தாவூத் இப்ராஹிமினால் என் உயிருக்கு ஆபத்து என்று அலறத் தொடங்கி இருக்கிறார் சோட்டா ராஜன். பாலித்தீவில் ஆஸ்திரேலியா காவல் நிலையத்தில் கதறியது முதன்முறையல்ல.

சோட்டா ராஜன் தாவூத்தை விட்டு பிரிந்து சென்ற பொழுதே, தப்பிக்க இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மிகவும் பதட்டமான சூழலில், தன்னை காப்பாற்றும்படி கதறி அழுத கதையின் பின்புலம் மிகவும் சுவாரஸ்யமானது.

சோட்டா ராஜனுக்கு சொர்க்கமாக இருந்த துபாய் அன்று நரகமாக மாறிப்போனது. துபாயில் அந்த ஒரு இரவை மட்டும் கழித்து இருந்தால், யாருக்கும் தெரியாமல் கடலில் சுறாவுக்கு இரையாகிவிடுவோம் என்று உயிர் பிழைத்து ஓடிப்போய் சரண்டர் ஆனான்.

இந்திய ஹை கமிஷன் அதிகாரிகள் தாவூத்தை வீழ்த்த சோட்டா ராஜனை கையில் எடுக்க ஆயத்தமானார்கள். சோட்டா ராஜனின் கவனம் முழுவதும் தாவூத்திடம் இருந்து எப்படியாவது தப்பித்து போக வேண்டும் என்ற ஒரே எண்ணமாக இருந்தது.

ஒரே நாளில் தாவூத்தின் முக்கியமான டைரியை துபாயில் இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரியிடம் கொடுத்தான்.

dawood 8 leftttஅந்த டைரியில் தாவூத்தின் நிழல் உலக வியாபார புள்ளிகளின் தொடர்புகள் எண்கள் உள்பட பல்வேறு முக்கியமான விபரங்கள் அடங்கி இருந்தது. அதனை பார்த்த உளவுத்துறை அதிகாரிகள் மிரண்டு போய் விட்டனர்.

யாரெல்லாம் பல்வேறு நாடுகளின் மிகப்பெரிய அதிகார மையத்தின் முக்கிய புள்ளிகள் என்று நினைத்தார்களோ அவர்கள் எல்லாம் தாவூத்திற்கு நெருக்கமாக இருப்பது தெரிய வந்தது.

அதோடு துபாய் நாட்டின் ராஜ குடும்பத்தின் மன்னர், இளவரசர் உள்பட அனைவரும் தாவூத்திற்க்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை அந்த டைரி காட்டிக்கொடுத்தது.

அந்த டைரியை மிகவும் ஆர்வமாகவும், அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் மிகவும் சுவாரஸ்யமாகவும் படித்துக்கொண்டு முக்கிய குறிப்புகளை எடுத்துக்கொண்டு இருக்கும்பொழுதே சோட்டா ராஜன் அலற ஆரம்பித்தான்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் உயிருக்கு மட்டும்மல்ல; உங்கள் உயிருக்கும் ஆபத்து. உங்கள் உயிர் துப்பாக்கி குண்டுகளால் பறிக்கப்படும் என்று அலறினான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சோட்டா ராஜனுக்கு சென்னையில் உள்ள ஒரு முகவரியில் இருந்து பாஸ்போர்ட், விசா ரெடி செய்து காட்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மலேசியாவிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

மலேசியாவிற்கு ஒரே இரவில் சோட்டா ராஜன் தப்பித்துபோன கதை இரண்டு நாள் கழித்துதான் தாவூத்திற்கு தெரிய வந்தது.

சோட்டா ராஜன் தாவூத்தை தொடர்பு கொள்ளவில்லை என்பதால், யார் கையிலாவது சிக்கிக்கொண்டானா என்று தீவிரமாக தேடியபொழுதுதான், தாவூத்தின் சோர்ஸ் ஒருவன், சோட்டா ராஜன் அவசர அவசரமாக துபாயில் இருந்து வெளியேறிய கதையை சொன்னான்.

தாவூத்தின் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளானான் சோட்டா ராஜன். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சோட்டா ராஜனின் தலை தனக்கு வேண்டும் என்று தனது சகாக்களுக்கு கட்டளை போட்டான்.

மலேசியா, சிங்கப்பூர் என்று தாவூத்தின் ஆட்கள் கொலைவெறியோடு தேடினார்கள். இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த இண்டர்போல் அமைப்பு, சோட்டா ராஜனை உடனடியாக தாய்லாந்திற்கு பார்சல் செய்து அனுப்பினார்கள்.

தாய்லாந்து போன சோட்டா ராஜனை மூன்று மாதம் கழித்து தேடிக்கண்டுபிடித்தனர். அங்கிருந்த சோட்டா ராஜனை போட்டுத்தள்ள ஆயத்தமானபொழுது, அவர்களிடமிருந்து தப்பித்து பாங்காங் கடலுக்குள் ஓடி ஒளிய ஆரம்பித்தான் சோட்டா ராஜன்.

பாங்காங் கடலுக்குள், சொகுசு கப்பலில் மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். அவன் குடியிருந்த கப்பலை நோக்கி வந்த பல்வேறு கப்பல்களை கண்டாலே தாவூத் தன்னை கொலை செய்ய வருவதாக பயத்தில் நடுங்கி அலற ஆரம்பித்தான்.

அதன் பிறகு பாங்காங் நகரில் வைத்து சோட்டா ராஜன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினான் தாவூத்.

அதில் தப்பித்த சோட்டா ராஜன், கண்விழித்த நொடியில் தாவூத் தன்னை கொல்ல மருத்துவர், நர்ஸ் மூலம் வருவதாக புலம்பினான்.

அதிக பட்சமாக மருத்துவமனைக்கே வெடிகுண்டு வைத்து இருப்பதாக புலம்பியே நாட்களை கடத்தினான். அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளில், ஒரு இரவைக்கூட நிம்மதியாக சோட்டா ராஜன் கழித்தது இல்லை.

தற்பொழுது வரை அந்த பயத்தில் சோட்டா ராஜன் வாழ்ந்து வருகிறான். இதுவரை சோட்டா ராஜனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் சோட்டா ராஜனை பாதுகாப்பு வளையத்தில் வைத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சோட்டா ராஜனை மும்பைக்கு கொண்டு செல்ல சிபிஐ தரப்பில் இருந்து ஆறு முக்கிய அதிகாரிகள் பாலீத்தீவிற்க்கு போனார்கள்.

ஆனால் தன்னை இந்தியா கொண்டு செல்வதற்கு எதிர்ப்பினை தெரிவித்த சோட்டா ராஜன், மும்பை போலீஸ் முழுவதும் தாவூத்தின் ஆட்கள் இருப்பதாகவும், அதனால் தன்னை டெல்லிக்கு கொண்டு செல்லுமாறும் மீடியாக்கள் முன்பு அலறியதன் பின்னணியில், பல்வேறு உண்மைகள் ஒளிந்து இருக்கின்றன.

dawood 8 600 1தாவூத்திற்கு எப்படி எதிரியானான் சோட்டா ராஜன்?

தாவூத்தின் துபாய் டி கம்பனியை நிலைகுலைய வைத்தான். போதை மருந்துகள், ஆயுதம் உள்பட பல்வேறு தாவூத்தின் கடத்தல் பிசினஸ்களில் கையை வைத்தான்.

அடுத்த கட்டமாக தாவூத்தின் ஆட்களை காலி செய்யும் வேலைகளில் அதிக கவனம் செலுத்தினான்.

ஒரு கட்டத்தில் இந்தியாவின் துணையோடு டி கம்பனியின் ஆணி வேரை பிடுங்க பார்த்ததால், தாவூத் தனக்கு இருந்த உலக செல்வாக்கால் சோட்டா ராஜனை வேட்டையாட நாடு நாடாக துரத்தினான். சோட்டா ராஜனும் ஓடி ஓடி களைத்து விட்டான்.

தற்பொழுது தாவூத்தும், சோட்டா ராஜனும் முதுமையின் விளிம்பில் இருக்கிறார்கள். யார் மரணத்தை யார் முடிவு பண்ணுவது என்கிற போட்டியில் இருக்கிறார்கள். இயற்கை ஒருபக்கம் இவர்களது விளையாட்டை எட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. முடிவு என்ன ஆகும்?

– சண்.சரவணக்குமார்

தாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன் (தாதா தாவூத் தொடர்-7)

மாஃபியாக்களால் நிரம்பி வழிந்த சிறைகள்! (தாதா தாவூத் தொடர்-6)

 

Share.
Leave A Reply