சமீபத்தில் வெளியான பஜிராவோ மஸ்தாணி படத்தின் பிங்கா பாடல், தேவ்தாஸ் படத்தின் ‘டோலாரே…’ பாடலின் சாதனையை முறியடிக்குமா?- இதுதான் பாலிவுட் ரசிகர்களின் தற்போதைய பரபர விவாதம். சரி இரண்டில் எது சிறப்பானது என்பது குறித்த ஒரு சின்ன அலசல்…
2002ல் வெளியான மெகா ஹிட் படம் தேவ்தாஸ். இப்படத்தின் காஸ்டியூம், மேக்கிங் என பல விஷயங்கள் பலராலும் பேசப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம்.
அதிலும் மாதுரி தீட்ஷித்தும், ஐஸ்வர்யா ராயும் நடனம் ஆடும் ‘டோலாரே…’ பாடல் பள்ளி, கல்லூரிகளின் கலைநிகழ்ச்சிகளில் இப்போது வரை இடம்பிடிப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதே பாணியில் தற்போது பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பஜிராவோ மஸ்தானி படத்தின் பிங்கா பாடல் நேற்று வெளியாகி வைரலாகியுள்ளது.
தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ராவின் பவர்ஃபுல் நடனம், வண்ணமயமான காட்சியமைப்புகள் போன்றவை கண்களை கொஞ்சம் கவரத்தான் செய்கின்றன என்றாலும், பாடலை பொறுத்தமட்டில் ‘டோலாரே’ மேக்கிங்கைத் தொடக் கூட முடியவில்லை.
சஞ்சய் லீலா பன்சாலி என்றாலே விஷுவல் மேஜிக்கிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பது ‘பிங்கா’ பாடலில் தெரிந்தாலும் ‘டோலாரே’ விஷுவலை அவராலேயே திரும்பக் கொண்டுவர முடியவில்லை. மேலும் 10 முதல் 12 கிலோக்களில் இருக்கும் மாதுரி, ஐஸ்வர்யாவின் ஆடைகள் இக்காலப் பெண்களுக்கும் கனவு உடை எனலாம்.
அந்த வகையில் பிரியங்கா மற்றும் தீபிகாவின் சேலைகள் சாதாரண பட்டு சேலைகளாக, கொஞ்சம் வேலைப்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளன. அதிலும் சற்று சறுக்கல்.
இஸ்மாயில் தர்பார் மற்றும் மோண்டி ஷர்மாவின் இசை அடுத்த விருந்தாக இருந்தது டோலாரே பாடலில். மனதை துள்ள வைக்கும் அந்த இசை பிங்காவில் இல்லை.
முக்கியமாக மாதுரி, ஐஸ்வர்யாவின் நடனங்கள் அளவிற்கு தீபிகா, பிரியங்கா ஆகியோர் திறமையைக் கொட்டினாலும், அவர்களின் எனர்ஜி இவர்களிடம் சற்று குறைவாகத்தான் தெரிகிறது.
எப்போதும் பார்த்த அதே நடன அசைவுகள்… புதிதாக எதுவும் இல்லை. இன்னும் சொல்லவேண்டுமெனில் இந்த ‘பிங்கா’ பாடலைப் பார்த்தவுடன் ‘டோலாரே’வைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதல் மட்டுமே இதில் வெற்றி எனலாம்.
இரண்டு பாடல்களுக்கும் ஒரே இயக்குநர் (சஞ்சய் லீலா பன்சாலி) மற்றும் ஒரே மேக்கிங் குழு என்றாலும், ‘டோலாரே…’ டோலாரேதான் என பாலிவுட் இசைப் பிரியர்களை பிங்கா கவரத் தவறியுள்ளது.
இதில் மெனெக்கெட்டு நடனம் ஆடிய பிரியங்கா, தீபிகாவின் திறமை சற்றே வீணாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.