சிரியாவில் போர் தொடங்கிவிட்டது. இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு ஃபிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பல வலுவான காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றன.
பாரீஸ் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும். எகிப்து விமானத்தை வீழ்த்தியதற்குப் பழி வாங்கவேண்டும். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டவேண்டும்.
உலகின் நம்பர் 1 அச்சுறுத்தலான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழித்துக்கட்ட வேண்டும். அநீதியை வென்றெடுத்து, சமாதானத்தைத் தவழவிடவேண்டும்.
ஆனால் உண்மையில் இதில் எதுவொன்றும் நடக்கப்போவதில்லை… ஏன்?
1. இந்தப் போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இறக்கப்போகிற வர்கள் சிவிலியன்கள்தாம். எத்தனை நவீனமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு போர் விமானத்தால், இந்த வேறுபாட்டைக் கண்டறிய முடியாது.
அதனை இயக்குபவர்களுக்கு இதுபற்றி அக்கறையில்லை. பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரிக்கத் தொடங்கும்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இருப்புக்கு ஒருவித தார்மீக நியாயம் உருவாகிவிடும். அவர்களுடைய பலம் பெருகும். பாதிக்கப்பட்ட சிவிலியன் பிரிவுகளுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் கான்வாஸிங் செய்ய ஆரம்பித்துவிடும்.
2. ஆலன் குர்தி என்னும் சிரிய குழந்தை, துருக்கிய கடற்கரையில் கரை ஒதுங்கியபோது, உலகமே அதிர்ந்தது. அகதிகள் பிரச்னை பற்றி உலகமே விவாதித்தது.
இந்தப் போர், பல மடங்கு அதிக தீவிரத்துடன் அகதிகளை உருவாக்கப்போகிறது. சிரியாவில் இருந்து பலர் தெறித்து வெளியில் சிதறப்போகிறார்கள்.
இது இனி சிரியாவின் பிரச்னை அல்ல, ஐரோப்பாவின் பிரச்னை; உலகின் பிரச்னை. அந்தப் பிரச்னை இப்போது இந்தப் போரால் பலமடங்கு பலம் பெற்றிருக்கிறது.
இந்த அகதிகளுக்கு இனி எந்த நாடும் இடம் கொடுக்கப்போவதில்லை. அவர்கள் உலகிடம் இருந்து அந்நியப்படப்போகிறார்கள். கடற்கரையில் மேலும் சடலங்கள் குவியப்போகின்றன.
ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளில் கூட்டம் பெருகப்போகிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சிக்கலாகவும், சவாலாகவும் அகதிகள் இருக்கப்போகிறார்கள். தீர்க்கமுடியாத பெருந்துயராகவும்!
3. ஒவ்வொரு போரும் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள பல ஆபத்தான சித்தாந்தங்களை உற்பத்தி செய்கிறது. இந்தப் போர் உற்பத்தி செய்திருப்பது இஸ்லாமோஃபோமியாவை.
“பயங்கரவாதிகளைக் கடவுள் பார்த்துக்கொள்வார், ஆனால் அவர்களைக் கடவுளிடம் அனுப்பிவைக்கும் வேலையை நான் செய்வேன்’ என்று ரஷ்ய அதிபர் புடின் சொன்னதாக ஒரு வாசகம் மிகுந்த முனைப்புடன், அலாதியாக ரசிக்கப்பட்டு இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.
அதை அவர் உண்மையில் சொன்னாரா இல்லையா எனும் ஆராய்ச்சிக்குக்கூட போகவேண்டாம். இந்த வரியை எடுத்துச் சொல்லி, இங்குள்ள தாலிபன்களை என்ன செய்யப்போகிறோம் என்று இங்கிருந்தே அறைகூவல் விடுபவர்களைக் கண்டு அஞ்சாமல் இருக்கமுடியுமா? ரஷ்யாவைப் பிடிக்காதவர்கள்கூட புடினை இப்போது ஆஹா ஓஹோ என்று புகழ்வதை எப்படிப் புரிந்துகொள்வது?
இப்படியொரு வலிமையான தலைவர் இந்தியாவில் இல்லையே என்று ஆதங்கப்படுபவர்களை என்ன செய்வது? பண்டைய ரோமில், கிளாடியேட்டர்களை மோதவிட்டு, அவர்கள் கொல்லப்படுவதை பார்த்து ஆர்ப்பரித்த கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது.
சிரியா போர் நம்மைப் பல ஆண்டுகள் பின்நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது. ஒரு பயங்கரவாதத் தாக்குதலை ரசித்து வரவேற்கும் மனநிலை எவ்வளவு ஆபத்தானதோ, அவ்வளவு ஆபத்தானது என்ன ஆனாலும் சரி, பழிக்குப் பழிவாங்கவேண்டும் என்று துடித்து வரவேற்பதும்.
4. பிரெஞ்சு மக்கள் பலியானதும் பராக் ஒபாமாவின் இதயம் வெடித்துவிட்டது. பெய்ரூத் மக்கள் கொல்லப்பட்டபோது அவர் ஏன் அமைதி காத்தார். ஊடகங்கள் ஏன் அமைதி காத்தன? நாம் ஏன் அதை விவாதமின்றி கடந்துசென்றோம்?
ஈராக்கிலும் சிரியாவிலும் தினம் தினம் பல பாரீஸ் தாக்குதல்கள் நடைபெற்றுவந்தபோதும் அவற்றை வசதியாக நாம் மறந்துவிடுவது ஏன்? இது வெறுமனே புறக்கணிப்பு அல்ல. அலட்சிய மனோபாவம் அல்ல. இது ஓர் அரசியல் உணர்வு.
இந்த உணர்வு ஏன் நம்மிடமும், நம்மைச் சுற்றியும் பலம்பெற்றுள்ளது என்பதை நாம் உடனடியாக ஆராயவேண்டும். இந்த உணர்வுக்கும் (அல்லது உணர்வற்ற நிலைக்கும்) பெருகிக்கொண்டிருக்கும் பயங்கரவாதத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்பது என் நம்பிக்கை. இந்த இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது.
5. தற்போது சிரியா போரை ஆதரிப்பவர்கள் யார், அதன் மூலம் ஆதாயம் அடையப்போகிறவர்கள் யார்? ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு அடுத்தபடியாக ஆயுத வியாபாரிகள்.
பாரீஸ் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பைப் பலப்படுத்துதல் என்னும் பெயரில் ஆயுத வியாபாரம் பல மடங்கு அதிகரிக்கப்போவதையும், அதன் பலன் எந்தெந்த நாட்டுக்குச் செல்லப்போகிறது என்பதையும் நாம் பார்க்கப்போகிறோம்.
அந்த வகையில் இது அவர்களுடைய போர் மட்டுமல்ல; அவர்களுடைய வர்த்தகமும்கூட. அவர்களுக்காக நாமும் இந்தப் போரை ஆதரிக்கவேண்டியதில்லை. இதிலிருந்து நாம் இழப்புகளை மட்டுமே அறுவடை செய்யப்போகிறோம். லாபம், அவர்களுக்குத்தான்!
6. பயங்கரவாதிகள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் குண்டுபோட்டு அந்த நாடுகளை அழித்துவிட்டால் பயங்கரவாதமும் ஒழிந்துவிடும் என்று நினைப்பது அறிவீனம் மட்டுமல்ல, அதுவே ஒரு பயங்கரவாதமும்கூட. இறையாண்மை கொண்ட ஒரு நாடு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும்போது, அந்நாட்டையும் சேர்த்தேதான் நாம் கண்டிக்கவேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஒழியவேண்டும் என்பதற்காக அமெரிக்காவும், ஃபிரான்ஸும், ரஷ்யாவும் தற்போது மேற்கொண்டு வரும் அநீதியான போரை நாம் ஆதரிக்கவேண்டியதில்லை.
பல பயங்கரவாத அமைப்புகளுக்குப் போட்டியாக, அவர்களையே மிஞ்சும் அளவுக்கு சர்வதேச அளவில் அரச பயங்கரவாதம் இன்று ஒரு பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது.
“நாங்கள் தவறாகத்தான் ஈராக்கைத் தாக்கினோம்” என்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் பேட்டி கொடுக்கிறார். அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
ஜார்ஜ் புஷ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எப்படி அவர்களால் வெறுமனே ஸாரி சொல்லிவிட்டு நகர்ந்துவிடமுடிகிறது? எப்படி வேறு சிலரால் ஒரு ஸாரி கூட சொல்லமுடியாமல் பதவியில் நீடிக்க முடிகிறது?
விடுதலைப் புலிகளையும், ஹிஸ்புல்லாவையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பையும்தான் தண்டிக்கமுடிகிறது. இலங்கை அரசையோ, அமெரிக்க அரசையோ, இஸ்ரேலையோ ஒருவராலும் எதுவும் செய்யமுடிவதில்லை.
இப்படி நீதி சமமற்ற முறையில் நிலவும் ஒரு சமூகத்தில், பயங்கரவாதம் நிகழாமல் இருந்தால்தான் ஆச்சரியப்படமுடியும். இல்லையா?
– மருதன்
எப்படியிருந்த சிரியாவை … எப்படி குட்டிச்சுவராக்கியிருக்கிறார்கள் பாருங்கள். இதற்கு யார் காரணம்?? அமெரிக்க உலக பயங்கரவாத நாடும் அதனோடு சேர்ந்த மேற்குலக நாடுகளும்தான் காரணம். இவர்கள்தான் மற்றவர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள்.
இவற்றையும் மறக்காமல் படியுங்கள்
எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை ?