குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார்.

சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

“நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த “திருவருட்செல்வர்” படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை ‘புக்’ செய்தார்கள்.

புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு ‘சுத்தத் தமிழ்’ கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு `பிரண்ட்ஸ்’ ஆகிவிட்டார்கள்.

சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு ‘நடிப்பு’ பற்றி பயமே இருந்ததில்லை.

படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜி சாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன்.

கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ “கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேட்பார்.

“இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்” என்பேன்.

உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், “யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்” என்பேன்.

அப்படி உத்தரவிட்டு விட்டு, “கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்” என்பேன்.

இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.

இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் ‘கடவுள் ஞானம்’ கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள்.

ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், “அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்” என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.

டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் ‘கட்’ செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார்.

காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது.

இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது “திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது” என்று வர்ணித்திருந்தது.

அதுமாதிரி, “திருமால் பெருமை” படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது.

படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன்.

ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை.

அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன்.

காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவி விட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார்.

“இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது.

அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்” என்று சொன்னவர், “உங்க கையை நீட்டுங்க” என்றார், அம்மாவிடம்.

அம்மா ‘எதற்கு’ என்று புரியாமல் பார்த்த நேரத்தில், “எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்” என்றார்.

அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.”

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

குட்டி பத்மினி `பேபி’யாக நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த ‘நம் நாடு’ படம் முக்கியமானது. இந்தப் படத்தில் குட்டி பத்மினியும், பேபி ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் எம்.ஜி.ஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் மகள் – மகனாக (ஸ்ரீதேவிக்கு பையன் வேடம்) நடித்தனர்.

எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

“அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும்.

காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் “இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்” என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.

எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், “ஸ்கிப்பிங் பண்ணினாயா?” என்று கேட்பார்.

“இல்லை” என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, `ஷாட்’ இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார்.

மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார்.

ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். “அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும்.

“தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை”ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க.

எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை. அவங்க இல்லாதப்பதான் `தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்’னு புரிஞ்சுது.

அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது” என்றார்.

இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, `அம்மா’வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன்.

நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார்.

அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது `ஸ்கூல் பீஸ்’ கேட்டு வந்தால், “முகவரி கொடுத்திட்டுப் போங்க.

பணம் அனுப்புகிறேன்” என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.

இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் “மித்ராலயா” டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்.”

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

Share.
Leave A Reply