இலங்கையின் இனப் பிரச்சினையை மிகவும் நியாயமான முறையில் தீர்க்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பமான 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் ஏன் தோல்வியடைந்தன என்பதைப் பற்றிய சில முக்கிய விடயங்கள் கடந்த மாத இறுதியில் இலண்டனில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஆராயப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலும் நடத்தாமல், வட பகுதியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் கையளிக்கவிருந்தார் என்ற, இதுவரை எவரும் அறிந்திராத தகவல் ஒன்றும் அக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

erii1-480x400

“ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள்”  என்ற பெயரில் பிரிட்டிஷ் ஊடகவியலாளரும் நூலாசிரியருமான மார்க் ஸோல்ட்டர் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு வைபவம் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மற்றும் ஆபிரிக்கக் கற்கைகளுக்கான கல்லூரியின் புரூனய் கௌரி லெக்ச்சர் தியட்டர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இக்கருத்து வெளியிடப்பட்டது.

இக் கருத்துக்களை வெளியிட்டவர், இலங்கையர்கள் அறியாதவர் அல்லர். நோர்வே நாட்டின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சரும், 2002ஆம் ஆண்டு இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட போது நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவராகச் செயற்பட்டவருமான எரிக் சொல்ஹெய்மே இக் கருத்துக்களை வெளியிட்டவர்.

mahinthaராஜபக்ஷ, புலிகளிடம் வட மாகாணத்தை ஏன் கையளிக்கவிருந்தார் என்பதற்கான காரணமொன்றையும் சொல்ஹெய்ம் அங்கு குறிப்பிட்டிருக்கிறார்.

நீண்ட காலமாகத் தொடர்ந்து இழுபட்டுச் செல்லும் சமாதானப் பேச்சுவார்த்தைகளினால், தென் பகுதியில் தமது செல்வாக்குக் குறையும் என்பதனாலேயே மஹிந்த இந்த முடிவுக்கு வந்திருந்தார் என அவர் கூறுகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ, வட மாகாணத்தைப் புலிகளிடம் கையளிக்கத் தீர்மானித்ததாகக் கூறும் போது, சொல்ஹெய்ம் இராஜதந்திர மரபுகளுக்குப் புறம்பான வார்த்தைகளையும் இங்கு வெளியிட்டு இருந்தார்.

‘பிரபாகரனை அங்கு தலைவராக்க, பின் கதவினூடாக ஒரு கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட ராஜபக்ஷவுக்கு அவசியமாகியது.

அவர், சிங்களவரின் மகா பாதுகாவலனாகத் தம்மைக் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் தமது இருப்புக்காகவும் தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் எந்த அசிங்கமான செயலிலும் ஈடுபடத் தயாராகவும் இருந்தார்’ என சொல்ஹெய்ம் அந்தக் கூட்டத்தில் கூறியிருந்தார்.

Ranilமஹிந்த ராஜபக்ஷ, புலிகளுக்குப் பணம் வழங்கியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உரையொன்றின் போது குற்றஞ்சாட்டி ஓரிரு தினங்களிலேயே சொல்ஹெய்ம் – புலிகளிடம் ராஜபக்ஷ வட மாகாணத்தைக் கையளிக்கவிருந்தார் என்று கூறியிருக்கிறார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தம்மைத் தோற்கடிக்கும் நோக்கில் வட மாகாணத்தில் தேர்தல் பகிஷ்கரிப்பொன்றை ஏற்பாடு செய்வதற்காக ராஜபக்ஷ, புலிகளுக்கு பணம் வழங்கினார் என பிரதமர் கூறியிருந்தார்.

அதேவேளை, அந்த விடயத்தில் இடைத் தரகராகச் செயற்பட்ட புலிகளின் முன்னாள் சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவனின் உயிரைப் பாதுகாக்க, இறுதிப் போரின் போது அவருக்கு வெள்ளைக் கொடி ஏந்தி அரச படைகளிடம் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் பிரதமர் தமது உரையில் கூறியிருந்தார்.

புலிகளுடனான இந்தப் பணக் கொடுக்கல் – வாங்கலை முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையோடும் பிரதமர் சம்பந்தப்படுத்திப் பேசியிருந்தார்.

இதற்கு முன்னரும் புலிகளுக்கு மஹிந்த பணம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தது. 2005ஆம் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவுக்காக வெகுவாகப் பாடுபட்ட முன்னாள் பிரதி அமைச்சசர் காலஞ்சென்ற ஸ்ரீபதி சூரியாராச்சியும் பின்னர் மஹிந்தவிடமிருந்து பிரிந்து நாடாளுமன்றத்தில் இதனைக் கூறியிருக்கிறார்.

மஹிந்தவின் தேவைக்காக தாமே புலிகளுக்குப் பணம் வழங்கும் விடயத்துக்காக தூது சென்றதாகச் சூரியாரச்சி கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில், புலிகளிடம் மஹிந்த வட மாகாணத்தைக் கையளிக்கவிருந்தார் என்றதோர் பாரதூரமான குற்றச்சாட்டைச் சொல்ஹெய்ம் சுமத்தியிருக்கும் நிலையில் மஹிந்தவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ அதற்குப் பதிலளிக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர்கள் எவரும் பதிலளிக்கவில்லை.

சமாதான பேச்சசுவார்த்தைகள் நடைபெற்ற காலத்திலும் அதற்கு பின்னரும் சொல்ஹெய்ம், புலிகளுடனும் இலங்கை அரச தலைவர்களுடனும் மிக நெருக்கமாகப் பழகியவர்.

எனவே, அவர் வெளியிட்டு இருக்கும் இக்கருத்துக்களை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும். அதேவேளை, மஹிந்த – அரசியல் நம்பகத்தன்மையற்றவர் என்று சர்வதேச ரீதியில் ஓர் அபிப்பிராயம் இருக்கும் நிலையிலும், சொல்ஹெய்மின் கூற்று உண்மையாக இருக்குமோ எனப் பலர் நினைக்கலாம்.

பின் கதவூடாக அநாகரிகமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒன்றும் அரசியலில் புதிய விடயம் அல்ல.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, புலிகளுக்கு ஆயுதங்களையும் பணமும் சீமெந்தும் வழங்கினார் என்பது இப்போது சகலரும் அறிந்த கதையாகிவிட்டது.

இந்திய அரசாங்கம், 1980களில் புலிகள் உட்பட பல தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம், பணம் மற்றும் ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்கியது.

இந்திய உளவு நிறுவனமான றோ அமைப்பு இந்தியப் படைகளுக்கு எதிராகப் போராடிய அஸ்ஸாம் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவே, ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன் போராளிகளை உருவாக்கியது. தாலிபான்களை பாகிஸ்தான் உருவாக்கியது என்பதும் இரகசியமல்ல. எனவே, மஹிந்தவும் பின்கதவு அரசியலில் ஈடுபட மாட்டார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியலில் சூழ்ச்சிக்காரர் தான். அதேவேளை, அவர் பல விடயங்களில் பிழைவிட்டார். போர் முடிவடைந்தும் தமிழ் மக்களை வென்றெடுக்க அவர் முயற்சிக்கவில்லை.

தமிழ்த் தலைவர்கள், இராணுவ ஆளுநருக்குப் பதிலாக, சிவிலியன் ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதனை மிக எளிதாக செய்ய முடிந்திருந்தும் அவர் அதனையாவது செய்யவில்லை.

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த போதும் அவரது ஆட்சியின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகப் பெறப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீளளிக்கும் பணி மிக மந்த கதியிலேயே நடைபெற்றது.

மதத் தீவிரவாதிகள், சிறுபான்மை மதத்தவர்களின் புனிதத் தளங்களைச் சேதப்படுத்தும் போதும் அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுக்கும் போதும் அவர் அந்தத் தீவிரவாதிகளின் பக்கமே இருந்தார்.

இதனால் 2005ஆம் ஆண்டும் 2010ஆம் ஆண்டும் ஜனாதிபதித் தேர்தலின் போது தம்மை ஆதரித்த முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டார்.

சிறுபான்மையினர் விடயத்தில் சர்வதேச சமூகத்துக்குப் பல வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை மீறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவையும் உதலாகம குழுவையும் நியமித்து அவற்றின் அறிக்கைகளை பல வருடங்களாக மறைத்து வைத்திருந்தார்.

திருகோணமலை மாணவர்கள் படுகொலை மற்றும் மூதூரில் தொண்டர் நிறுவன ஊழியர்களின் படுகொலை ஆகியவற்றை விசாரிப்பதாக சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதியளித்துவிட்டு அந்த வாக்குறுதியை மீறினார். இவற்றால் அவர் சர்வதேச சமூகத்தைப் பகைத்துக் கொண்டார்.

இதுபோன்ற அரசியல் தவறுகளை செய்தாலும் சொல்ஹெய்ம் கூறுவதைப்போல் மஹிந்த – தேர்தலின்றி வட பகுதியைப் பிரபாகரனிடம் கையளிக்கவிருந்தார் என்பதை நம்ப முடியாது.

போருக்குப் பின்னர் ஆயுதம் ஏந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அதிகாரம் செல்லும் என்பதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவை வற்புறுத்தும் வரை வட மாகாண சபைத் தேர்தலைப் பல ஆண்டுகளாக தள்ளிப் போட்டு வந்த மஹிந்த, தேர்தலே இல்லாமல் தமிழ் ஆயுதக் குழுவொன்றிடம் வட மாகாணத்தைக் கையளிக்கவிருந்தார் என்பதை எவ்வாறு நம்ப முடியும்?

சொல்ஹெய்மிடம் மஹிந்த அவ்வாறு கூறியிருந்தாலும் அது முன்னுக்குப் பின் முரணான கருத்தாக இருக்கிறது.

நீண்ட காலமாக தொடர்ந்து இழுபட்டுச் செல்லும் சமாதானப் பேச்சுவார்த்தைகளினால் தென் பகுதியில் தமது செல்வாக்குக் குறையும் என்பதனாலேயே மஹிந்த இந்த முடிவுக்கு வந்திருந்தார் என்று சொல்ஹெய்ம் கூறுகிறார்.

தேர்தலே இல்லாமல் வட மாகாணத்தைப் பிரபாகரனிடம் கையளித்தால் தென் பகுதியில் அவரது செல்வாக்குக் குறையாமல் இருக்குமா என்பதைச் சொல்ஹெய்ம் நினைத்துப் பார்க்கவில்லைப் போலும்.

சொல்ஹெய்ம் தமது உரையின் போது ‘பின் கதவினூடாக’, ‘அசிங்கமான செயல்’ போன்ற இராஜதந்திர உறவுகளின் போது பிரயோகிக்கப்படாத சொற்களைப் பிரயோகிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

போர்க் காலத்தில் அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான சந்திப்புக்ககள் அவ்வளவு நட்பு ரீதியானவையல்ல.

இந்துப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம், 2009ஆம் ஆண்டு மஹிந்தவுடன் நடத்திய பேட்டியொன்றின் போது அங்கிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க குறுக்கிட்டுக் கூறிய ஒரு கதை அதற்கு சான்றாகிறது.

‘2006ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் ஜனாதிபதியை சந்தித்த சொல்ஹெய்ம் வேறு பல விடயங்களைக் கூறும் போதே, பிரபாகரன் ஓர் இராணுவ மேதாவி, நான் அதனை நடைமுறையில் பார்த்திருக்கிறேன்’ என்றும் கூறினார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, ‘அவர் வட பகுதி காட்டிலிருந்து வந்தவர், நான் தென் பகுதி காட்டிலிருந்து வந்தவன். யார் வெல்லப் போகிறார் என்று பார்ப்போம்’ என்றார்.

பின்னர் ஜனாதிபதி, சொல்ஹெய்மை நியூயோர்க் நகரில் சந்தித்த போது அந்தப் பழைய சந்திப்பை ஞாபகப்படுத்தினார். இராணுவ மேதாவி, வட பகுதிக் காடு, தென் பகுதிக் காடு போன்ற வார்த்தைகளையும் நினைவூட்டினார்.

அப்போது கிழக்கு மாகாணம் அரச படையினரால் கைப்பற்றப்பட்டு இருந்தது. இனி வடக்கில் என்ன நடக்கப் பேகிறது என்று பார்க்கலாம்’ என்றும் ஜனாதிபதி கூறினார்.

இது தான் லலித் வீரதுங்க கூறிய கதை. அந்த நிலையில் தான் இராஜதந்திர மரபுக்கு முரணான சொற்கள் சொல்ஹெய்மிடம் இருந்து வந்துள்ளன.

உண்மையிலேயே வட மாகாணத்தை தேர்தலின்றியே பிரபாகரனிடம் கையளிக்கத் தயார் என பகிரங்கமாகவே கூறியவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே.

பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிடுவதாக இருந்தால் தாம் தேர்தலின்றியே 10 வருடங்களுக்கு வட மாகாணத்தை அவரிடம் கையளிக்கத் தயார் என அவர் கூறியிருந்தார். அவரது முதலாவது பதவிக் காலத்தில் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் பின்னர் தான் அவர் இக் கருத்தை வெளியிட்டு இருந்தார்.

வட மாகாணத்தைப் பிரபாகரனிடம் கையளிக்கும் மஹிந்தவின் இந்தத் ‘திட்டத்தை’ பற்றிப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அம்பலப்படுத்தும் அளவுக்கு சொல்ஹெய்ம் அத்திட்டத்தைப் பாரதூரமாக எடுத்திருந்தால் சமாதானத் திட்டத்துக்கு நடுவர்களாக வந்த நோர்வேக்காரர்களுக்கு இலங்கையின் தலைவர்களைப் பற்றியோ அல்லது இலங்கையின் நிலைமையைப் பற்றியோ தெளிவு இருக்கவில்லை என்பதை அது எடுத்துக் காட்டுகிறது. சமாதானத் திட்டம் தோல்வியடைவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

அவர்களிடம் இலங்கையின் நிலைமையைப் பற்றி சரியான தெளிவு இருக்கவில்லை என்பதை மேற்படி நூல் வெளியீட்டு விழாவின் போது சொல்ஹெய்ம் வெளியிட்ட மற்றொரு கருத்தும் எடுத்துக் காட்டுகிறது.

ஐ.தே.க மற்றும் ஸ்ரீல.சு.க ஆகியவற்றுக்கிடையே நிலவிய முறுகல் நிலை கரணமாகவே சமாதானத் திட்டம் தோல்வியடைந்ததாக அவர் அங்கு கூறியிருந்தார்.

chandrika_2இது பிழையான கருத்தாகும். ஐ.தே.க அரசாங்கத்தின் சமாதானத் திட்டத்தில் பல அம்சங்களை விமர்சித்த போதிலும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா, சமாதானத் திட்டத்துக்கு இடையூறு விளைவிக்கவில்லை.

2002ஆம் ஆண்டு நவம்பர்- டிசெம்பர் மாதங்களில் நோர்வே தலைநகர் ஒஸ்லொவில் நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது, புலிகளும் அரச பிரதிநிதிகளும் சமஷ்டி முறையின் கீழ் தீர்வொன்றைக் காண்பதென முடிவு செய்தனர்.

அந்தளவு பாரதூரமான இணக்கப்பாட்டையும் எதிர்க்காத சந்திரிகா, 2000ஆம் ஆண்டு நகல் அரசியலமைப்பொன்றின் மூலம் தாமே முதன் முதலில் சமஷ்டி முறையை பிரேரித்தவர் என அப்போது கூறினார்.

ஐ.தே.க -ஸ்ரீல.சு.க முறுகல் காரணமாக சமாதானத் திட்டம் தோல்வியடைந்தாக கூறும் சொலஹெய்ம், ‘2002ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசீர்வாதத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், புலிகளுடன் பேசத் தயாராக இருந்த போதிலும் பிரபாகரனின் தவறினால் அச் சந்தர்ப்பம் கைநழுவிவிட்டதாக’ கூறுகிறார். இது முன்னுக்குப் பின் முரணானது.

சமாதானத் திட்டம் தோல்வியடைவதற்கு பிரபாகரனின் சுபாவம் காரணமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார். ‘பிரபாகரனிடம் சரியான நோக்கு இருக்கவில்லை, எடுத்ததற்கெல்லாம் வன்முறையே அவரது பதிலாக இருந்தது.

புலிகளில் பாலசிங்கம் மட்டுமே சர்வதேச நிலைமைகளை அறிந்திருந்தார். சரியான தகவல்களின்றி தனிமையில் இருந்த ஒரு தளபதி தனியாக சகல முடிவுகளையும் எடுத்தார். இதுவே புலிகளின் வீழ்ச்சிக்கு காரணமாகியது’ என்று சொல்ஹெய்ம் கூறுகிறார்.

இதே கருத்தை, புலிகளின் முன்னாள் அம்பாறை, மட்டக்களப்பு சிறப்புத் தளபதியும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியொன்றின் போது கூறியிருக்கிறார்.

‘பிரபாகரன் நல்லவர். ஆனால், அவர் உலகமயமாக்கலைப் பற்றி அறிவிருக்கவில்லை’ என அவர் கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் அழிவுகளின்றி இலங்கைக்கு சமாதானத்தைக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட 2002 ஆம் ஆண்டு சமாதானத் திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதைப் பற்றி சிந்திக்க இக் கருத்துக்களில் பல உதவலாம்.

-எம்.எஸ. எம். ஐயூப்-

Share.
Leave A Reply