எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான கருத்துக்களை பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா வெளியிட்டுள்ளார்.
எனவே, அவரிடமிருந்து 500மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எவன்கார்ட் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் அண்மைக்காலமாக வெளிவந்தமுள்ளன. இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களில் பங்கேற்றிருந்தேன்.
அவ்வாறிருக்கையில் நேற்றைய தினம்(நேற்று முன்தினம்) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அரசாங்கம், அமைச்சர்கள், பாதுகாப்புத்துறையினர், விசேடமாக நீதியமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், நீதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அவதூறு ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சரத் பொன்சேகாவை நாமே பொதுவேட்பாளராக களமிறக்கினோம். வேட்புமனு, தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அவரின் சட்டத்தரணியாக நானே செயற்பட்டிருந்தேன்.
நாவலவில் உள்ள எனது வீட்டிலேயே அவருடைய தேர்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தன. நான் அழைத்திருந்த தொழிலதிபர்கள் 50இலட்சம் ரூபா தொகையை வழங்கியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இராஜகிரிய மாவத்தையில் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு 2ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கு அதிகமாக சேகரிக்கப்பட்டது.
மேலும் என்னூடாக 100மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டு தேர்தலில் சரத் பொன்சேகா செலவினங்களை மேற்கொண்டிருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரும், எமது மாவட்ட அமைப்பாளர்களுமே செலவினங்களைச் செய்தார்கள்.
குறிப்பாக மிகவும் வெற்றியளித்த பிரசாரமாக அவரே அடிக்கடி கூறும் மகரகம பிரசாரத்திற்கான செலவை நானே மேற்கொண்டிருந்தேன்.
கொழும்பு மாவட்ட பிரசாரத்திற்காக அவருக்கு எவரும் இடம் வழங்க முன்வராததன் காரணத்தால் கிருலப்பனையில் உள்ள எனது வீட்டை அவரது தேர்தல் செயற்பாடுகளுக்காக வழங்கினேன்.
தேர்தல் செயற்பாடுகளுக்கு செல்வதற்காக தேசிய வீரன் என்ற வகையில் அவருக்கான உடையைக் கூட நானே பெற்றுக்கொடுத்தேன்.
இன்று அவர் எவன்கார்ட்டில் நான் நிதி பெற்றதாக கூறுகின்றார். திடீரென அவருக்கு இவ்வாறான கருத்தைக் கூறவேண்டிதற்கான காரணம் என்ன?
எவன்கார்ட் விசாரணை ஆரம்பிக்கப்படும்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் என சிலர் கருதினார்கள்.
சாட்சிகள் இல்லாது விட்டாலும் இதனை விட அவரை கைது செய்வதற்கு உகந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை கூறி எமக்கு சிலர் அழுத்தமளித்தார்கள். அவர்களில் சரத்பொன்சேகாவும் ஒருவராவார்.
தன்னை கைது செய்வதற்கு காரணமாக இருந்த முப்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பட்டியலொன்று பொன்சேகாவிடம் காணப்படுகின்றது.
அவர்களையும் கைது செய்யவேண்டுமென்ற யோசனை பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்டது. நாம் நல்லாட்சியை முன்னெடுக்கவே வந்திருக்கின்றோம்.
அரசியல் பழிவாங்கல்களை செல்வதற்காக அதிகாரத்திற்கு வரவில்லை என்பதை தெ ளிவாக குறிப்பிட்டேன்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை கைது செய்யும் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் நிலைமைகளை எடுத்துக் கூறியுள்ளேன்.
எவன்கார்ட் விடயத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கைதுசெய்ய முடியாமைக்கான காரணத்தை சட்டமா அதிபரும் ஜனாதிபதி, பிரதமரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது எத்தரப்பிடமிருந்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் பக்கச்சார்பற்ற நீதியை நிலைநாட்டுமாறே அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார்கள். அதன் பிரகாரம் சட்டமா அதிபர் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
தற்போது அவர் பீல்ட் மார்ஷலாகியுள்ளதால் கடந்த காலத்தை அவர் மறந்திருக்கலாம். 2010 பெப்ரவரி 7ஆம் திகதி பொன்சேகா கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் எங்கிருக்கின்றார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்ததொன்றாக இருந்தது.
அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து, உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்களுடனும், செஞ்சிலுவை சங்கத்திடமும் அவருக்கா நான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.
அது மட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்காலத்தில் இந்தியாவில் இருந்தபோது அவரிடம் கூறினேன். அவர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் பொன்சேகா எங்கிருக்கின்றார் என்று வினவியதுடன் அவரை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குங்கள் எனக் கோரிக்கை விடுத்தேன்.
பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவையும் என்னையும் இராணுவத்தலைமையகத்திற்கு வருகைதருமாறு கூறினர்.
அங்கு அவர்களது வாகனங்களில் எம்மையேற்றிச் சென்றனர். இடையிடையே வாகனங்களை மாற்றி கடற்படை முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று பார்வையிடுவதற்கு அனுமதியளித்தனர்.
மூன்று மாதங்களுக்கு அவரை எம்மிருவரைத் தவிர எவருக்கும் பார்வையிடுவதற்கு அனுமதி அளித்திருக்கவில்லை. அதன்போது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்குமாறு கோரினார்.
அப்போது எனது தலைவரோடு ஆலோசனை செய்து கப்பஹா மாவட்டத்தில் களனியில் இடமளிப்பதாக கூறினேன்.
அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் அவருடைய கைது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு விசாரணைக்கு சென்றேன்.
அங்கு எமது கட்சியில் பொன்சேகா போட்டியிடவுள்ளதால் அவருடைய வேட்புமனு தாக்கல்செய்யப்படவேண்டியுள்ளது.
ஆகவே சட்டமா அதிபர், சமாதான நீதிவான் ஆகியோரை அழைத்துச் செல்வதற்கு மன்றிடம் அனுமதி கோரினேன்.
அவ்வனுமதியைப்பெற்று மறுதினம் பொன்சேகாவிடம் செல்ல முற்பட்டபோது நான் அனுமதியைப் பெற்ற ஆவணத்தின் பிரதியை பெற்றுக்கொண்டு சென்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டயினரின் வேட்புமனுவில் பொன்சேகா கையெழுத்திட்டுள்ளதாக அறிந்தேன்.
அதனாலேயே அவரால் எமது கட்சியில் போட்டியிடமுடியாதுபோனது.
சரத் பொன்சேகா சிறையிலிருந்து வெளிவந்ததும் போதிபூஜையொன்றை நடத்தினார். அதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் நான் செல்லவில்லை.
தற்போது எமது அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அவருக்கு பொதுமன்னிப்பளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.
நான் அலரிமாளிகையின் நுழைவாயிலில் இருக்கும்போது அவருடைய செயலாளரும், சட்டத்தரணியும் வெற்றுத்தாளையும், பேனாவையும் வழங்கி ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஐந்து நிமிடங்களே இருக்கின்றன பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுமாறு கோரினர்.
அவர்மீதான வழங்குகள் தொடர்பில் எவ்வாறு முடிவெடுப்பது? சட்டமா அதிபரின் கருத்து என்பன பெற்றுக்கொள்ளவேண்டும்.
அச்செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ள ஆகக்குறைந்தது இரண்டு வாரங்களாகும் எனநான் கூறியபோது நான் அவருடைய விடுதலையை தடுப்பதாக என்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதேபோன்று அவருடைய கட்சியைச்சேர்ந்த ஜயந்தகெட்டகொடவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கினை நீதிமன்றம் நிராகரித்தபோதும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களால் தடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக பொன்சேகா குற்றம் சுமத்தினார்.
பொன்சேகாவிற்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகள் காணப்பட்டன. அவற்றை வாபஸ்பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் அவருடைய செயலாளரும் சட்டத்தரணியும் கோரினர்.
அதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் என்னால் அவ்வாறு கூறமுடியாது என்பதை குறிப்பிட்டேன். அதன்போதும் என்மீது குற்றம் சாட்டினார்.
மற்றுமொரு முக்கியமான விடயமொன்றுள்ளது. மேஜர் ஜெனரல் சுனித் மானமடு என்பவர் பொன்சேகாவின் மருமகனான அசோக திலகரட்னவிற்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதாவது பொன்சேகா கேள்விகோரலின்போது மேற்கொண்ட ஊழல் மோசடிகள் மூலம் பெற்றுக்கொண்ட 887 இலட்சம் ரூபாவினை அவருடைய மருகனான அசோக திலரட்னவின்பெயரில் வங்கிச் சேமிப்பில் வைத்திருந்தாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரகாரம் அதுகுறித்து அறிவித்தலொன்று நீதிமன்றத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அந்த நிதியை அரச உடமையாக்குவதா அல்லது உரிமையாளரிடம் கையளிப்பதா என்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பது நிதிமைச்சரின் பொறுப்பாகும்.
இந்நிலையில் அசோக திலகரட்ன அந்த நிதியை தனக்கு பெற்றுக்கொடுக்குமாறு என்னிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
அதன்போது இந்த நிதி தொடர்பில் எனக்கு சந்தேகமுள்ளது. எனவே ஆராய்ந்த பின்னரே தீர்மானமெடுக்கமுடியுமென பதிலளித்துள்ளேன். இது பொன்சேகாவிற்கு பெரும்பிரச்சினையாகவுள்ளது.
அது தொடர்பில் ஆராயாது அந்நிதியை என்னால் கையளிக்கமுடியாது. ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில் என்னுடைய நண்பர் என்ற அடிப்படையில் நீதிக்கு விரோதமாக செயற்பட என்னால் முடியாது.
இவ்வாறான காரணங்களின் பின்னணியிலேயே பொன்சேகா அண்மைக்கலமாக மிகமோசமான விமர்சனங்களை வேண்டத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அரசாங்கத்தின் பொறுப்பான அதிகாரிகளை அவதூறாக விமர்சித்து வருகின்றார்.
எனவே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்தமைக்காக 500மில்லியன் ரூபா நட்ட ஈடுகோரி வழக்கு தொடுக்கவுள்ளேன். அச் செயற்பாட்டை சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்துள்ளேன்.
எவன்கார்ட் விடயம் தொடர்பாக நான் கூறவேண்டிய அனைத்து விடயங்களையும் கூறிவிட்டேன். இந்ந விடயத்தில் நான் ஒரு சதத்தைகூட பெறவில்லை.
அவ்வாறு பெற்றமை நிரூபிக்கப்படுமானால் நான் அமைச்சுப்பதவியை துறப்பேன் எனக் கூறினேன்.
இந்த விடயத்தின் பின்னணியில் வியாபாரிகளும், ஊடக நிறுவனமொன்றும் உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஆகியோர் மீது அவதூறுகளைக் கூறி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலளிப்பதாக கூறி மக்கள் மத்தியில் பிறிதொரு கருத்தை கட்டியெழுப்பி எவன்கார்ட்டிடமுள்ள தற்போதைய ஒப்பந்தத்தை விலக்கி மெரிட்டைம் நிறுவனத்திடம் ஒப்படைப்பதையே குறித்த ஊடக நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
எவன்கார்ட்டிடமிருந்து எவ்வளவு தொகை எனக்கு கிடைத்ததென ஊடகவியலாளர் ஒருவர் என்னிடத்தில் கோரியுள்ளார்.
அந்த ஊடகவியலாளர் உண்மையிலேயே சித்தசுவாதினமாற்றவர் என்பதை தெளிவாக கூறுகின்றேன். எனது வருமானம், செலவினம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு தெ ளிவாக வழங்கியுள்ளேன். எனவே பொன்சேகாவின் செயற்பாடுகள் எவையுமே புதுமையளிப்பதாகவில்லை என்றார்.
பொன்சோக விடுத்த அறிக்கை…இது: அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு முடியும்: விஜயதாஸ மோசடிக்காரர்
விஜயதாஸ ராஜபக்ஷ என்பவர் திருடன் மற்றும் மோசடிக்காரன் என தான் பயமின்றி தொடர்ந்தும் சொல்வதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் (விஜயதாஸ ராஜபக்ஷ) எவன்காட் சம்பவத்தின் மூலம் இலஞ்சம் பெற்றதாக தான் முன்னரும் கண்டியில் ஒரு மேடையில் குறிப்பிட்டதாக பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவங்களின் பின்னணியில் அமைச்சர் விஜித அபேவர்த்தன உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீபாவளி பண்டிகைக் காலத்தில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அவ்வாறு விடுவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தன்னை விடுவித்ததும் அவ்வாறே என அவர் சுட்டிக்காட்டினார்.