பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் தொடர்பாக தந்தை, மகன் ஆகிய இருவரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்டை நாடான பெல்ஜியத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி தலைமறைவாகிவிட்டார்.

அவரை பிடிக்க இரு நாட்டு போலீசார் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை படையை சேர்ந்த 7 தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

இதில் 150க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 6 பேர் தங்கள் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஒருவனை மட்டும் போலீசார் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகளின் கைவிரல் ரேகைகளை வைத்து அவர்களை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

பிரான்சின் பின்தங்கிய பகுதியான கவுர் கவுரோனசை சேர்ந்த உமர் இஸ்மாயில் என்பவர் இந்த தாக்குதலில் பங்கேற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
Tamil_DailyNews_8388439416886
அவன் மீது போலீசில் சிறு சிறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவனது தந்தை மற்றும் அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைவிரல் ரேகை மூலம் மற்றொரு தீவிரவாதியின் அடையாளமும் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவன் தனது இரண்டு சகோதரர்களுடன் அண்டை நாடான பெல்ஜியத்தில் வசித்து வந்தான்.

இதை தொடர்ந்து பெல்ஜியம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று ஒரு சகோதரனை கைது செய்தனர். சாலா அப்தெஸ்லாம் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

பாரிஸ் தாக்குதலில் அவர் மூளையாக செயல்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவனை பிடிக்க இரு நாட்டு போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அவன் மிகவும் பயங்கரமானவர் எனவும் அவரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அதே சமயம் பொதுமக்கள் யாரும் அவனை தனியாக பிடிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் பிரான்சில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலை பிரகடனத்தை 3 மாதங்கள் நீட்டிக்க அந்நாட்டு அதிபர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply