அரசாங்கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும், எவன்ட்கார்ட் விவகாரத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் நிறுவனமே, இந்தச் சர்ச்சைகள் எல்லாவற்றுக்கும் காரணமாகியுள்ளது.
இதன் தாய் நிறுவனம், எவன் கார்ட் பாதுகாப்பு சேவைகள் நிறுவனம். இது இலங்கையில் உள்ள மிகப் பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனம் என்பதும் இதில் 6,500க்கும் வரையானோர் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எவன்கார்ட் மரிரைம் நிறுவனம், போர் முடிவுக்கு வந்த பின்னர், 2011ஆம் ஆண்டு, இலங்கையின் கம்பனிகள் சட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்டது.
சர்வதேச கடற்பாதையில், கடற்கொள்ளை அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான பாதுகாப்பு வசதிகளை வழங்குவதே இந்த நிறுவனத்தின் அடிப்படை நோக்கம்.
இதற்காக, ஆயுதங்களையும், சீ மார்ஷல் என்ற அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களையும் சரக்குக் கப்பல்களுக்கு வழங்கும் பணியைத் தான் எவன்கார்ட் மரிரைம் சேவிசஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்திருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக் கடற்படை தான் முதன் முதலில் இந்த பாதுகாப்பு சேவையைத் துவங்கியது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் கீழ் கடற்படையினரால் இந்த கடல் பாதுகாப்பு சேவை அளிக்கப்பட்டது.
இதற்காக, முன்னாள் படையினரும், அரசாங்கத்தின் ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன.
இதன் மூலம் பெரும் வருமானங்கள் கொட்டத் தொடங்கியதும் தான் அது தனியார் நிறுவனமான எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மேஜர் நிசங்க சேனாதிபதி. இதன் நிர்வாக மற்றும் ஆலோசனைப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 20 வரையான, ஓய்வுபெற்ற கடற்படையின் அட்மிரல், ரியர் அட்மிரல்களும், இராணுவத்தின் மேஜர் ஜெனரல்களும் அடங்கியுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் தான் வெளிநாட்டவர்கள்.
பெரும்பாலானவர்கள் இலங்கையின் முன்னாள் இராணுவ, கடற்படை அதிகாரிகளேயாவர்.
அட்மிரல் கொலம்பகே, மேஜர் ஜெனரல் சந்திரவன்ச, கப்டன் பிரசன்ன ராஜரத்ன ஆகியோர் இந்த நிறுவனத்தின் ஆலோசகர்களாகவும், ரியர் அட்மிரல் ராசிக், ரியர் அட்மிரல் தயா தர்மபிரிய, மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்னாண்டோ, மேஜர் ஜெனரல் வி.ஆர் சில்வா, மேஜர் ஜெனரல் ரொகான் கடுவெல, மேஜர் ஜெனரல் சுனில் சில்வா, விங் கொமாண்டர் சேனாரத் திசநாயக்க, ரியர் அட்மிரல் இலங்ககோன், பிரிகேடியர் நிகால் ஹப்புஆராய்ச்சி, கொமடோர் சுதர்மன் சில்வா, கொமாண்டர் நந்தன தியபலானகே, கப்டன் சஞ்சய தஹநாயக்க உள்ளிட்டோர் முகாமைத்துவ பணிப்பாளர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
அரச படைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் படையினருக்கும், நல்ல வருமான வாய்ப்பை அளிக்கின்ற ஒரு நிறுவனமாகவே இது அமைந்திருந்தது.
கடற்கொள்ளையர்களினால், உலக வர்த்தகத்துக்கு ஆண்டு தோறும், 6.9 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படுகின்ற நிலையில், இந்த பாதுகாப்புச் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.
ஏடன் வளைகுடாவில் இருந்து இந்தியப் பெருங்கடலில், இலங்கையைக் கடந்து செல்லும் பகுதி வரை தான் ஆபத்தான பிரதேசமாக இருந்து வருகிறது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் கோலோச்சும் இந்தப் பகுதியில், தமது மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை நிறுத்தி, கப்பல்களுக்கு சீ மார்ஷல்களை பாதுகாவலர்களாக அனுப்பி பெரும் வருவாய் ஈட்டி வந்திருந்தது அவன்கார்ட் நிறுவனம்.
ஏடன் வளைகுடாவில் சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தமது நாட்டுக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியப் பெருங்கடல் வரை கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த எவன்கார்ட் நிறுவனம் உதவியது.
கோடி கோடியாக வருமானம் கொட்டும் இந்த கடல் பாதுகாப்பு சேவையை பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து, தனியார் நிறுவனத்திடம் கொடுத்திருந்தவர் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ.
இதன் மூலம் அவர் என்ன இலாபம் அடைந்தார் என்ற கேள்விக்கான விடை, தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தான் தெரியவரும். அவரது உத்தரவின் பேரிலேயே, இந்த நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
எவன்கார்ட் நிறுவனம், மூன்று மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை சர்வதேச கடற்பகுதியில் நிறுத்தியிருந்தது. முதலாவது மகாநுவர என்ற கப்பல். அது காலிக்கு அப்பால் 12 கடல் மைல் தொலைவில் – கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது செங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எவன்ட்கார்ட் என்ற கப்பல். மூன்றாவது ஓமான் வளைகுடாவில் புஜாரா துறைமுகத்துக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எம்.வி. சீபோல் வன் என்ற கப்பல்.
செங்கடலில் அல்லது ஓமான் வளைகுடாவில் நிற்கும், மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து ஆயுதங்களையும், சீ மார்ஷல்களையும் ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்கள், காலி கடற்பகுதியில் மகாநுவர கப்பலில் ஒப்படைத்து விட்டுச் செல்லும்.
*அதுபோலவே, இங்கிருந்து செல்லும் போதும், மகாநுவரவில் ஏற்றிச் சென்று, செங்கடலிலோ, ஓமான் வளைகுடாவிலோ ஒப்படைக்கப்படுவர்.
இது தான் அவன் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடு.
முன்னாள் இராணுவத்தினர், கடற்படையினரையும், அரசாங்கத்தின் ஆயுதங்களையும் வைத்து, நடத்தப்பட்ட இந்த பெரும் வர்த்தகம் தான் இப்போது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
தனியார் நிறுவனமான அவன் கார்ட் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சு எவ்வாறு ஆயுதங்களை வழங்கியது? இந்த ஆயுதங்களில் சட்டரீதியற்ற ஆயுதங்களும் இருந்தது எப்படி? என்று தான் விசாரிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களின் பின்னர், காலி துறைமுகத்தில் தரித்து நின்ற மகாநுவர கப்பல் கைப்பற்றப்பட்டது.
அதில், 3000 வரையான துப்பாக்கிகள் இருந்தன. அவற்றில் சில மாயமானதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் கடந்த மாதம் காலி துறைமுகத்துக்கு வந்த அவன்ட் கார்ட் கப்பலும் கைப்பற்றப்பட்டது.
அவற்றில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட- தொடர் இலக்கங்கள் அழிக்கப்பட்ட ஆயுதங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தக் கப்பல் காலிக்கு செல்ல அனுமதி கோரவில்லை. கொழும்பு வர அனுமதி கோரி விட்டு காலியில் தரித்து நின்றது.
உக்ரேனியர் ஒருவரே அதன் கப்டனாக இருப்பதாக கூறப்பட்ட போதிலும் அவர் அதில் இருக்கவில்லை.
சீ மார்ஷல்கள் மூவரிடமே ஆயுதங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், 816 துப்பாக்கிகள் அதில் இருந்தன.
அவற்றுக்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
இந்த விவகாரத்தில் சில சர்வதேச சிக்கல்களும் இருக்கின்றன.
மாலைதீவில் குழப்பநிலை ஏற்பட்டுள்ள சூழலில், இந்த அவன் கார்ட் கப்பல் மாலைதீவு துறைமுகம் வழியாக வரும் போது, அதன் ஜிபிஎஸ் கருவியின் செயற்பாட்டை நிறுத்தி வைத்திருக்கிறது.
இது சந்தேகத்தை எற்படுத்தியிருக்கிறது.
மாலைதீவில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்ட சூழலில், இந்தக் கப்பலின் நகர்வுகள் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
அது தவிர, அந்தமானுக்கு அருகிலுள்ள இந்தியாவின் ஆளுகைக்குரிய கேந்திர முக்கியத்துவம் மிக்க தீவுப் பகுதிகளுக்கு அருகிலும், இந்தக் கப்பல் அனுமதியைப் பெறாமல் சென்று வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர, நைஜீரிய நிறுவனம் ஒன்றுக்கு ஆயுதங்களையும் வழங்கியிருக்கிறது.
இவை சர்வதேச சட்டங்களுக்கு முரணான செற்பாடுகளாக வாதிடப்படுகின்றன.
நைஜீரியாவில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நிபுணத்துவ சேவைகளை வழங்க கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் முன்னாள் இராணுவ, கடற்படைத் தளபதிகள் பலரும் இடம்பெற்றிருந்தனர்.
பின்னர் அந்த வாய்ப்பு அவன்ட் கார்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டிருந்த போது, நைஜீரியாவில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறித்தான் அதனை மீளப் பெற்றிருந்தார்.
இவ்வாறாக, கடல் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கும் அப்பால், அவன்ட் கார்ட் நிறுவனம் செயற்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. அதுபற்றியே விசாரணைகள் நடத்தப்படுகின்றன.ன.
ஏற்கனவே, மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களினால் கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இந்தியா எச்சரித்திருந்தது.
அவன் கார்ட் நிறுவனத்தின் சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
அடுத்த கட்டமாக அவன் காரட் நிறுவனம் கடற்படையின் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
என்றாலும் இப்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் மூலம் முன்னைய செயற்பாடுகளில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்படுவரா, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதெல்லாம் சந்தேகமாகவே உள்ளது.
ஏனென்றால், இந்த விடயத்தில், தவறுகளை கண்டறிய முற்படுவோரை விட அவர்களைப் பாதுகாக்க முனைவோரே அரசாங்கத்தில் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.