அமெரிக்காவின் பிரபல நடிகர்களில் ஒருவரான சார்ளி ஷீன், தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகர் சார்ளி ஷீனுக்கு எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளமையால் ஹொலிவூட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாம் 5000 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக முன்னர் கூறியவர் சார்ளி ஷீன். இந்நிலையில், அவர் மூலம் பெண்கள் பலருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருக்குமோ என அஞ்சப்படுகிறது.
ஹொலிவூட்டின் பிரபல நடிகர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் பல வருடங்களாக இதை மறைத்து வந்துள்ளதாகவும் கடந்த வாரம் அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இத்தகவலினால் அவருடன் சம்பந்தப்பட்ட பெண்கள் பலர் அச்சம் கொண்டுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
எச்.ஐ.வி. தொற்றுடைய அந்த நடிகர் சார்ளி ஷீன் எனவும், தான் எச்.ஐ.வி. தொற்றுடையவரா என்பது குறித்து அவர் செய்வாய்க்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு அறிவிக்கவுள்ளார் எனவும் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை என்.பி.சி தொலைக்காட்சியின் “டுடே” நிகழ்ச்சியில் பங்குபற்றிய நடிகர் சார்ளி ஷீன் தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருக்கிறது என ஒப்புக்கொண்டார்.
4 வருடகாலமாக, அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து தனக்கு எச்.ஐ.வி. உள்ளதாக அவர் கூறினார். எனினும், அது எயிட்ஸ் நோயாக முற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
50 வயதான சார்ளி ஷீன், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தனது சிறந்த நடிப்பால் புகழ்பெற்ற வர்.
அதேவேளை, திரையுலகுக்கு அப்பால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை மிகுந்ததாக இருந்தது. போதைப் பொருள் குற்றச்சாட்டுகள், பெண்கள் விவகாரங்களால் செய்திகளில் இடம்பெற்றவர் இவர்.
3 தடவைகள் இவர் திரும ணம் செய்திருந்தார்.
முதல் தடவையாக டொனா பீலை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்றார். பின்னர் டெனிஸ் ரிச்சர்ட்ஸை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2006 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இறுதியாக 2008 ஆம் ஆண்டு புரூக் முல்லரை திருமணம் செய்த சார்ளி ஷீன், 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
ஆனால், இப்பெண்கள் மூவரும் சார்ளி ஷீனின் வாழ்க்கையில் தொடர்புபட்ட பெண்களின் எண்ணிக்கையில் மிகச் சிறிய பகுதியினரேயாவர்.
தான் 5000 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக சில வருடங்களுக்கு முன் சார்ளி ஷீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த 5000 பேர் யார் என்பது தெரியாவிட்டாலும் குறைந்தபட்சம் 22 பிரபலமான பெண்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்த ஊடகங்கள் அவர்களின் விபரங்களையும் வெளியிட்டிருந்தன.
சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு காலத்தில் அவரின் காதலியாக விளங்கியவர் முன்னாள் ஆபாசப்பட நடிகையான ப்றீ ஒல்சன். தற்போது சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி. இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதையடுத்து ப்றீ ஒல்சன் முதலானோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஒரு வருடகாலமாக சார்ளி ஷீன் தன்னுடன் வசித்து, ஏறத்தாழ தினமும் பாலியல் உறவில் ஈடுபட்டபோதிலும் அவர் ஒருபோதும் தனக்கு எச்.ஐ.வி. தொற்றியுள்ளதை வெளிப்படுத்தவில்லை என ப்றீ ஒல்சன் கூறியுள்ளார்.
எனினும் தனக்கோ 6 வயது இரட்டையர்களான தனது மகன்களுக்கோ எச்.ஐ.வி. ஏற்படவில்லை என சார்ளியின் முன்னாள் மனைவி புரூக் முல்லர் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி. தொற்றியிருப்பதை வெளிப்படுத்தாமல் பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம்.
இந்நிலையில் சார்ளி ஷீன் இது குறித்து கூறாமல் பலருக்கு எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தியிருப்பார் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால், தன் மூலம் மற்றவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றியிருக்கும் என தான் கருதவில்லை என சார்ளி ஷீன் கூறுகிறார்.
அதேவேளை, தனக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்துகொண்ட சிலர் இத்தகவலை வெளியிடாமல் இருப்பதற்காக ஒரு கோடி அமெரிக்க டொலர் வரை தன்னிடம் பணம் கறக்க முயன்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.