சாதாரணமாக நெற்பயிர் சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி வரை வளர்வதனையே நாம் இது வரை கண்டிருக்கின்றோம்.
ஆனால், அந்த பயிர் ஒரு மரம் போன்று, அதுவும் 12 அடிக்கும் மேல் வளர்ந்த ஒரு மரமாகக் காண்பது ஆச்சரியமானதல்லவா?
புத்தளம் மாவட்டத்தில் ஆனமடு கொட்டுக்கச்சி பிரதேசத்திலேயே இத்தகைய பிரமாண்ட நெற்பயிர் காணப்படுகிறது.
ஆனமடு கொட்டுக்கச்சி எத்துன்கொட கிராமத்தில் வசிக்கும் எம். தனபால என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இந்த நெற்பயிர் காணப்படுகிறது.
பரம்பரை விவசாயியான தனபால, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தனக்குக் கிடைத்த சில விதை நெற்களை தனது வீட்டுத் தோட்டத்தில் பதியம் போட்டிருந்தார்.
இந்த நெற்கதிர்கள் தினமும் வேகமாக வளர ஆரம்பித்தன. இவற்றிலிருந்து உருவான ஒரு நெற்பயிர் சுமார் 12 அடிகளுக்கும் அதிகமான உயரத்தில் வளர்ந்துள்ளது.
தான் தனது வாழ்நாளில் ஒரு போதும் இவ்வாறான உயரமான நெற்பயிரைக் கண்டதில்லை என கூறும் அவர், அந்த நெற்பயிரைப் பாதுகாப்பதற்கு தன்னால் இயன்ற முறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நெற்பயிர் மிகவும் செழிப்பாக நெல் கதிரிட்டுள்ளதால் அந்த நெற் கதிர்களை பறவைகளிடமிருந்து பாதுகாக்க வீட்டில் உள்ள நுளம்பு வலைகளை தனபால பயன்படுத்தி வருகிறார்.
தேசிய விதைகள் மற்றும் விவசாய வளங்களைப் பாதுகாக்கும் விவசாய சங்கத்தின் செயலாளர் யூ. எல். மைத்திரிபால இந்த பிரமாண்ட நெற்பயிர் பற்றி கருத்து தெரிவிக்கையில், “இந்த நெல் வகையானது “சுயமாக வளரும் நெல்” என அறியப்படும் ஒர் இனமாகும்.
இந்த நெற்பயிர் சுமார் நான்கு வருடங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பயன் தரக் கூடியது எனத் தெரிவித்தார்.
இந்த வகை நெல்லினை முன்னர் உணவுத் தேவைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் தற்காலத்தில் அந்த நெற்கள் பௌத்த பூஜைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
முந்தைய காலங்களில் இவ்வாறான நெல் மரங்களை பயிரிட அதிகளவிலான நீர் தேவைப்பட்ட போதிலும் தற்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.