டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷ்யாவின் விமான தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாக்க அப்பாவி பொதுமக்களை கூண்டில் அடைத்து மனித கேடயங்களாக சிரியா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகை அதிர வைத்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சிக் குழு உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது. சிரியாவின் மற்றொரு பகுதியில் அல் நூஸ்ரா முன்னணி மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அதிபர் ஆசாத்துக்கு எதிரான அனைத்து கிளர்ச்சி குழுக்கள், தீவிரவாதிகள் மீது ரஷ்யா உக்கிரமான வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையில் அதன் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் விமான தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள கிளர்ச்சி கும்பல், பொதுமக்களை கூண்டுகளில் அடைத்து மனித கேடயங்களாக பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோ காட்சியும் வெளியாகி உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ மற்றும் தகவலை இங்கிலாந்தைச் சேர்ந்த சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply