பிரிவினைக்காகச் செயற்பட்டார்கள் என்றோ, அதற்காக உதவினார்கள் என்றோ அல்லது அந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என்றோ கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தீர்வொன்றைக் காண்பதாக அரசாங்கம் அறிவித்த காலக்கெடு, இன்னும் மூன்று நாட்களில் இம் மாதம் 7ஆம் திகதி முடிவடைகிறது.

இந்;தக் காலக்கெடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கம், கடந்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதியின் விளைவாக வழங்கப்பட்ட காலக்கெடு அல்ல. மாறாக, இது இந்தக் கைதிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றின் விளைவாகும்.

இதற்கு முன்னரும் இந்தக் கைதிகள் இதுபோன்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அரசாங்கம், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவராவது ஒரு தமிழ் அமைச்சரை அனுப்பி, ஏதாவது ஒரு வாக்குறுதியைக் கொடுத்து அந்த நேரத்துக்கு பிரச்சினையை சமாளித்ததேயல்லாமல், எந்தவொரு ஜனாதிபதியும் ஒருபோதும் அதில் தலையிடவில்லை. இது ஜனதிபதி ஒருவர் தலையிட்ட முதலாவது முறையாகும்.

இந்தத் தமிழ் கைதிகள், அரசியல் கைதிகளா என்ற சர்ச்சையும் இதனோடே எழுந்துள்ளது. இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என்றும் இவர்கள் பல்வேறுபட்ட குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் என்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இலங்கையின் சட்டத்தின் படி அரசியல் கைதிகள் என்ற சொல்லுக்கு இடமில்லை என்பதால் அவரது விளக்கம் சரி தான்.

ஆனால், கொலை, கொள்ளை மற்றும் தாக்குதல்கள் போன்ற குற்றங்களைப் புரிந்த ஏனைய கைதிகளை விட வித்தியாசமாக, அரசாங்கமே இந்தக் கைதிகளைக் கருதுகிறது. அவர்கள், பூஸா போன்ற இடங்களில் தனியான சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சிறைச்சாலைகளிலும் அவர்கள் தனியானதோர் பகுதியில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள், அரசியல் காரணமொன்றான தமிழ்ப் பிரிவினைவாதம் தோன்றியதை அடுத்து, அதனை முறியடிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்;கும் மேலாக, இவர்கள் குற்றமிழைத்திருந்தால் தனிப்பட்ட தேவைக்காக அன்றி அரசியல் நோக்கமொன்றுக்காகவே குற்றமிழைத்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி நடத்திய இரண்டு கிளர்ச்சிகளை அடுத்தும் இந்தப் பிரச்சினை எழுந்தது. இன்று போலவே அன்றும் மனித உரிமை இயக்கங்கள், அக் கிளர்ச்சியாளர்களை அரசியல் கைதிகளாக வர்ணித்தன. அப்போதைய அரசாங்கங்கள் அதனை ஏற்கவில்லை. ஆனால், அன்றும் அரசாங்கம் நடைமுறையில் அவர்களை சாதாரண கைதிகளாக நடத்தவில்லை.

1971ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களை விசாரிக்க குற்றவியல் நீதி ஆணைக்ககுழு என்றதோர் ஆணைக்குழுவை நியமித்து அதன் மூலமே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

பொதுவாக அரசாங்கம், தெற்கிலும் வடக்கிலும் கிளர்ச்சிகளின் போது கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கருதாவிட்டாலும் ஒருவித அரசியல் அடிப்படையில் அவர்களை வித்தியாசமாகவே கருதியது.

எனவே, அது வேறுவிதமாக அவர்களை அரசியல் கைதிகளாக கருதுவதற்கு சமமாகும். இந்தத் தமிழ் கைதிகளில் பெரும்பாலானோர் போர் முடிவடைவதற்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்களாவர்.

போரின் இறுதிக்கட்டத்தில் கைதுசெய்யப்பட்டோர் மற்றும் சரணடைந்தோர், அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். எனவே, பிரிவினைவாதப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் உள்ள கைதிகளில், பெரும்பாலும் எல்லோரும் குறைந்த பட்சம் ஆறு வருடங்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்குப் புறம்பாக, பத்துப் பதினைந்து வருடங்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் விசாரணை செய்து, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அந்த அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள ஆறு வருடங்களாகியும் முடியவில்லை என்றால், அது அந்த சட்ட மா அதிபர் திணைக்களத்தின் திறமை எந்தளவு என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் இது, அதுபோன்ற தாமதம் ஒன்றல்ல என்றே தோன்றுகிறது. அரசாங்கம், இவர்கள் அரசியல் கைதிகளல்லர் என்று கூறிய போதிலும், அரசியல் ரீதியாக அவர்களைத் தனியாக நோக்குவதனாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது என்று ஊகிக்கலாம்.

விளைவு என்வென்றால், கைதிகளிடையே கல்வி கற்கும் வயதில் இருந்தவர்களுக்கு அந்த வயது கடந்துவிட்டது. உயர் கல்விக்காகக் காத்திருந்தவர்கள் இப்போது அநேகமாக அதனை மறந்தேவிட்டார்கள்.

திருமணம் செய்யும் வயதில் இருந்தவர்களில் சிலரது அந்த வயது போய்விட்டது. குடும்பப் பொறுப்பை ஏற்றிருந்தவர்களில் சிலரது குடும்பங்கள் சிதறிச் சீரழிந்துவிட்டன. கைதானதை அடுத்து பலர் தொழில்களை இழந்தனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் புதிதாக தொழில்களைத் தேட வேண்டி நேர்ந்துள்ளது.

சாதாரண நோயால் பீடிக்கப்பட்டவர்கள் கடுமையான நோயாளர்களாகிவிட்டனர். வயதான பெற்றோர்களைக் கவனிக்க வேணடியவர்கள் சிறையில் இருப்பதால் அந்தப் பெற்றோர்கள் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர்.

எனவே, கைதிகளின் போராட்டம் முற்றிலும் நியாயமானதே. ஆனால், தெற்கில் சில அரசியல்வாதிகளும் சில சிங்கள ஊடகங்களும் அவர்களை விடுதலை செய்வதைப் பாவித்து, அரசியல் மற்றும் வர்த்தக இலாபங்களை அடைய முனைவதையும் காணக்ககூடியதாக இருக்கிறது. அரசாங்கம், பயங்கரப் புலிகளை விடுதலை செய்யப் போகிறது என்று, அண்மையில் ஒரு சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.

ஆயினும் அவர்களின் எண்ணிக்கை மிகவும் சிறியதாகும். பெரும்பாலான சிங்கள மக்களும் இந்தப் பிரச்சினைக்குத் தீரவொன்று இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

விந்தையான விடயம் என்னவென்றால், போரின் மிகப் பயங்கரமான கட்டமான இறுதிக் கட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 11,000க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள், புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டு மிகக் குறுகிய காலத்துக்குள் விடுதலை செய்யப்பட்டமையும், அதே போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் அவ்வாறானதோர் திட்டத்தில் சேர்க்கப்படாமல் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையுமே.

அதிலும் குறிப்பாக, புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் குற்றச்சாட்டே இல்லாமல் சமூக அந்தஸ்தோடு இருக்க இடமளித்துள்ளமையும், அவர்களது கட்டளைகளுக்கு இணங்க செயற்பட்டவர்கள் வழக்கு விசாரணையும் இல்லாமல் நீண்ட காலமாக தடுத்து வைககப்பட்டுள்ளமையும் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டுள்ளது.

அந்தத் தலைவர்கள் இப்போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டால் அவர்களது கட்டளைகளைப் பின்பற்றியோர் எவ்வாறு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடியும்?

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகளின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட முன்னாள் சிறப்புத் தளபதியாக இருந்தார். அவர், அமைப்பிலிருந்து வெளியேறிய சில தினங்களில் அமைப்புக்குள் அவர் புறக்கணிக்கப்படவில்லை என்பதை உணர்த்துவதற்காக, அவர் அமைப்பில் இரண்டாம் தலைவராக இருந்தார் என புலிகளின் அப்போதைய அரசியல்துறைத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.

கருணா என்று இயக்கப் பெயரில் அழைக்கப்பட்ட முரளிதரன், கிழக்கில் தலைவராக இருக்கும் போதே 600க்கு மேற்பட்ட சரணடைந்த பொலிஸ்காரர்கள், புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர் கிழக்கில் தலைவராக இருக்கும் காலத்தில், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு கிழக்கிலிருந்தே அதிகமான குண்டுகள் வந்தன. அந்தக் காலத்திலேயே, கிழக்கிலும் வட மத்திய மாகாணத்திலும் பெரும்பாலான சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டு, நூற்றுக் கணக்கில் சாதாரண மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால், அந்தக் கருணா ஒரு போதும் அந்த விடயங்களுக்காகத் தடுத்து வைக்கப்படுவது ஒரு புறமிருக்க, குறைந்தபட்சம் விசாரிக்கப்படவும் இல்லை. அவர் இறுதிக் காலத்தில் புலிகளைத் தோற்கடிக்கப் பாதுகாப்புப் படையினருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

இப்போது கருணா அதனை மறுத்த போதிலும், போர் முடிவடைந்து சில மாதங்களில் 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த அவர் ‘போரினால் ஏற்பட்ட வன்முறைகளை வெற்றி கொள்வதற்காக, வழங்கிய பங்களிப்பினை நான் திருப்தியுடன் நினைவு கூருகிறேன்’ என்றார்.

அவ்வாறு அவர், போர் வெற்றிக்காக அரச படைகளுக்கு உதவி செய்தமைக்காக அவரை விட்டுவிடுவது சரியென அரசாங்கம் கருதலாம். ஆனால், அவர் போன்ற தலைவர்களது கட்டளைகளை ஏற்றதற்காக, 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை நியாயப்படுத்த முடியுமா? புலிகளின் தளபதி ஒருவரான அவரே, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டால், புலிகள் அமைப்பின் சாதாரண தொண்டர்கள் எவ்வாறு அச்சுறுத்தலாக முடியும்?

புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததன் பின்னர் அமைப்பின் தலைவராக கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனே நியமிக்கப்பட்டார். போர் முடிவடைந்து சில மாதங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அன்று அவர் கைது செய்யப்படாமல் இன்னமும் இருந்திருந்தால், அவர் இன்று போல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களைப் பற்றிப் பேசுவாரா அல்லது தமிழீழத்தைப் பற்றிப் பேசுவாரா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விடயமாகும்.

அந்தக் கே.பி, சுமார் 30 ஆண்டுகளாக புலிகளுக்குப் போர்த் தளபாடங்களை வழங்கி வந்தார் என்பது பொதுவாக அறிந்த விடயமாகும். ஆனால், அவருக்கு எதிராக நீதிமன்றமொன்றிலோ அல்லது குறைந்தபட்சம் இணக்கச் சபையொன்றிலோ எந்தவித குற்றச்சாட்டையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. கே.பியின் கட்டுப்பாட்டில் இருந்த புலிகளின் கோடிக் கணக்கான பணமே இதற்குக் காரணமென பலர் நினைக்கிறார்கள்.

ஆனால், 30 ஆண்டுகளாக புலிகளுக்கு போர் ஆயுதங்களை வழங்கிவிட்டு பிரபாகரனின் மறைவை அடுத்து தொடர்ந்தும் இரத்தம் சிந்தும் போரை முன்னடத்திச் செல்ல முற்பட்ட கே.பி. வெளியில் இருக்க, அவரது ஆயுதங்களைப் பாவித்தவர்கள் வழக்கு விசாரணையும் இன்றி பல வருடங்களாக சிறையில் தவிப்பது என்ன நியாயம்? அவரே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டால் புலிகள் அமைப்பின் சாதாரண தொண்டர்கள் எவ்வாறு அச்சுறுத்தலாக முடியும்?

புலிகளின் பேச்சாளராக தயா மாஸ்டரே நீண்ட காலமாக செயற்பட்டு வந்தார். சில சிங்கள பத்திரிகைகளுக்கு வழங்கிய பேட்டிகளில் அவர் புலிகள் சாதாரண மக்களை இலக்காகக் கொண்டு நடத்திய படு பாதகக் குண்டுத் தாக்குதல்களையும் நியாயப்படுத்தியிருந்தார்.

போர் நடவடிக்கைகள் போர் களத்துக்கு வெளியேயும் பரவுவதைத் தடுக்க முடியாது என்பது அவரது வாதமாகியது. ஆனால், புலிகளுக்குச் சாதகமாகக் கூடிய இரண்டு கட்டுரைகளை எழுதினார் என்பதற்காக ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கச் செய்த இரகசியப் பொலிஸார், தயா மாஸ்டர் புலிகளுக்காக செயற்பட்டார் என்பதற்கு அதாரங்கள் இல்லை என அவரைப் பிணையில் விடுதலை செய்வதை அனுமதித்தனர்.

அண்மையில் உயிரிழந்த புலிகளின் மகளிர் அரசியல் பிரிவுத் தலைவி தமிழினி- வவுனியாவில் அமைந்த அகதி முகாம் ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டு இருக்கும் போது தம்மையும் அரச புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனை ஏற்ற அரசு, அவரை புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்து பின்னர் விடுதலை செய்தது. அதில் எவ்விதத் தவறும் இல்லை. ஆனால், ஏனைய புலிச் சந்தேக நபர்கள் விடயத்தில் அந்த நடவடிக்கையை எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

புலிகளைப் பற்றித் தகவல்களை வழங்கவில்லை என்பதற்காகக் கைது செய்யப்பட்ட பலர் சிறையில் இருக்கிறார்கள். ஆனால், அதே குற்றச்சாட்டின் பேரில் எழிலனின் மனைவியும் தமிழ்ச்செல்வனின் மனைவியும் கைதுசெய்யப்படவில்லையே.

கைதுசெய்யப்பட வேண்டும் என்று நாம் கூற வரவில்லை. ஆனால், இந்தக் குற்றச்சாட்டினால் சிலர் அநீதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதையே சுட்டிக் காட்டுகிறோம். இந்தக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

குறைந்த பட்சம் உடனடியாக இவர்கள் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையாக இருக்கிறது. பொது மன்னிப்பு வழங்க முடியாவிட்டால் அரசாங்கம் விக்னேஸ்வரனின் கருத்தையாவது ஏற்றுக் கொள்வதே பொருத்தமாகும்.

2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதன் அறிக்கையில் இந்தக் கைதிகளின் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் எனக் கூறுகிறது. புதிய அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இம்முறை ஜெனீவா பிரேரணையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

அதாவது, அரசாங்கம் – இந்தக் கைதிகளின் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதியளித்துள்ளது. முன்னர் போல் தாம் வாக்குறுதிகளை மீறவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இம்முறை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தின் ஆரம்பத்தில் கூறினார். அந்த வகையிலும் அரசாங்கம் இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும்.

-எம.எஸ.எம் ஐயூப்-

Share.
Leave A Reply