“இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனைப் பிரபாகரன் செருப்பால் அடித்தார்” என்று, கடந்த வாரம் பல ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டிருந்தன.
எம்.கே.நாராயணன், பிரபாகரன் ஆகிய இரண்டு பெயர்களுமே பிரபலம் பெற்றவை என்பதுடன், இந்த இரண்டு பெயர்களுக்கும் இடையில் நீண்ட வரலாற்றுத் தொடர்பு உள்ளதும் கூட இந்தச் செய்தி கூடுதல் முக்கியத்துவம் பெறக் காரணம்.
ஆழ்வார்பேட்டை மியூசிக் அகடமி அரங்கில், கடந்த புதன்கிழமை இரவு இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை, “நீதாண்டா எல்லாத்துக்கும் காரணம்” என்று கூறியபடி, 35 வயதுடைய, அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் தாக்கியிருந்தார்.
இவரது பெற்றோர் 1973ஆம் ஆண்டில், மலையகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பியவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
எம்.கே.நாராயணன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும், இலங்கையில் நடந்தேறிய சம்பவங்கள் பலவற்றுக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல், பலரால் விமர்சிக்கப்பட்டும், கண்டிக்கப்பட்டும் உள்ள போதிலும், இன்னும் பலரால் உள்ளூர இரசிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனைப் பலரும் வெளிப்படுத்தவில்லை.
‘தி ஹிந்து’ நாளிதழ் ஒழுங்கு செய்திருந்த, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில், உரையாற்றி விட்டு வெளியேறும் போது தான், எம்.கே.நாராயணன் மீது சரமாரியான செருப்படி வீழ்ந்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதிகள் ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா போன்றவர்களும் கூட செருப்பு வீச்சுக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் அதிலிருந்து இலாவகமாகத் தப்பிக் கொண்டனர்.
எனினும், எம்.கே.நாராயணன், ஆணி செருகப்பட்ட செருப்பினால் சரமாரியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் தாக்கப்பட்டவர், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். அதைவிட நிறையவே சர்ச்சைகளுக்கும் உரியவர் அவர்.
இந்திய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் ஒருவருக்கு இணையான பதவி தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி.
2005ஆம் ஆண்டு தொடக்கம், 2010ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தவர் தாக்கப்பட்ட விவகாரத்தை, இந்தியாவின் பாதுகாப்புத் துறை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளாது.
அதேவேளை, இந்தச் சம்பவத்துக்கும், இலங்கை விவகாரத்துக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதாகத் தெரிகின்றன.
எம்.கே.நாராயணனுக்கும், இலங்கையின் கடந்த மூன்று தசாப்த கால வரலாற்றுக்கும் இடையில் நிறையவே தொடர்புகள் உள்ளன.
அதற்கு முன்னர் யார், இந்த எம்.கே. நாராயணன் என்று அறிய வேண்டும்.
கேரளாவின் பாலக்காடு, ஒட்டப்பாலத்தை பூர்வீகமாகக் கொண்ட, மாயன்கோட்டே கேளத் நாராயணன், தான் இந்த எம்.கே.நாராயணன்.
சென்னை லொயொலா கல்லூரியில் படித்து விட்டு, தமிழ்நாட்டில், பொலிஸ் சேவைக்குள் நுழைந்த இவர், 1959இல் இந்தியாவின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குள் (ஐ.பி.) உள்வாங்கப்பட்டார்.
ஐ.பி. அதிகாரி என்ற வகையில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய முன்னாள் பிரதமர்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன.
நேரு குடும்பத்தின் மீது தீவிர விசுவாசம் கொண்டவர் என்ற கருத்து இவர் பதவியில் இருந்த காலத்தில் தீவிரமாக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.
1987 முதல் 1990 வரை, ஐ.பி.யின் தலைவராக இருந்த இவர், பின்னர், புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
1991 தொடக்கத்தில், மீண்டும் ஐ.பி.யின் தலைவராக நியமிக்கப்பட்டு,1992 இல் ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர், 2004 மே மாதம், இந்தியப் பிரதமருக்கான உள்நாட்டுப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட இவர், 2005இல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
2010 வரை இந்தப் பதவியில் இருந்த எம்.கே.நாராணயன், பின்னர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வி.ஐ.பி.களின் பயணங்களுக்கான 10 ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டில் 330 கோடி ரூபா முறைகேடு நடந்திருப்பதாக, சி.பி.ஐ விசாரணைகளைத் தொடங்கியதும், இவர் ஆளுநர் பதவியை விட்டு விலகினார்.
தனது பதவிக்காலத்திலும், ஓய்வுகாலத்திலும் சர்ச்சைகளுக்குரிய மனிதராகவே எம்.கே.நாராயணன் இருந்திருந்தார்.
அவரது பல நடவடிக்கைகள், இந்தியாவின் தேசிய நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்று எடுத்துக் கொண்டாலும், இலங்கை விவகாரத்தில் அவரது செயற்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்குரியவையாகவே இருந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மத்தியில், எம்.கே.நாராயணன் விசனத்துக்குரிய ஒருவராகவே இருந்து வந்திருக்கிறார்.
அதற்குப் பிரதான காரணம், இலங்கை விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட முறை தான்.
பொதுவாகவே, இந்திய அரசாங்கத்தில் கேரளாவைச் சேர்ந்த மலையாளிகளான அதிகாரிகள் கூடுதல் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்து வருகின்றனர்.
சவுத் புளொக் எனப்படும், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகார வட்டத்தில், இவர்களின் ஆதிக்கமே அதிகம்.
இவர்களே இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்றனர் என்ற கருத்து, வலுவாகவே இருந்து வருகிறது.
புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக- -–நேரு குடும்பத்தின் விசுவாசியாக எப்போதும் இருந்த எம்.கே. நாராயணன், இலங்கைத் தமிழர் விவகாரங்களில், இந்தியாவின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் முக்கியமான ஒருவராக விளங்கியிருந்தார்.
“1987 இல் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கியது, இரண்டு தனி மனிதர்கள் தான்.
ஜே.என்.டிக் ஷித்தும், எம்.கே.நாராயணனும் தான் அவர்கள்” என்று ஏசியா ரைம்ஸ் நாளிதழில், சுதா இராமச்சந்திரன் 2004இல் எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது, ஜே.என். டிக் ஷித், கொழும்பில் இந்தியாவின் தூதுவராகப் பணியாற்றியிருந்தார். எம்.கே.நாராயணன், ஐ.பி.இன் தலைவராகப் பணியில் இருந்தார்.
ஜே.ஆரும், ராஜீவ்காந்தியும் செய்து கொண்ட இந்திய – இலங்கை உடன்பாட்டுக்குப் பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளுமாறு விடுதலைப் புலிகளை கட்டாயப்படுத்தியது இந்தியா. இதில் எம்.கே.நாராயணனின் பங்கு முக்கியமானது.
1987 ஜூலை 23 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சுதுமலையில் இருந்து அவசரமாக ஹெலிகொப்டர் மூலம், சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து புதுடில்லிக்கு கூட்டிச் செல்லப்பட்டார்.
அங்கு, உடன்பாட்டு வரைவை பிரபாகரனிடம் காட்டி அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் அதனை முழுமையாகப் படித்து, சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று ஜே.என்.டிக் ஷித் மிரட்டியிருந்தார்.
புதுடில்லி அசோக் ஹோட்டலுக்குள் வெளியுலகத் தொடர்புகளின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரபாகரனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தவர் அப்போது ஐ.பி.யின் தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் தான்.
இந்தச் சம்பவமே, பின்னாளில், ராஜீவ் காந்தி கொலைக்கு பிரதான காரணமாக இருந்தது என்ற தகவல்களும் முன்னர் வெளியாகியிருந்தன.
பின்னர், எம்.கே.நாராயணன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த போது, கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர், ரோபேர்ட் ஓ பிளேக், வொசிங்டனுக்கு அனுப்பிய ஒரு இராஜதந்திர தகவல் குறிப்பில், “எம்.கே.நாராயணன் விடுதலைப் புலிகள் எதிர்ப்புவாதி” என்று குறிப்பிட்டிருந்தார்.
“அவருக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காது. பக்கச் சார்பாக நடந்து கொண்டவர். அவர் நடுநிலை வகிக்கவில்லை” என்று ரொபேட் ஓ பிளேக் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.
இது, விடுதலைப் புலிகள் விடயத்தில், எம்.கே நாராயணன் கொண்டிருந்த நிலைப்பாடு என்னவென்பதை புரிய வைத்திருக்கும்.
1990இல், தமிழ்நாட்டில் பதவியில் இருந்த தி.மு.க ஆட்சி கலைக்கப்படுவதற்கு எம்.கே.நாராயணன் தான் காரணமாக இருந்தார். அப்போதும், ஐ.பி.யின் தலைவராக இவர் பதவியில் இருந்தார்.
கருணாநிதி அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக இவர் கொடுத்த அறிக்கை தான், அப்போது ஆட்சிக் கலைப்புக்கு காரணமாயிற்று.
இதனால், 2005ஆம் ஆண்டு, ஜே.என்.டிக்சிற்றின் மரணத்துக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணனை நியமிக்க, மன்மோகன்சிங் அரசாங்கம் முனைந்த போது, அந்தக் காலகட்டத்தில் மத்திய அரசில் செல்வாக்குப் பெற்றிருந்த கருணாநிதி அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
எனினும், கருணாநிதியின் மருமகனும், அப்போது புதுடில்லி விவகாரங்களைக் கையாண்டவருமான முரசொலி மாறனை கைக்குள் போட்டுக் கொண்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை எம்.கே.நாராயணன் பெற்றுக் கொண்டதாக ஒரு செய்தி அப்போது உலாவியது.
காங்கிரஸ் அரசைக் காப்பாற்றுவதற்காக, தி.மு.க.வை சிக்கவைப்பதிலும், நெருக்கடிக்குள்ளாக்குவதிலும், எம்.கே. நாராணயன் அவ்வப்போது பல திருகுதாளங்களை மேற்கொண்டு வந்ததாக, தி.மு.க வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
முல்லைப் பெரியாறு விவகாரம், கனிமொழியை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்திய விவகாரம், தயாநிதி மாறனை வெளியேற்றிய விவகாரம் ஆகியவற்றில் இவரது பங்கை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அதேவேளை, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி என்று என்று நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலுக்கு துணைபோகின்ற ஒருவராகவே இருந்து வந்த எம்.கே.நாராயணன், ராஜீவ்காந்தி கொலை வழக்கின் முக்கிய ஆதாரம் ஒன்றை மறைத்தவர் என்ற குற்றச்சாட்டையும் எதிர்நோக்க நேரிட்டது.
சி.பி.ஐ.இன் முன்னாள் அதிகாரியான கே.ரகோத்தமன் தான் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்த கே.ரகோத்தமன், ஓய்வுபெற்ற பின்னர் எழுதிய “ராஜீவைக் கொல்ல நடந்த சதி: சி.பி.ஐ. ஆவணங்களில் இருந்து’ ,(Conspiracy to kill Rajiv Gandhi – From CBI files) என்ற நூலிலேயே இந்தப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் கூட்டத்தில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட அடுத்த நாள், ஐ.பி.யின் தலைவராக இருந்த எம்.கே. நாராயணன், அப்போதைய இந்தியப் பிரதமர் சந்திரசேகருக்கு வீடியோ ஆதாரம் தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ராஜீவ் காந்தி பங்கேற்ற கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக இருந்தன. அங்கு தடுப்புகள் சரியாக அமைக்கப்படவில்லை.
பொதுமக்கள் பகுதியிலிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு யாரும் வருவதற்கு வாய்ப்புகள் இருந்தன.
கொலையாளி (தனு) பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு, ராஜீவ் காந்தி வரும்போது தான் வந்தாரா அல்லது அவரைவரவேற்க நின்றிருந்தவர்களுடன் ஏற்கனவே இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை.
இது தொடர்பான வீடியோ ஆதாரம் இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அந்த கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன” என்று அந்தக் கடிதத்தில் எம்.கே.நாராயணன் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த வீடியோஆதாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் எம்.கே. நாராயணன் தகவல் தெரிவிக்கவில்லை” என்று ரகோத்தமன் குற்றம்சாட்டியிருந்தார்.
வர்மா ஆணைக்குழுவின் ஆவணங்களில் இருந்து இந்தக் கடிதத்தைக் கண்டெடுத்து அவர் தனது புத்தகத்தில் இணைத்துள்ளார்.
இந்த வீடியோ ஆதாரத்தை மறைத்தது தொடர்பாக எம்.கே. நாராயணன் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியது.
ஆனால், குழுவின் தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன் இந்த விசாரணையை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் ரகோத்தமன் தெரிவித்திருந்தார்.
ஆனால்,‘எந்த வீடியோவையும் நான் மறைக்கவில்லை. புத்தகம் பரபரப்பாக விற்பனையாவதற்காக இவ்வாறு எழுதியிருக்கலாம்’ என்று எம்.கே. நாராயணன் அதனை மழுப்பி விட்டார்.
எம்.கே.நாராயணன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில் தான், விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் முற்றாக அழித்தது.
அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியவர், எம்.கே.நாராயணன்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, எழும் பிரச்சினைகளைக் கையாள இலங்கையிலும், இந்தியாவிலும் மூவர் அணிகள் அமைக்கப்பட்டன.
இலங்கையில் பசில் ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ, லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட மூவரணி அமைக்கப்பட்டது.
அதுபோல, இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே நாராயணன், வெளிவிவகாரச் செயலராக இருந்த சிவசங்கர் மேனன், பாதுகாப்புச் செயலராக இருந்த விஜய் சிங் ஆகியோரைக் கொண்ட மூவரணி அமைக்கப்பட்டது.
இந்த மூவரணி, போரை திட்டமிட்ட வகையில் முடிப்பதற்கு ஏற்படும் இடையூறுகளை களைவதில் முக்கிய பங்காற்றியது என்பதை, பசில் ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக் ஷவும் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, 2009 ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் எம்.கே.நாராணயன் கொழும்பு வந்து பேச்சு நடத்தினார்.
போர்நிறுத்தத்தை அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போரை நிறுத்துவதற்குப் பதிலாக, போரை முடித்து வைப்பது குறித்தே பேசி விட்டுச் சென்றார்.
அதற்குப் பின்னர் தான், முள்ளியவாய்க்காலில் பேரனர்த்தங்கள் அரங்கேறின.
எம்.கே.நாராணயனுக்கும் இலங்கை விவகாரங்களுக்கும் இடையிலான தொடர்பு இவ்வளவு தான் என்று கூற முடியாது.
ஒரு புலனாய்வு அதிகாரியாக அவர் இந்தியாவின் நலனை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டதாகவும் கூற முடியாது.
ஏனென்றால், அமெரிக்காவில் பிடிபட்ட மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஒருவரை தனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் எதிர்கொண்டிருந்தார்.
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளையும் சுமந்தவர் எம்.கே.நாராயணன்.
இந்தச் சர்ச்சைகளால் கிடைத்த பிரபலத்தை விட, பிரபாகரன் என்ற இளைஞரால் அவர் தாக்கப்பட்டார் என்பது தான் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-சுபத்ரா