இன்று (04) மாத்தளை நோக்கி புறப்படவிருந்த ரயில் ஒன்று கண்டி ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில், பெண் ஒருவர் தனது 06 வயது சிறுவனை குறித்த இரயிலின் முன் தள்ளிவிட முயற்சி செய்துள்ளார்.
இதன்போது, தனது கடமைக்காக பொலிஸ் நிலையம் வந்து கொண்டிருந்த, கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பெண் பொலிஸார் ஒருவர், உடனே அச்சிறுவனை காப்பாற்றியுள்ளார்.
இவ்வேளையில் குறித்த சந்தேகநபரான பெண், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, பின்னர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சிறுவன், குறித்த சந்தேகநபரான பெண்ணின் கடைசி மகன் என தெரியவந்துள்ளதோடு, இச்சிறுவனின் தந்தையின் கவனிப்பற்ற தன்மை காரணமாகவே, தான் இத்தவறைச் செய்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார். குறித்த கணவனும், மனைவியும், கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும், இச்சிறுவனை காப்பாற்றிய பெண் பொலிஸார், கர்ப்பிணி எனத் தெரிவித்த பொலிஸார், குறித்த சந்தேகநபரையும் அவரது குழந்தையையும் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று (04) சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்