மத்தியப்பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் படேல் (23). இவருக்கும் சீமா(20) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

மோகன் படேல் வீட்டில் கழிப்பறை வசதி கிடையாது. புதுமணப் பெண்ணாய் அந்த வீட்டில் புகுந்த சீமா கழிப்பறை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தொடக்கத்தில் சகித்துக்கொண்ட சீமா கழிப்பறை கட்டும்படி கணவரை வலியுறுத்தி வந்தார். ஆனால் மோகன் இதை காதில் போட்டுக்கொள்ளாமல் இழுத்தடித்துக்கொண்டே வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீமா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கணவரை பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 20 மாதங்களாக பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.

தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி மோகன் குடும்பநல கோர்ட்டை அணுகினார். இதையடுத்து இருவரையும் அழைத்து ஆலோசனை வழங்கினார்கள்.

அப்போதுதான் கழிப்பறை வசதி இல்லாததால் சீமா பிரிந்து இருப்பது தெரிய வந்தது. அவரது கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து ஒரு மாதத்துக்குள் கழிப்பறை கட்டும்படி குடும்பநல மையம் உத்தரவிட்டது.

இறுதியாக கணவர் மோகன் படேல் ஷாபூர் உள்ளூர் பெண் பஞ்சாயத்து தலைவர் உதவியுடன் கழிப்பறையை கட்டி முடித்துள்ளார்.

தற்போது கணவர் வீட்டில் கழிப்பறை கட்டப்பட்டதை அறிந்த சீமா தனது 19 மாத பெண் குழந்தையுடன் மீண்டும் புகுந்தவீடு திரும்பி உள்ளார்.

அவரை வரவேற்கும் நிகழ்ச்சி அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் மான்கிதா பாய் கவுரவிக்கபட்டார்.

நிகழ்ச்சியில் பெடுல் மாவட்ட கலெக்டர் ஞானேஸ்வர் படேல் கலந்து கொண்டார்.

Share.
Leave A Reply