மாலி தலைநகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகளினால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 170 போரையும் விடுவிக்கும் பொருட்டு அமெரிக்க சிறப்பு படையினரும் மாலி இராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதலில் 22 பணயக் கைதிகள் உட்பட குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர்.
ஹோட்டலுக்குள் சிறப்புப்படையினர் அதிரடியாக நுழைந்ததையடுத்து, பிணைக்கைதிகளில் பெருமளவானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையானோர் காயம் அடைந்துள்ளனர். பணயக் கைதிகள் சம்பவம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் இன்னமும் சில பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் மறைந்திருந்து சிறப்பு படையினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலி நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கடந்த மூன்றாண்டுகளாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய ஒரு குழு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரி இருக்கிறது.
அவ்வப்போது, பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடிக்கும் இந்த கும்பல், அரசிடம் பணம்கேட்டு மிரட்டியும் வருகின்றது. பணம் தராவிட்டால் பிடித்து வைத்திருக்கும் மக்களை ஈவிரக்கமின்றி இவர்கள் கொன்று குவித்து வருகின்றனர்.
ஆனால் , இந்த தாக்குதல் பிரான்சில் நேற்றைய தினம் ஐ. எஸ். ஐ. எஸ் இயக்க பயங்கரவாதிகள் மீது பிரான்ஸ் பொலிசார் மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் இடம்பெற்றதா என்றும் ஆராயப்படுகிறது.
பணயக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் வேறு நாடுகளை சேர்ந்தவர்களே. குறைந்தது ஒரு பிரான்ஸ் பிரஜையும் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
மாலி தாக்குதலுக்கு அல்கொய்தா உடன் தொடர்புடைய இயக்கம் பொறுப்பேற்பு
20-11-2015
மாலி தாக்குதலுக்கு அல்கொய்தா உடன் தொடர்புடைய அல்- மொரேபிடன் இயக்கம் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
மாலி நாட்டின் தலைநகரான பமாகோ நகரில் உள்ள ராடிசன் ஓட்டலுக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் அங்கு ஏழாவது மாடியில் தங்கியிருந்த சுமார் 30 ஓட்டல் ஊழியர்கள் உட்பட சுமார் 100 பேருக்கு மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.
அவர்களை மீட்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் ஓட்டலில் இருந்து 27 பலியானதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி அந்நாட்டு அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், தீவிரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகள் யாரும் இல்லை. இதுவரை இரண்டு தீவிரவாதிகள் சூட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஓட்டலில் மறைந்திருக்கும் சில தீவிரவாதிகளுடன் சிறப்பு அதிரடி படையினர் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதுவரை உணவு விடுதியில் இருந்து 27 சடலங்கள் மீட்கபட்டுள்ளன. எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விவரம் முழுமையாக வெளிவரவில்லை.
மேற்கண்ட தாக்குதலுக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல்- மொரேபிடன் இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.