இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை திருப்பித் தரக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசிக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், 105 கேரட் எடை கொண்டது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், பிரிட்டன் அரசர் நான்காம் ஜார்ஜ் காலத்திலிருந்து ( 1937-ம் ஆண்டு முதல்) பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது.

தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மணி மகுடத்தில் கோகினூர் வைரம் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு முதல் அவரது கிரீடத்தில் கோகினூர் வைரம் இடம் பெற்றுள்ளது. தற்போது பிரிட்டன் அரசுரிமை பொருளாகவும் இந்த வைரம் உள்ளது.

ஒரு காலத்தில் உலகிலேயே மிகப் பெரிய வைரமாக கோகினூர் கருதப்பட்டது. இதன் மதிப்பு 100 மில்லியன் பவுண்டுகள் கிட்டத்தட்ட( ரூ. 8 ஆயிரம் கோடி ) இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு பல கட்டமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட சிலர் இணைந்து ‘மலைகளின் வெளிச்சம்’ என்ற பெயரில் ஒரு குழுவைத் தொடங்கி, கோகினூர் வைரத்தை இந்தியா கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்காக லண்டன் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. கலாச்சார பொருட்களை திருப்பி அளிப்பது தொடர்பான சர்வதேச விதிகளின் படி, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மீது வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாலிவுட் நட்சத்திரம் பவுமிகா சிங் கூறுகையில், ”கோகினூர் வைரம் வெறும் 105 கேரட் கல் மட்டுமல்ல. இந்தியாவின் கலாச்சாரத்துடன் தொடர்புடையது. கண்டிப்பாக இந்த வைரக்கல் இந்தியாவுக்கு திருப்பி கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.

ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொல்லூர் என்ற இடத்தில் கி.பி.13-ம் நுற்றாண்டில் இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. முதலில் காகதிய பேரரசுக்கு சொந்தமாக இருந்தது.

கடைசியாக இந்த வைரம், பஞ்சாப்பை ஆண்ட துலீப் சிங் என்ற மன்னரால், பிரிட்டிஷாரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 1997-ம் ஆண்டு, இந்தியா சுதந்திரமடைந்த பொன் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியா வருகை வந்தார். அந்த சமயத்தில் கோகினூர் வைரம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் ஒப்படைக்கப்படவில்லை.

தொடர்ந்து 2013-ம் ஆண்டு இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரான், ”கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பது முரண்பாடான விஷயமாக இருக்கும் ” என்று தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.makaraniaa

Share.
Leave A Reply