 வயது கிருசாந்தன் தந்தையிடம் கூறியுள்ளான்.

அவன் மேல் சந்தேகம் கொண்டு இருவரும் அவனைப் பின்தொடர்ந்து தேடிய போது பூந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு கடை ஒன்றின் பின்புறமாக குறித்த இளைஞன் படுத்திருந்துள்ளான்.

ஏன் இதில் படுத்திருக்கிறாய் என 12 வயது கிருசாந்தன் கேட்க, கடை முதலாளி தான் என்னை இதில் படுக்கச் சொன்னார். கடையின் பாதுகாப்புக்காக படுத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளான் குறித்த இளைஞன். இதனையடுத்து சிறுவனும், தந்தையும் தமது வீட்டுக்கு சென்று உறங்கிவிட்டனர்.

விடிந்ததும் பார்த்த போது அவன் படுத்திருந்த கடைக்கு அருகில் உள்ள கடைக்கு முன்னால் மக்கள் கூட்டம் காணப்பட்டுள்ளது.

அங்கு தந்தையுடன் சென்று சிறுவன் பார்த்த போது அந்த கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து கிடைத்த தகவல்கள் மற்றும் சிறுவன், சிறுவனின் தந்தையார் ஆகியோரின் தகவலின் அடிப்படையில், கடைக்கு பின்னால் படுத்திருந்த இளைஞன் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

s4கடைக்கு பின்னால் படுக்குமாறு கடை உரிமையாளர் எவருக்கும் கூறவில்லை என கூறியதையடுத்து அவ் இளைஞனை பொலிசார் வலைவீசித் தேடினர்.

இறுதியில் கடை உரிமையாளர்களால் வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் பிடிக்கப்பட்டார். பிடிக்கப்பட்ட இளைஞன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அப்போது தான் பொலிசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

கைது செய்யப்பட்ட இளைஞன் வாய்பேசமாட்டாதவன். அவனிடம் சிறப்பாக சைகை மொழியில் பேசியே தகவல்களை பெறவேண்டியிருந்தது.

பொலிசாரின் விசாரணைகளில் முழுமையாக தகவல்களை பெறமுடியாது போக 12 வயது சிறுவனாகிய கிருசாந்தனின் உதவையை நாடினர் பொலிசார்.

அவனது தாயும், தந்தையும் பேசமாட்டாதவர்கள் என்பதால் சைகை மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான் கிருசாந்தன். இதனால் அவன் பொலிஸ் விசாரணைக்கு பெரிதும் உதவினான்.

பொலிசாரால் கேட்கப்படுகின்ற கேள்விகளை கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சைகை மொழியில் கேட்டு அதனை பொலிசாருக்கு தமிழில் விளங்கப்படுத்தினான் சிறுவன்.

அதனடிப்படையிலும், பொலிசார் தாம் விசாரித்து பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் குறித்த இளைஞனுக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்தனர்.

திங்கள் கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தி தற்போது குறித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் திருடியமையை தனது வாக்குமூலத்தில் ஒத்துக் கொண்டுள்ளதுடன், திருடிய சில பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

s5
திருட்டுச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசாருக்கு 12 வயது கிருசாந்தன் உதவியதன் மூலம் ஒரு திருட்டு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

இதேவேளை, குறித்த சிறுவனின் செயற்பாடு, திறமை குறித்து வவுனியா பொலிசாரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இன்று இளைய சமுதாயத்தினர் சிலர் சீரழித்து செல்கின்ற போதும், கிருசாந்தன் போன்ற திறமையான மாணவர்களும் இருக்கின்றார்கள்.

தற்போது அவனது செயற்பாட்டால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கின்றனர் அவனது பெற்றோர் மட்டுமன்றி அந்த கிராம மக்கள் அனைவருமே. பெற்றோரின் மகிழ்ச்சியில் சைகை மொழிகளுடன் தானும் இணைந்துள்ளான் கிருசாந்தன்.

-கே.வாசு

Share.
Leave A Reply