நயினாதீவு என்ற தமிழ பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெயரை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றியிருக்கின்றது.
வட மாகாணசபையின் நேற்று முன்தின அமர்வில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் 8 ஆம் வட்டாரத்தை நாகதீபம் வடக்கு எனவும், 12 ஆம் வட்டாரத்தை நாகதீபம் தெற்கு எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளன.
எனவே இதன் பெயர்களை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பெயர் மாற்றத்தை வர்த்தமானியில் உடனடியாக பிரகடனம் செய்ய ஜனாதிபதியும் உள்ளூராட்சி, மாகாணங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தப் பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.