அது கடந்த நவம்பர் 10 ஆம் திகதி மாத்தறை பிரதேசம் மிக அமைதியாக இருந்தது. அந்த அமைதி நீடிக்கவில்லை. நேரம் இரவு 8.05 மாத்தறை பொலிஸ் நிலையத்துக்கு அவசர அழைப்பு இலக்கமான 119 ஊடாக வந்த அழைப்பால் தொலைபேசி அலறியது.
“சேர்…. வெவஹமன்துவவில் பிரச்சினை சேர்….. துப்பாக்கி சூடும் இடம்பெற்றுள்ளது. அவசரமாக வாங்க… சேர்….” என பதற்றத்துடன் பேசிய அந்த குரல் தொலை பேசியை நிறுத்தியது.
இரவு நேர விசேட ரோந்துக்காக இருவேறு பொலிஸ் குழுக்கள் தயாராகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மாத்தறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் மஹிந்த கல்தேராவும் வேலைப் பழுவுக்கு மத்தியில் இருந்தார்.
தகவலையடுத்து மறுகணமே செயற்பட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் மஹிந்த கல்தேரா தனது பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கொன்சல்கோராளவையும், ரோந்து செல்ல தயாரான பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்துக்கொண்டு வெவஹமன்துவ நோக்கி விரைந்தார்.
வெவஹமன்துவ கிராமத்துக்குள் நுழையும் சந்தியை பொலிஸார் அடையும் போது வேகமாக ஒரு வேன் எதிர்த்திசையில் மின்னலாய் பறந்தது. எனினும் தொடர்ந்தும் பொலிஸார் முன்னோக்கி பயணிக்கவே பொதுமக்கள் கூடியிருந்த அந்த வீட்டை பொலிஸார் அடைந்தனர்.
அவசரமாக வீட்டினுள் நுழைந்த பொலிஸாருக்கு இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், அருகே ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று காணப்படுவதையும் மற்றொரு அறையில் இரத்தக்கறை மட்டும் காணப்படுவதையும் அவ்வறையின் சுவர்களையும் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்திருப்பதையும் காண முடிந்தது.
அந்த சடலத்துக்கு அருகே கதிரையொன்றில் வயோதிப மாது ஒருவர் அழுகையுடன் அமர்ந்திருந்தார்.
இந்த காட்சிகள் மஹிந்த கல்தேரா தலைமையிலான பொலிஸ் குழுவுக்கு பாரிய விபரீதம் ஒன்று இடம்பெற்றுள்ளதை காட்டி நின்றது. பொலிஸார் நடந்தது என்ன என்பதை கண்டறிய முயன்றனர்.
முதலில் சடலமாக கிடக்கும் கடற்படை சிப்பாய் சமன் குமார என்பவர் என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார், அந்த வீடு மாத்தறை பிரதேச செயலகத்தின் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான சமிலா பிரசாதினியுடையது என்பதையும் உறுதிசெய்தனர்.
“சேர்…. சமன் குமார இங்கு வந்து சமிலாவை சுட்டுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்… சமிலாவை அவசரமாக இப்போது மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்” என ஸ்தலத்தில் இருந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
அச்சமயத்திலேயே மாத்தறை வைத்தியசாலை ஊடாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் மஹிந்த கல்தேராவுக்கு தகவல் கிடைத்தது. அதில் சமிலா இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
தாம் ஸ்தலம் வரும் போது வேகமாக எதிர்த்திசையில் சென்ற வேன் சமிலாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேனே என்பது பொலிஸாரால் அப்போதே உறுதிப்படுத்த முடிந்தது.
இந்நிலையில் விபரம் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. தென் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரம ரத்ன, மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கொடித்துவக்கு ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பமாகின.
ஸ்தலம் விரைந்த மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டிய விசாரணைகளுக்கான ஆலோசனைகளை வழங்க மாத்தறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த கல்தேரா, குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கொன்சல்கோராள, பொலிஸ் சார்ஜன்களான அருணசாந்த, குலரத்ன, ரஞ்சித் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரால் விசாரணைகள் ஆரம்பமாகின.
ஹேவா களு அத்தகே சமிலா பிரசாதினி 26 வயதான யுவதி, வல்கம மஹானாம கல்லூரியில் கல்விபயின்ற சமிலா பேராதனை பல்கலையில் பட்டப்படிப்பை முடித்தவர். தொடர்ந்து மாத்தறை பிரதேச செயலகத்தின் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பாக செயற்பட்டவர்.
பேராதனை பல்கலையில் கல்வி கற்கும் காலப்பகுதியில், கல்வி நடவடிக்கைகளுக்காக சென்று வரும் போது பஸ்ஸில் அவருக்கு அறிமுகமானவரே சமன்குமார என்ற 30 வயதான கடற்படை வீரர். தங்காலை கடற்படை முகாமில் சேவையாற்றி வந்த சமன் குமார சமிலாவின் கல்வி நடவடிக்கைகளுக்கும் உதவிய நிலையில் இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது.
அந்த காதல் தீ பற்றிக் கொண்ட வேகத்திலேயே அணையவும் செய்தது. அதாவது சமிலா பல்கலை படிப்பை முடித்தவுடன், வேலையும் கிடைத்தது. அப்போது சமன்குமாரவுடன் சிற்சில கருத்து வேறுபாடுகள் ஏற்படவே தம்மிருவருக்கும் ஒத்துவராது எனக்கூறி சமிலா, சமன் குமாரவை ஒதுக்கி காதல் தொடர்பை முறித்துக் கொண்டார்.
எனினும் சமன் குமாரவுக்கு சமிலாவை மறந்து ஒதுங்க முடியவில்லை. அன்று தீபாவளி தினத்தன்று அரச விடுமுறை நாள். தங்காலை கடற்படை முகாமில் சமன் குமாரவுக்கு மாலை 4.00 மணி முதல் 8.00 மணிவரை கடமை நேரமாக அன்று வரையறுக்கப்பட்டிருந்தது.
சமிலாவுக்கு அன்று விடுமுறை அல்லவா. அவள் வீட்டிலேயே இருந்தாள். கூடவே அம்மா, தங்கை ஆகியோரும் இருந்தனர். அவள் அண்ணன் மட்டும் அச்சமயம் வீட்டில் இருக்கவில்லை.
அப்போது நேரம் எப்படியும் இரவு 7.00 மணியை தாண்டி இருக்கும். சமிலாவின் வீட்டு பிரதான வாயில் திடீரென சத்தத்துடன் திறக்கப்பட்டது. வீட்டின் கொல்லைப் புறத்தில் இருந்த வீட்டார் முன்னால் ஓடி வந்தனர்.
ஆம் மறுகணம் அவர்கள் கடற்படை சீருடையில் கையில் ரீ-56 ரகதுப்பாக்கியுடன் சமன் குமார வீட்டினுள் பிரவேசிப்பதை கண்டனர். சமிலாவின் அம்மாவும் தங்கையும் பயத்தில் உறைந்து போயினர். வீட்டில் நுழைந்த சமன்குமார நேராக சமிலாவின் அறையை நோக்கி சென்றான்.
மறுகணம் டுமீல் டுமீல் என்ற சத்தம் மட்டும் அம்மா, தங்கையின் கூக்குரலையும் தாண்டி கேட்டது. தொடர்ந்து நிலத்தில் சாய்ந்த சமிலா அருகே சென்ற சமன்குமார தோட்டா நிரப்பப்பட்ட ரீ-56 துப்பாக்கியை தனது தொண்டைக் குழியில் வைத்து இயக்கவே அவள் அருகிலேயே சடலமானான்.
வீட்டுக்கு வெளியே சென்றிருந்த சமிலாவின் அண்ணணுக்கும் தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்கவே வீட்டை நோக்கி ஓடி வந்துள்ளான். வந்தவர் தனது தங்கை இரத்த வெள்ளத்தில் கிடக்க அவள் மேல் சமன் குமார கிடப்பதை கண்டுள்ளான்.
உடனே தனது தங்கையின் உயிரை காக்க முயற்சித்துள்ள அண்ணன், சமன் குமாரவை இழுத்து பிரதான அறையில் போட்டுவிட்டு தங்கையை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ள போதும் அவளை காப்பாற்ற முடியவில்லை.
இந்த விபரங்களை உறுதி செய்து கொண்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தனர்.
இதன்போது தனது காதலியான சமிலா மீது சமன் குமார 14 துப்பாக்கிச் சூட்டுக்களை நடத்தியுள்ளதை கண்டறிந்த பொலிஸார் அவன் கடமை நேரத்திலேயே இவ்வாறு வெளியே வந்து இந்த கொலை மற்றும் தற்கொலையை புரிந்துள்ளதை கண்டறிந்தனர்.
கடமை நேரத்தில் சமன்குமார ஆயுதத்துடன் எப்படி வெளியே வந்தார் என்பது பொலிஸாருக்கும் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், ரீ-56 ரக துப்பாக்கியுடன் 43 தோட்டாக்கள் உயிர்ப்புள்ள நிலையில் இருந்துள்ளதையும் பொலிஸ் விசாரணையில் கண்டறிந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ள சமிலாவின் தாய் லீலாவதி தனது மகள் இரு வருடங்கள் சமன் குமாரவுடன் காதல் தொடர்பை பேணியதாகவும் பின்னர் அதனை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொலிஸ் தகவல்களின் படி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சமிலாவின் வீடு புகுந்து அவளை அச்சுறுத்தியதாக சமன் குமாரவுக்கு எதிராக மாத்தறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விசாரணை செய்துள்ள பொலிஸார் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி அவன் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்தனர். அதன் பின்னர் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட அவன் 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டிருந்தான்.
இதனிடையே சமிலாவுடன் சமன் குமார 8 வருடங்களாக காதல் தொடர்பு கொண்டிருந்ததாக கடற்படை சிப்பாய் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு முறை சமன் குமார சமிலாவை பார்க்க அவள் வீட்டுக்கு சென்ற போது அங்கு வைத்து பொல்லால் தலையில் தாக்கப்பட்டதாகவும் அதற்காக மாத்தறை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றதாகவும் அந்த கடற்படை சிப்பாய் தெரிவித்தார்.
எனினும் சமிலா சமன் குமாரவை 2 வருடங்களாகவே காதலித்ததாக அவள் பல்கலை தோழிகள் தெரிவிக்கின்றனர்.
சமிலாவும் சமன் குமாரவும் காதலித்தார்கள் என்பதற்கான ஆதாரமாக இருவரும் சேர்ந்தெடுத்த புகைப்படமொன்றை விசாரணை செய்யும் பொலிஸார் சமன் குமாரவிடமிருந்து மீட்டனர்.
அதில் எனது மரணத்தை சமிலாவுக்கு பொறுப்புக் கொடுங்கள் என நண்பி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்ததாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் இறுதிச் சடங்கை செய்ய பணத்தை ATM அட்டை மூலம் வங்கியில் எடுக்குமாறும் அதில் எழுதப்பட்டிருந்ததாகவும் அந்த அட்டையின் இரகசிய இலக்கமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அப் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை மாத்தறை மேலதிக நீதிவான் மஞ்சுள கருணாரத்ன முன்னெடுத்திருந்தார். உண்மையில் யுத்தத்தின் பின்னர் படையினர் இவ்வாறான குற்றச் செயல்களோடு தொடர்புபடும் பல சம்பவங்கள் பதிவாகிவிட்டன. இந்நிலையில் இந்நிலைமை பாரிய பிரச்சினையாகும்.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் படை சிப்பாய்களின் மனநிலையானது சிவில் பிரஜைகளின் மனநிலையில் இருந்து பாரிய வேறுபாடுகளுடன் காணப்படுவதாக மனோதத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக அமெரிக்க–வியட்நாம் யுத்தத்தின் பின்னர் அமெரிக்க படையினர் மத்தியில் ஏற்பட்ட அசாதாரணமான அசைவுகளை வைத்து 1970 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே இவ்விடயத்தை உளவியலாளர்கள் உறுதி செய்தனர்.
யுத்த அனுபவங்கள் அதிக பயிற்சி உள்ளிட்டவை சாதாரண மனிதனிலிருந்தும் அவர்களை ஆவேசமானவர்களாக மாற்றுவதாக கூறப்படுகின்றது. இதனால் அவ்வாறான மனநிலை கொண்ட படையினரின் விருப்பத்துக்குரியவர்கள், பழகும் சிவிலியன்கள் அதிக பாதிப்புக்களை எதிர்கொள்வர்.
இவ்வாறு ஆவேச மனநிலையை PTSP நிலைமை என உளவியலாளர்கள் வரையறுக்கும் நிலையில் அவர்களுக்கு உளவியல் சிகிச்சைகளையும் கட்டாயமாக பரிந்துரை செய்கின்றனர்.
இந்நிலையில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் அதிகரித்துள்ள படையினரின் இத்தகைய ஆவேச குற்றங்களை கட்டுப்படுத்த, அவர்களுக்கு உளவியல் பயிற்சிகளின் கட்டாயத்தை பறைசாற்றி நிற்கின்றன.
சமிலா கொலை, சமன் குமாரவின் தற்கொலை விவகாரம் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சமன் குமாரவை பொறுத்தவரை 7 சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தின் கடைக்குட்டி. ஆறு மகன்மாரை நாட்டை காக்கும் பணிக்காக முப்படைகளுக்கும் ஒப்படைத்த அவன் தாய் ஒரே மகளை கூட இராணுவ வீரர் ஒருவருக்கே திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இத்தகைய இராணுவ சம்பந்தம் உள்ள குடும்பத்தின் கடைக்குட்டியே தனது இனிய காதலுக்கு இப்படியொரு கொடூரமான முடிவை திட்டமிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
6 மகன்மாரை நாட்டைக் காக்கும் படையினருக்கே தாரைவார்த்த அந்த வீரத்தாய் இன்று மஹரகம புற்றுநோய் வைத் தியசாலையில் சிகிச்சைப் பெறும் நிலையில் தனது கடைக்குட்டி செய்த கொடூரம் அவருக்கு இன்னும் தெரியாது.