உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு என்ற பெயரை நைஜீரியாவை அடிப்படையாக கொண்ட பொக்கோ ஹராம் பெற்றிருக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத இயக்கமே உலகின் மோசமான பயங்கரவாத இயக்கம் என்ற என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு புள்ளிவிபரங்களின் படி ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பை முந்தியிருக்கிறது பொக்கோ ஹராம்.
புதிய அறிக்கை ஒன்றின் படி, பொக்கோ ஹராம் அமைப்பு 2014 ஆம் ஆண்டு மட்டும் 6, 644 பேரை கொன்றிருக்கிறது. இதவேளை, ஐ.எஸ். ஐ. எஸ் அமைப்பு 6, 073 பேரை கொன்றிருக்கிறது.
சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை ஒன்றுபடுத்தி ஒரு இஸ்லாமிய தேசத்தை ஸ்தாபிக்கப் போவதாக ஐ.எஸ்.ஐ எஸ் அமைப்பு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறைகூவல் விடுத்து தனது பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றிருந்தது.
தனக்கென்று ஒரு ஊடக அலகை கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இளைஞர்களை சேர்ப்பதற்காக அல்லது தனது எதிரிகளை கிலிகொள்ளச் செய்வதற்காக சிறைப்பிடிப்பவர்களை கத்தியால் வெட்டிக்கொல்லும் காட்சிகளையும் அவர்களை சித்திரவதை செய்யும் காட்சிகளையும் வீடியோ காட்சிகளாக வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தது.
பாரிஸில் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தாக்குதல் மற்றும் 229 பயணிகளுடன் ரஷ்ய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கான உரிமையை இந்த ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பே கோரியிருந்தது.
இதேவேளை, பொக்கோ ஹராம் அமைப்பு தனது அட்டூழியங்களை மேற்கு ஆபிரிக்காவில் புரிந்து வருகிறது. கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் 219 பாடசாலை மாணவிகளை கடத்தி அதற்கு உரிமை கோரியபோது பொக்கோ ஹராம் உலகின் கவனத்தை ஈர்த்து.
கடந்த வருடத்தில் நைஜீரியா மொத்தம் 7, 512 பயங்கரவாத சம்பவங்களை சந்தித்தது. இது முன்னைய ஆண்டைவிட 300 சத வீத அதிகரிப்பாகும்.
கடந்த ஆண்டில் பயங்கரவாதம் காரணமாக இடம்பெற்ற பதிவுசெய்யப்பட்ட சம்பவங்கள் எந்த ஒரு நாட்டையும் விட நைஜீரியாவிலேயே அதிகமானதாகும்.
பயங்கரவாதம் காரணமான உயிரிழப்பில் 2013 ஆம் ஆண்டு 5 ஆவது இடத்தில இருந்த நைஜீரியா 2014 ஆம் ஆண்டு 2 ஆவது இடத்துக்கு வந்தது.
பொக்கோ ஹராம் தனது தாக்குதல்களை நைஜீரியவுக்குள் மட்டும் மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. 2014 இல் சுமார் 46 தாக்குதல்களை சாட் மற்றும் கமரூன் ஆகிய நாடுகளில் மேற்கொண்டு 520 பேரை கொன்றுள்ளது. இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தியே இந்த அமைப்பு கூடுதலான தனது தாக்குதல்களை நடத்தியிருக்கிறது