பாதுகாப்பு செயலாளராக தான் பதவியில் வகித்திராவிடின், போர் முடிவுக்கு வந்திருக்காது என்றும், சரத் பொன்சேகா இல்லாவிட்டாலும் கூட, தனது தலைமையில் போர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
“அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவின் ஏற்பாட்டில் அண்மையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தேன்.
பீ.பி ஜயசுந்தர, லலித் வீரதுங்க உள்ளிட்ட சிலர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். சிறிலங்கா அதிபருடன் தனித் தனியாகவே பேச்சுக்களை நடத்தினோம்.
சிறிலங்கா அதிபருடனான பேச்சுக்களில் ஜெனிவா விசாரணை தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மகிந்த ராஜபக்ச தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை.
ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு நாம் கோரவில்லை. ஆனால் இந்த விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் தெரிந்திருப்பது நல்லது தானே.
இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அது அரசியலாகவும் மாறலாம். இது அதிபரின் கைகளிலேயே தங்கியுள்ளது.
நான் இல்லாவிட்டால் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அத்துடன் சரத் பொன்சேகாவும் இல்லை.
சரத் பொன்சேகாவின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தாலும் எனது தலைமையில் போர் வெற்றிகொள்ளப்பட்டிருக்கும்.
ஆனால், நான் இல்லாவிட்டால் போரை வென்றிருக்க முடியாது.
அதிபர் மாளிகைக்குள் பதுங்கு குழி நிர்மாணித்தது இந்த நாட்டின் அதிபரின் பாதுகாப்புக்கே தவிர மகிந்த ராஜபக்ச என்ற தனி நபருக்காக அல்ல.
போர்க்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே இந்தப் பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டது.
முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகவும் தற்போதைய அதிபரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாளருமான மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் விக்கிரமசிங்க இந்தப் பதுங்கு குழியை அமைப்பதில் பிரதான பங்கு வகித்தார்.
விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவே இது அமைக்கப்பட்டது. இது புதிய விடயமல்ல.
இதேபோன்ற ஒரு பகுதி அலரி மாளிகையிலும் உள்ளது. லக்ஸ்மன் கதிர்காமரின் இல்லத்திலும் இது போன்றதொரு பகுதி இருந்தது.
இதனை அமைப்பதில் நானும் பங்களிப்பை வழங்கினேன். பாதுகாப்புத் தரப்பினரும் பங்களிப்பு வழங்கினார்கள். திருட்டுத்தனமாக இது மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது இந்த விடயத்தை அரசியலில் சேறு பூசும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
சரத் பொன்சேகாவுக்கு இது தெரியாது எனக் கூற முடியாது. ஏனென்றால் அதிபரின் பாதுகாப்பு தொடர்பில் அவருக்கும் கடப்பாடு இருந்தது.
கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவை சுற்றியிருந்த சிலரின் நடவடிக்கைகள் காரணமாகவே அவர் தோல்வி கண்டார். இன்று இவர்கள் ராஜபக்சக்களுக்கு எதிராகப் பேசுகின்ற னர்.
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காமையும் அவரது தோல்விக்கு வழி வகுத்தது” என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.