பென்சில்வேனியா: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தந்தையும், மகனும் தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என்று கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
இவர்கள் உண்மையான அப்பா, மகன் இல்லை. நினோ எஸ்போஸிட்டா என்ற ஓய்வு பெற்ற ஆசிரியரும், ரோலன்ட் டிரூ போஸி என்ற எழுத்தாளரும் ஹோமோ செக்ஸ் எனப்படும் ஓரினச் சேர்க்கை பழக்கம் உடையவர்கள்.
40 வருடமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருவரும் இந்த உறவு முறையில் மட்டுமே இருந்து வந்தனர். இருப்பினும் பின்னர் ரோலன்ட்டை, தனது வளர்ப்பு மகனாக நினோ தத்தெடுத்துக் கொண்டார்.
ஆனால் இப்போதுதான் அது தப்பாகி விட்டதே என்று இருவரும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால் பல ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ந்த போதிலும் நினோ ஜோடிக்கு இது வருத்தமாகி விட்டது. காரணம், அப்பா, மகன் உறவு முறையில் இருப்பதால் இவர்களால் திருமணம் செய்ய முடியாத நிலை.
இதையடுத்து இருவரும் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், தங்களது தத்தெடுத்தலை ரத்து செய்து தங்களை தந்தை – மகன் பந்தத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று இவர்கள் கோரியிருந்தனர்.
ஆனால் கீழ் கோர்ட் இதை ஏற்கவில்லை. நிராகரித்து விட்டது. தந்தை – மகன் உறவு முறையை செல்லாது என்று அறிவிப்பது இயலாதுஎன்று அது கூறி விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இருவரும் அப்பீல் செய்துள்ளனர். இந்த உறவு முறையிலிருந்து வெளி வந்ததும் திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனராம்.
இந்த இருவருக்குமே 65 வயதுக்கு மேலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.