ரஷ்ய விமான விபத்து தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 713 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரஷ்ய விமான விபத்தில் 224 பேர் பலியானதற்கு தீவிரவாதிகளின் நாசவேலையே காரணம் என்பது தெரிய வந்தது. இதனால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் தலைக்கு ரூ.713 கோடியை ரஷ்ய அறிவித்தது.

வெடித்து சிதறியது
கடந்த மாதம் 31ஆம் திகதி எகிப்து நாட்டின் ஷரம் அல்–ஷேக் நகரில் இருந்து 217 சுற்றுலா பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரஷியாவின் ஏ–321 ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானம் புறப்பட்டு சென்ற 23ஆவது நிமிடத்தில் சினாய் தீபகற்ப பகுதியில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் பலியாகினர்.

விளாடிமிர் புட்டீன் சந்திப்பு
இந்த விபத்துக்கு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு எதுவும் இல்லை எனவும், வெளிப்புற நடவடிக்கைகள்தான் காரணம் என்றும் விமான நிறுவனம் சார்பில் கூறப்பட்டது. எனினும் அந்த வெளிப்புற நடவடிக்கை எது என்பது பற்றி உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி புட்டீனை, அந்நாட்டின் பாதுகாப்பு துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் நேற்று மெஸ்கோ நகரில் சந்தித்து பேசினார்.

தீவிரவாத நடவடிக்கை
விமானம் வெடித்துச் சிதறியதற்கான காரணம் குறித்த அறிக்கையை புட்டீனிடம் அளித்த அவர், தீவிரவாத நடவடிக்கை காரணமாகத்தான் விமானம் வெடித்துச் சிதறியது என்பது எவ்வித சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், அந்த விமானம் 1 கிலோ வெடிமருந்துக்கு இணையான வெடிகுண்டால் நடுவானில் தகர்க்கப்பட்டு உள்ளது. இந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை நமது வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரூ.713 கோடி
அப்போது புட்டீன், இதுபோன்ற தாக்குதல்கள் ரஷியாவின் மீது நடப்பது முதல் முறை அல்ல. இந்த நாசவேலைக்கு காரணமானவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விமானத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் தலைக்கு ரூ.713 கோடியை (50 மில்லியன் அமெரிக்க டொலர்) ரஷ்ய பாதுகாப்பு முகமை அறிவித்து உள்ளது.

Share.
Leave A Reply