போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில் ஒருவரை ராஜ மரியாதையுடன் ஒரேநாளில் உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும், அன்று மாலையே அதிகாரம் பறிக்கப்படுவதும் புதிதல்ல.
கார்டனுக்குள் ஒருகாலத்தில் கோலோச்சிய திவாகரன், மகாதேவன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், ராஜராஜன், குலோத்துங்கன், டாக்டர்.வெங்கடேஷ், நடராஜன் போன்றவர்கள் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. இருப்பினும், என்றாவது ஒருநாள் கார்டன் கதவு திறக்கும் என்ற நம்பிக்கைதான் அவர்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
அப்படி அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நபர்… விவேக் ஜெயராமன்! சசிகலா குடும்பத்திலேயே தற்போது கார்டனுக்குள் கோலோச்சும் ஒரே ஆண் வாரிசு இவர்தான் என்கிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் புயலை வீசிய ஜாஸ் சினிமாஸ் விவகாரத்தின் தொடக்கப்புள்ளியே இந்த விவேக்தான். இதுபற்றி அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, “ ‘ஜாஸ்’ நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசியின் மகன் விவேக்.
அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால், அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது? சசிகலா குழுவினரின் ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அதற்கான பணம் எங்கிருந்து, யாரால், கிடைத்தது?” என கேள்வி மேல் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்தோ, ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ. விவேக்கிடமிருந்தோ எந்த பதிலும் இதுவரை இல்லை. நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வரும்போதும் சரி, போயஸ் கார்டனுக்குள் பிரதமர் மோடி வரும்போதும் சரி…சசிகலா உடன் இருந்தவர் இந்த விவேக் மட்டும்தான். அந்தளவுக்கு அம்மாவின் ‘குட்புக்’கில் இடம் பிடித்திருக்கிறார் 29 வயதான விவேக்.
யார் இந்த விவேக்?
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் தனித்துவிடப்பட்ட ஜெயராமனின் மனைவி இளவரசி மூன்று குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருந்தார். அப்போது கைக்குழந்தையாக இருந்தவர் விவேக். அப்போதுதான், ‘தனியா கஷ்டப்பட வேண்டாம். என்கூடவே இரு’ என இளவரசியை ஜெயலலிதா அழைத்துக் கொண்டார்.
பள்ளிப் படிப்பு முடித்த விவேக், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் சென்றார். பி.பி.ஏ. ஃபைனான்சியல் அக்கவுண்ட்ஸ் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார்.
ஆனால், கார்டனுக்குள் வராமல் புனேவில் எம்.பி.ஏ படிப்பை தேர்வு செய்து படித்துக் கொண்டிருந்தார். எந்த இடத்திலும் ஜெயலலிதாவைப் பற்றி அவர் சொன்னதே இல்லை. தான் யார் என்பதையே காட்டிக் கொள்ளாமல்தான் வளர்ந்தார்.
எம்.பி.ஏ படிப்பு முடிந்ததும், கல்கத்தாவில் உள்ள ஐ.டி.சி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். மார்க்கெட்டிங் பிரிவில் அவர் செய்த முதல் வேலை சிகரெட் விற்பனை! எந்தச் சுணக்கமும் இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பெங்களூரு ஐடிசி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிந்தார்.
இந்த நேரத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறைக்குள் அடைப்பட்டுக் கிடக்க, மருந்து, மாத்திரை உள்ளிட்டவற்றைக் கொடுக்க நம்பிக்கையான ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.
வெளி ஆட்களை நம்பி இந்தப் பொறுப்புகளை ஒப்படைக்கவும் முடியாது. இக்கட்டான நிலையில், ‘விவேக் எங்கே?’ என ஜெயலலிதா கேட்க, ‘பெங்களூருலதான்மா வேலை பார்த்துட்டு இருக்கான்’ என இளவரசி சொல்ல, உடனே அழைக்கப்பட்டார் விவேக்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குள் எந்த சிரமமும் இல்லாமல் போய் வந்து கொண்டிருந்தார் விவேக். இந்த விவரம் தெரிந்தவர்கள் ஓ.பன்னீர் செல்வமும், கார்டன் நிர்வாகி பூங்குன்றன் ஆகியோர் மட்டும்தான்.
அந்த நேரத்தில் மூத்த அமைச்சர் ஒருவர், “யாருப்பா நீ… உள்ளே போய்ட்டு வர?” என எகிற ஆரம்பிக்க, அருகில் இருந்த பன்னீர்செல்வம் விவரத்தைச் சொல்ல, அப்படியே அடங்கிப் போனாராம் அந்த அமைச்சர்.
ஜெயலலிதா சிறையிலிருந்து இருந்து திரும்பியதும் மீண்டும் ஐடிசி கம்பெனி வேலைக்கே சென்றுவிட்டார் விவேக். “எங்கே விவேக்கை காணோம்… என்ன பண்றான்?” என ஜெயலலிதா கேட்க, “பெங்களூருலதான்மா வேலை பார்த்துட்டு இருக்கான்” என இளவரசிச் சொல்ல, அதிர்ச்சியடைந்த ஜெயலலிதா, “அதெல்லாம் இனி வேண்டாம்.
இங்க உடனே வரச் சொல்லு” என கட்டளையிட்டிருக்கிறார். கார்டனுக்குள் வந்த விவேக்குக்கு கொடுக்கப்பட்ட பதவி ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ.
இதன்பிறகு கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் அமர்ந்த விவேக், அடுத்துடுத்து செய்த காரியங்கள்தான் தமிழக அரசியலில் ஹாட்-டாபிக் ஆக மாறியது.
ஆனால், பீனிக்ஸ் மாலில் உள்ள தியேட்டர்கள் உள்பட வாங்கப்பட்ட அனைத்தும், லீஸ் அடிப்படையில் வாங்கியதாக கணக்குகள் தயார் செய்யப்படுகின்றன.
“எந்த சூழ்நிலையிலும் நமக்குப் பிரச்னை வராது. சொத்து வாங்கினால்தான் பிரச்னை வரும். தியேட்டரில் உள்ள பொருட்களைக் கணக்குக் காட்டி, பேங்க் லோன் வாங்கலாம்” என யோசனை சொன்னார் விவேக். எக்கு தப்பாக எதையாவது செய்து மாட்டிக் கொள்ளும் சசிகலா வகையறாக்களில் புத்திசாலியாகத் தெரிந்தார் விவேக்.
வங்கியில் வாங்கப்பட்ட கடன்களுக்கு மாதம் வட்டி மட்டும் 1.25 கோடி ரூபாய். இதுவரையில் நான்கு மாத வட்டியைக் கட்டியிருக்கிறார்கள். கிண்டியில் உள்ள ஜாஸ் அலுவலகத்தில் மட்டும் 450 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கான உணவும் அங்கேயே தயார் செய்யப்படுகிறது.
கட்சிக்காரர்கள், கரை வேட்டி கட்டியவர்கள் என யாருக்கும் அங்கே அனுமதியில்லை. தான் யார் என்பதையே காட்டிக் கொள்ளாமல் மவுனமாக கார்டனுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறார் விவேக். ‘ஜெயலலிதாவுடன் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஒரே மன்னார்குடி வாரிசு விவேக்தான்’ என்கிறார் கார்டன் உதவியாளர் ஒருவர்.
கிண்டியில் அலுவலகம் திறந்ததும் உள்ளூர் ரவுடி ஒருவர், “யார் இங்க கம்பெனி வச்சாலும் எனக்கு மாசம் 50 ஆயிரம் மாமூல் தரணும். இனி மாசா மாசம் எனக்குப் பணம் கொடுத்துடுங்க” என மிரட்டல் தொனியில் பேச, இறுதி வரையில் தான் யார் என்பதை விவேக் சொல்லவில்லை. ஒருகட்டத்தில், விவேக் யார் எனத் தெரிந்ததும், காலில் விழப் போய்விட்டார் அந்த ரவுடி. “அய்யா சாமி தெரியாம உள்ள வந்துட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க” என கதறினாராம்.
ஆயிரம் கோடி ரூபாய்க்கு தியேட்டர்கள் விலை பேசப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்க, அதுபற்றியே கண்டுகொள்ளாமல் விவேக்குக்கு திருமணம் முடிக்கும் முயற்சியில் இருக்கிறாராம் ஜெயலலிதா.
இதற்காக பெண் பார்க்கும் படலத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சொந்தத்தில்தான் பொண்ணு பார்க்கணும் என இளவரசி சொல்ல, இன்னும் இரண்டு மாதத்தில் விவேக் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என உறுதியாக இருக்கிறார் ஜெயலலிதா. அதாவது ஆட்சியில் இருக்கும்போதே கண்குளிர விவேக் திருமணத்தைக் காண வேண்டும் என விரும்புகிறார் ஜெயலலிதா.
ஐ.டி.சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம்தான் விவேக்கை தேர்ந்த தொழிலதிபர் போலச் செயல்பட வைக்கிறது என்கிறார்கள். அப்படி எந்தப் பதற்றமும் இல்லாமல் தொழிலைக் கையாளும் விதம், அணுகுமுறை போன்றவைதான் ஜெயலலிதாவைக் கவர்ந்ததாகச் சொல்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில்.
ஆக, இப்போதைக்கு கார்டனில் விவேக்கின் விவேக ராஜ்ஜியம்தான்!
– ஆ.விஜயானந்த்