இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இன்று முதல் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தமிழ் கைதிகளை விடுதலை செய்யக்கோரி அவர்களது உறவினர்கள் முன்னர் நடத்திய போராட்டம்
இதே கோரிக்கையை முன்வைத்து இந்தக் கைதிகள் கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
ஆனால், நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்க்கப்படும் என்று ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து அவர்கள் அதனை கைவிட்டிருந்தனர்.
தமக்கு ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கியிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.
ஆனால், சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இருநூறுக்கும் அதிகமான தமிழ் கைதிகளில் 63 பேருக்கு நாளை முதல் இரண்டு கட்டமாக பிணையில் விடுதலை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த உண்ணாவிரதம் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கிடையிலே இந்த தமிழ்க் கைதிகள் சிலரை கொழும்பு மகசின் சிறைக்கு சென்று சந்தித்து வந்த அருட்தந்தை சத்திவேல் அவர்கள் இது குறித்துக் கூறுகையில், கைதிகள் மிகவும் மனச்சோர்வுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
அனைவருக்கும் பொதுமன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாம் இருந்ததாகவும் ஆனால், நிலைமை தமக்கு வேதனை அளிப்பதாகவும் அவர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.