பொதுமக்கள் கொல்லப்பட்ட பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக இருந்து தாக்குதலை செயல்படுத்தியவர் உள்ளிட்ட தீவிரவாதிகள், பாரிஸ் நகரின் புறநகரான செயின்ட் டெனிஸ் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருப்பதாக பிரான்ஸ் தீவிரவாத தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இத் தகவலை தொடர்ந்து, ஆயுதம் தாங்கிய தீவிரவாத தடுப்பு பொலிஸ் படையினரும், ராணுவ வீரர்களும் அங்கு நேற்று விரைந்தனர். தீவிரவாதிகள் இருந்த வீட்டை பொலிஸ் படை சுற்றிவளைத்தது.
அப்போது பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பலமணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. துப்பாக்கி சண்டையில் ஒருபெண் உள்பட 3 தீவிரவாதிகள் பலியாகினர். பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே குடியிருப்பில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்ற போது பொலிஸ் படைக்கு பக்கபலமாக செயல்பட்ட மோப்ப நாயான ‘சூப்பர் ஹீரோ’ டீசலை குறிவைத்து தீவிரவாதிகள் சுட்டுஉள்ளனர்.
இதனையடுத்து மூன்றாவது தளத்தில் பெண்தீவிரவாதி தற்கொலை வெடிகுண்டை வெடிக்கசெய்ததும், குடியிருப்பின் மூன்றாவது கட்டிடம் சிதையுண்டது. ‘சூப்பர் ஹீரோ’ டீசலும் உடல் சிதறி பலியாகியது.
உயிர்தியாகம் செய்த டீசலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு உறுதுணையாக நின்ற 7வயது பெண் நாயான டீசலுக்கு உலகம் முழுவதும் உள்ள நாய்களும் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
நாய்களின் உரிமையாளர்கள், அஞ்சலி தெரிவிக்கும் விதமான வாசகங்கள் எழுதிய அட்டையை தங்களது செல்ல நாய்களின் கழுத்தில் தொங்கவிட்டு உள்ளனர்.
பிரான்ஸ் தீவிரவாதப்படையில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு பதக்கங்களை தனதாக்கிய டீசல், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தது, சமூகவலைதளங்கள் ஊடாகவும் இச்சம்பவத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது.