புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை செய்ய ட்ரயல் அட்பார் (நீதிபதிகள் அடங்கிய விசாரணை மன்று) அமைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்றிருந்த அவர் யாழ்.மேல்நீதிமன்றில் நீதிபதிகள், நீதிவான்கள், சட்டத்தரணிகளுன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட குற்றச் சம்பவம் பற்றிய பொலிஸ் விசாரணை நிறைவடையும் தறுவாயில் உள்ளது. அந்த வழக்கு விசாரிக்க ட்ரயல் அட்பார் முறையிலான நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு குறித்த வழக்கை விசாரிக்கும் என்றார்.
சாவுத் தண்டனை விதிக்கப்படுகின்ற போதும் அது செயற்படுத்தப்படுவதில்லை. அந்தத் தண்டனையை மீள செயற்படுத்துவது பற்றிக் கேட்ட போது, அது பற்றி நாடாளுமன்றில் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பதிலளித்தார்.
காய்ச்சலினால் சிறுமி பலி
04-10-2015
திருகோணமலை, பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு 7 மணியளவில் காய்ச்சல் காரணமாக கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோரமங்கடவெல, பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.உதேசிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம், தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை உயரதிகாரி தெரிவித்தார்.
இம்மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
பூட்டியிருந்த வீட்டுக் கதவை உடைத்து நகை உட்பட பொருட்கள் திருட்டு
04-10+2015
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர் ஒருவரை அழைத்து வர கொழும்பு சென்றவர்களின் வீட்டு முன் கதவினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 1 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் இலத்திரனியில் பொருட்களை திருடி சென்றுள்ளனர் என திங்கட்கிழமை (02) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் வண்ணார் பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 29 ஆம் திகதி உறவினர் ஒருவரை அழைத்து வர குறித்த வீட்டில் உள்ள அனைவரும் கொழும்புக்கு சென்றிருந்தனர். இந் நிலையில் இவர்களின் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் நகை மற்றும் இலத்திரனியில் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இத் திருட்டு கடந்த 29 ஆம் திகதியிருந்து 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என வீட்டு உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.