வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள், விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25ஆவது ஆண்டு நிறைவு நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘இனச்சுத்திகரிப்பு’ நடவடிக்கை குறித்து தாம் வெட்கப்படுவதாகவும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைக்கு அன்று எதிர்ப்பு தெரிவிக்காத தமிழர்கள் அனைவரும் இந்த வரலாற்றுத் தவறுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவம்கூட ஒரு ‘போர்க் குற்றமே’என்றும் தெரிவித்திருக்கிறார்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் குறித்து சர்வதேச அளவில் மாநாடு நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி, மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது தொடர்பாக பேசுவதற்கு முன், உள்நாட்டில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வுகளுக்கு பரிகாரம் தேடிக்கொள்வதென்பது மிகவும் அத்தியாவசியமானதொன்று. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இலங்கையின் பெரும்பான்மையின பேரினவாத அரசுகள், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக குரல் கொடுக்கும் இந்தத் தருணத்தில், சிறுபான்மையின மக்கள் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் வௌவேறு தேசிய இனங்கள், தங்களுக்குள் பரஸ்பரம் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் பேணிக்கொள்வதென்பது இரட்டிப்பு அவசியமானது.

இந்தப் பின்னணியில், இலங்கையில் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான உறவு என்பது எவ்வளவு உணர்வுபூர்வமானது என்பது காலா காலமாக அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாகப் பயணிப்பவர்களுக்கு மிகவும் பரிச்சயமானதொன்று.

நெருக்கமாக வாழும் இந்த இரு இன மக்கள் மத்தியிலும் காலத்துக்கு காலம் அரசியல் காரணிகள் தங்கள் அரூப கரங்களினால் பிணக்குக்களைத் தோற்றுவிப்பதும், அதில் ஏற்படும் விளைவுகளைத் தங்களுக்குச் சார்பாக பயன்படுத்திக்கொள்வதும் அடி-முடி தெரியாத அப்பாவித் தமிழ்-முஸ்லிம் மக்கள் இந்த அரசியல் அரியண்டங்களில் அகப்பட்டு பாதிக்கப்படுவதும் ஒவ்வொரு காலப்பகுதியிலும் நடைபெற்றுவரும் கறுப்புச் சரித்திரங்கள்.

அரசியல் இயந்திரங்கள் தமக்கு தேவைப்பட்ட காலப்பகுதிகளில் எல்லாம் தமிழ்-முஸ்லிம் உறவுகளுக்கிடையிலான இந்தப் பகையைக் கிளறும் துவேச வெறியாட்டத்தினைத் திட்டமிட்டே நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றன.

இதுபோன்ற நடவடிக்கையாக வடக்கில் 25 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த சம்பவம்தான் முஸ்லிம்களின் முற்றுமுழுதான வெளியேற்றம்.

அப்போது வட பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பினால் அவர்களது இராணுவ தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் இந்த வெளியேற்றமாகும்.

அது ஏன் மேற்கொள்ளப்பட்டது? எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இப்போது நாம் தேடும் விடைகள் எதுவும் திருப்தியாக அமைந்துவிடப்போவதில்லை.

ஏனெனில், அந்த முடிவை மேற்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு இன்றில்லை. அந்த அமைப்பு சார்பில் உத்தியோகபூர்வமாக, சுயாதீன வெளியில் – உண்மையான கருத்துக்களை முன்வைக்கக்கூடியவர்கள் எவரும்கூட இப்போது இல்லை என்பது ஒரு விடயம்.

மற்றையது, வரலாற்றுப் பக்கங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் உள்ள காரணங்களுக்கு அந்த காலப்பகுதியிலிருந்து விளக்கங்களை பெற்றுக்கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்குமே தவிர, நிகழ்காலத்தின் அடிப்படையில் அல்ல.

anton_021118அதற்காக, விடுதலைப் புலிகளின் இந்த முடிவை சரியென்று முடித்துக்கொள்வதாக அர்த்தம் கிடையாது. ஏனெனில், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமே வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை ஒரு வரலாற்று தவறு என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்.

இதற்கும் மேலாக, 2002ஆம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை வன்னிக்கு அழைத்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்…,

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய நடவடிக்கை குறித்து கரிசனையுடன் பேச்சு நடத்தி, அவ்வாறு இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் மீண்டும் வடக்கில் வந்து குடியேறுமாறு கோரி முஸ்லிம் மக்களின் சார்பான பிரதிநிதியாக ரவூப் ஹக்கீமை கருதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் கைச்சாத்திட்டார்.

வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்த வசதி செய்துகொடுப்பது, முஸ்லிம்களிடமிருந்து போராட்டத்துக்கு பணம் பெறுவதை உடனடியாக நிறுத்துவது, வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளுடன் பிராந்திய ரீதியில் பேசித்தீர்க்கும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒவ்வோர் பிரதிநிதியை நியமிப்பது ஆகிய அடிப்படை விடயங்களிலும் –

இலங்கை அரசுடனான சமாதான பேச்சுக்களில், முஸ்லிம்கள் சார்பாக முஸ்லிம் காங்கிரஸை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்வது என்ற அரசியல் விடயத்திலும் ஆழமான ஓர் உடன்பாடு எட்டப்பட்டது.

Prabharan-Hakeem12 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் – முஸ்லிம் உறவை வலுப்படுத்துவற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட காத்திரமான நடவடிக்கை இதுவாகும்.

இதனை முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஏனைய முஸ்லிம் தலைவர்கள், மதப்பெரியார்கள், புத்திஜீவிகள் அனைவரும் பெரிதும் வரவேற்றனர்.

அப்போது வடக்கு, கிழக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலராக பதவி வகித்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ‘இணைந்த வடக்கு- கிழக்கில்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்’ என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகளே இந்த நல்லெண்ண நடவடிக்கையை முன்னெடுத்து, இரு இன மக்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த வழிகோலினார்கள். ஒரு தேசிய இனத்துக்கு, ஓர் ஆயுதக்குழு இழைத்த குற்றத்துக்கு மேற்கொள்ளப்பட்ட உச்சபட்ச பரிகார முயற்சியாக அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

ஆனால், தற்போது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை விதைப்பது போன்ற பாதையில் அரசியல்வாதிகள் கருத்துக்கூற தலைப்பட்டிருப்பது பல தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வரலாற்று ரீதியாக இடம்பெற்ற நிகழ்வொன்றை நினைவு கூருவது என்பது வேறு, அதனை அரசியலுக்காகப் பயன்படுத்துவது என்பது வேறு.

மைத்திரியின் வருகையுடன் நல்லாட்சிக்கான காலம் கனிந்திருப்பதாக அறிக்கைக்கு அறிக்கை சந்திப்புக்கு சந்திப்பு பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சிறுபான்மை அரசியல்வாதிகள், சிங்கள ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிறார்கள். சிறுபான்மையின மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் சின்ன சின்ன காரியங்களையாவது செய்யவேண்டும் என்கிறார்கள்.

அவர்கள் செய்கிறார்களோ, இல்லையோ, எங்கள் தரப்பிலிருந்து செய்யவேண்டும் என்பதற்காக தசாப்தங்களாகப் புறக்கணித்த இலங்கையின் சுதந்திரதின வைபவத்திலேயே சுமந்திரன் சென்று ஆஜராகிறார்.

மறுபுறத்தில், தன்பங்குக்கு நல்லெண்ண சமிக்ஞை காண்பிப்பதற்கு சம்பந்தர் ஐயா இலங்கையின் தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு நிற்கிறார்.

இவையெல்லாம்கூட நல்லிணக்க முயற்சியா என்று பொதுமக்கள் மத்தியில் முகம்சுழிக்கும் வகையில் கேள்விகள் எழுந்தாலும், ‘இல்லை இல்லை, இது இராஜதந்திரம்’ என்று கூறி வாயை அடைத்துக்கொண்டார்கள் என்று புத்திஜீவிகள்.

நல்லிணக்கம் தொடர்பாக இவ்வளவு கரிசனையும் கவலையும் கொண்டுள்ள இந்த தமிழ் அரசியல்வாதிகள் எப்பவோ முடிந்து போன ஒரு சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட தரப்பு மன்னிப்பும் கோரி பரிகாரமும் மேற்கொண்ட பின்னர், அது ஓர் இனச்சுத்திகரிப்பு என்றும் அதனைத் தட்டிக்கேட்காத ஒவ்வொரு தமிழனும் வெட்கப்படவேண்டும் என்றும் கூறுவதன் நோக்கம்தான் என்ன?

இவ்வாறு இப்போது நினைவு நிகழ்வில் நின்று நீட்டோலை வாசித்து உணர்ச்சி அரசியல் செய்வதன் மூலம் தமிழ் – முஸ்லிம் உறவுகளுக்கு இடையில் இந்த அரசியல்வாதிகள் எவ்வளவுதூரம் தங்கள் நல்லிணக்க பயணத்தில் முன்நகர்ந்திருக்கிறார்கள்?

வடக்கை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றும்போது அதனை தடுத்துநிறுத்தாத தமிழ் மக்களை இன்று கடிந்துகொள்ளும் சுமந்திரன் அவர்கள் அப்போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை பார்த்து இதேகேள்வியைக் கேட்பதற்கு என்றாவது துணிந்ததுண்டா?

இது போதாதென்று, வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு மன்னிப்பு கோரி வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தனது அரசியல் வைரியான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கு இழுத்திருக்கும் சுமந்திரன், முன்னர் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை தீர்மானத்தை வட மாகாணசபையில் நிறைவேற்றியதற்காக ‘ஆதாரம் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றிய முட்டாள்தனமான முயற்சி’ என்று சீறி சினந்தாரா?

முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக இவ்வளவு காலத்தில் எவ்வளவு ஆதாரங்களை சேகரித்திருக்கிறார் என்று இவரால் பொதுவெளியில் கூறமுடியுமா?

ஆக மொத்தம், முதலமைச்சருக்கும் தனக்கும் இடையிலான அரசியல் பகைமையையும் ஓர் இனத்துக்கு இடம்பெற்ற வரலாற்று குற்றநிகழ்வுக்கு வருத்தம் தெரிவிக்கும் சபையில் சாடை மாடையாகக் குத்திவிட்டு வந்திருக்கிறார். அவ்வளவுதான்.

இதற்கு ஒரு படி மேலே சென்றுள்ள ஹக்கீம், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்த வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமும் போர்க்குற்றமே என்று தெரிவித்திருக்கிறார்.

சுமந்திரனாவது பரவாயில்லை. இந்த விடயத்தில் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.

அன்று தொட்டு இன்றுவரை இலங்கை முஸ்லிம்களின் விவகாரத்தில் கூடவே பயணிக்கும் ஹக்கீம் ஏன் இவ்வாறு தவிச்ச முயலடிப்பதற்கு தவியாய் தவிக்கிறார்.

இலங்கைவில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தில் மூச்சுவிட கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இயலுமானவரை காயங்களுக்கு மருந்தளிப்பதில் அரசியல்வாதிகள் கருமம் ஆற்றினால் பயன்தருமே தவிர, காயங்களைக் கிளறிப் பார்ப்பதில் அல்ல.

ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பேரினவாத அரசுகள் மேற்கொண்ட வரலாற்று ரீதியான அடக்குமுறைகளையும் அட்டூழியங்களையும் அராஜகங்களையும் பாதிக்கப்பட்ட மக்களை ஒருமித்து எதிர்ப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். சர்வதேச சமூகமும் அதையே வழிமொழிந்திருக்கிறது.

இந்த வேளையிலும் கூடாதவர்களின் கூடாரங்களில் நின்று அரசியல்வாதிகள் குளிர்காய முயற்சித்தால், அது அனைத்து பிரச்சினைகளையும் மீண்டும் ஆரம்பப் புள்ளியில்தான் கொண்டுசென்றுவிடும்.

– .தெய்வீகன்

Share.
Leave A Reply