இலங்கைக்கு வருகைதந்திருந்த சீன யுவதியின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் 28 ஆம் திகதி நாட்டிற்கு வருகைத்தந்த குறித்த சீன யுவதியும் அவருடைய கணவனும், கடந்த 2 ஆம் திகதி குறித்த ஜோடி இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியொருவருடன் இணைந்து பேராதெனியவிலிருந்து நானுஓயா நோக்கி புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது கைப்பை திருடப்பட்டது.
ஹட்டன் ரொசல்லை புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து சீனப் பெண்ணின் கைப்பையை,புதையிரதத்தில் பயணித்த நபரொருவர் பறித்துச் சென்றுள்ளார்.
அப்பையில் பணம் மற்றும் பெறுமதியான கையக்கத்தொலைபேசி ஆகியன இருந்துள்ளன. பின்னர் குறித்த சீன ஜோடி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து அப்பெண் தனது மற்றைய கையடக்கத்தொலைபேசியின் ஊடாக, ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது காணாமல் போன கையடக்கத்தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட ஹட்டன் பொலிஸார் ஜி.பி.எஸ் தொழில்நுட்ப உதவியுடன் கைப்பை இருக்குமிடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
திருடப்பட்ட கைப்பையில் நவீன கைத்தொலைபேசி ஒன்று இருந்ததால் இது சாத்தியமானதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை கொழும்பு கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் தனது நண்பரொருவரின் வீட்டில் இருந்தபோது கைது செய்த பொலிஸார் கைப்பையையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர் போதைக்கு அடிமையானவர் எனவும் , அவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைப்பையில் அமெரிக்க டொலர், சீன நாணயம் உள்ளிட்ட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் நவீனரக கைத்தொலைபேசி ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பையிலிருந்த இலங்கை ரூபாவை சந்தேகநபர் செலவுசெய்துள்ளதோடு, ஏனைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டமை குறிப்பிடதக்கது.
இந்த சம்பவம் குறித்து சீனத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸாரின் திறமையான செயற்பாட்டினை குறித்த சீன ஜோடி பாராட்டியுள்ளனர்.