எட்டு மாதங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த சிறுமி ஒருத்தி சில தினங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டி பிரதேச வைத்தியசாலை ஒன்றில் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ள நிலையில் அந்தக் குழந்தையின் தந்தை என சந்தேகிக்கப்படும் தங்கொட்டுவ மோருக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தங்கொட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் அயல் வீட்டுக்காரரான கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் குறித்த சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதோடு சிறுமியின் பெற்றோருடனும் உறவை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதான இச்சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அச்சிறுமி வைத்தியசாலையில் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தங்கொட்டுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து குளியாபிட்டி வைத்தியசாலைக்குச் சென்று விசாரணை செய்த தங்கொட்டு பொலிஸார், குழந்தை பிரசவித்த சிறுமி கடந்த மார்ச் மாதம் தங்கொட்டுவ மோருக்குளிய பிரதேசத்திலிருந்து காணாமல் போன சிறுமி என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பின்னர் அச்சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தான் பிரசவித்த குழந்தையின் தந்தை தனது ஊரில் வசிக்கும் சாராய முதலாளி என அச்சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள தங்கொட்டுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.