’24 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து தமக்கு எதுவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து 24 கைதிகளும் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீதிமன்றத்திலிருந்து இந்த அரசியல் கைதிகள் சிறைச்சாலை பஸ் வண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு கூடி நின்ற ஊடகவியலாளர்களிடம் பல்வேறு வகையான விமர்சனங்களை தெரிவித்தனர். இந்த விமர்சனங்கள் அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளியிடுவதாக அமைந்திருந்தது.
புதன்கிழமை மாலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் பிணை பெற முடியாமல் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளில் 24 கைதிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள னர். இவர்கள் தங்களது உறவினர்களுடன் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
மேலும் 30 அரசியல் கைதிகள் இன்னும் 20 நாட்களில் விடுவிக்கப்படுவர் என்று ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் கைதிகள் விடுதலை குறித்து நீதி அமைச்சு அறிக்கை,
24 தமிழ் அரசியல் கைதிகள் முற்றும் முழுதாக விடுவிக்கப்படவில்லை. பிணையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டால் தண்டனை வழங்கப்படுமென்று நீதி அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு சில மாதங்களில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்கும்படி அல்லது விசாரணை நடத்தும்படி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.
சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து இன்னும் சந்தேகம் நிலவுகின்றது. ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு எண்ணிக்கையை தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 217 முதல் 254 வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. கைதிகளில் ஒரு சிலர் உணர்விழந்தனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைகளுக்கு சென்று உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை சென்று பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ஆறுதல் கூறினர்.
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் அவசரமாக தமிழ்க் கைதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீபாவளி தினத்துக்கு முன்னர் 7ஆம் திகதி விசாரணையின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தொகை கைதிக ளை விடுவிக்க வாக்குறுதியளித்திருந்தார்.
இந்த வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதமிருந்த கைதிகள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். ஆனால், தீபாவளி கடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை.
தீபாவளி தினத்துக்கு மறுநாள் 11ஆம் திகதி புதன்கிழமை காலை 24 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து தமக்கு எதுவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து 24 கைதிகளும் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீதிமன்றத்திலிருந்து இந்த அரசியல் கைதிகள் சிறைச்சாலை பஸ் வண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு கூடி நின்ற ஊடகவியலாளர்களிடம் பல்வேறு வகையான விமர்சனங்களை தெரிவித்தனர். இந்த விமர்சனங்கள் அவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளியிடுவதாக அமைந்திருந்தது.
அன்றைய தினமே மாலை இந்த அரசியல் கைதிகள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். காலையில் ஆஜர் செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. ஆனால் மாலையில் ஆஜர் செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக் கை 31ஆக அதிகரித்திருந்தது. இது எப்படி என்பது தெரியவில்லை.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட கைதிகளை பிணையில் விடுவிப்பது தொடர்பாக பிரதம நீதிவான் கிஹான் பிலபிட்டிய விசாரணைகளை முன்னெடுத்தார்.
இரு பெண்கள் உட்பட 31 கைதிகளையும் விடுவிக்க சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என அரச சட்டத்தரணி எச்.ஏ.நவவி தெரிவித்ததையடுத்து ஒவ்வொரு கைதிகளையும் தலா பத்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கும் படி நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் பிணையில் விடுவிக்கப்படும் கைதிகளுக்கு மேலும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கொழும்பு அல்லது வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு சென்று கைச்சாத்திட வேண்டும். தாம் வசிக்கும் பிரதேசத்தை விட்டு வேறு பிரதேசத்துக்கு குடி பெயர்வதாக இருந்தாலும் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
அத்துடன் கைதிகள் கடவுச்சீட்டு வைத்திருந்தால் அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் அல்லது தம்மிடம் கடவுச்சீட்டு இல்லை எனத் தெரிவிக்கும் சத்தியக் கடதாசியொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
கைதிகள் 11ஆம் திகதி காலை விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்து கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் காத்திருந்த கைதிகளின் உறவினர்கள் கைதிகள் காலையில் விடுவிக்கப்படாததால் கண்ணீர் சிந்தியபடி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அன்று மாலை எதிர்பாரா வண்ணம் இந்த அரசியல் கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதும் பிணையில் எடுக்க உறவினர்கள் எவரும் வராததால் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கே கொண்டு செல்லப்பட்டனர்.
பொது மன்னிப்பின் கீழ் தம்மை விடுவிக்கும்படி மீண்டும் இந்த அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் -ஜனாதிபதி
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க முன்னின்று உழைத்த சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளின் போது இரங்கலுரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக சபதம் செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கடுமையாக விமர்சித்து வந்தார்.
சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம் என்று வாக்குறுதியளித்தே பதவிக்கு வந்தனர். ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ இறுதிக் காலத்தில் தொடர்ந்த ஜனாதிபதி பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் அதிரடியாக 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினார்.
இந்த திருத்தம் ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடுவதற்கு வழிவகுத்தது.
மஹிந்த ராஜபக்ஷ தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக மாதுலுவாவே சோபித தேரர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே விமர்சித்து வந்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் மேலும் பல சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டனர்.
இதற்கமைய பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்புடன் களமிறக்கப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன நான் பதவிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தார். அதுமட்டுமன்றி, நான் ஒரு முறை மாத்திரமே ஜனாதிபதி பதவியை வகிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் 19 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க ஆதரவளித்தார். இருந்தும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
எனவேதான், தான் பதவியிலிருக்கும் போதே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக மாதுலுவாவே சோபித தேரரின் சடலத்துக்கு முன்னால் வைத்து அவர் இவ்வாறு சபதமிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பாக புதிய அரசாங்கம் மேற்கொண்டு வந்த விசாரணைகள் மற்றும் அரசின் போக்கு தொடர்பாக சமீப காலமாக மாதுலுவாவே சோபித தேரர் விரக்தியடைந்திருந்தார்.
இந்த நிலையில், சுகயீனமுற்ற தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரிகைகள் கடந்த வியாழக்கிழமை பூரண அரச மரியாதைகளுடன் பாராளுமன்றத்துக்கு முன்னாலுள்ள மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி.யிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட விமல் வீரவன்சவும் கடந்த வருட ஜே.வி.பி.யிலிருந்து விலகிய சோமவன்ச அமரசிங்கவும் இப்போது ஒன்றாக இணைந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் சோமவன்ச அமரசிங்க ஏற்பாடு செய்திருந்த கார்த்திகை வீரர்கள் தின வைபவத்தில் விமல் வீரவன்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அவர் வைபவத்துக்கு வருகை தந்த போது அவரை சோமவன்ச அமரசிங்க ஆரத்தழுவி வரவேற்றார். இது அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட தேசிய சுதந்திர முன்னணி யின் தலைவர் விமல் வீரவன்ச ஒரு கூட்டணியை உருவாக்கி வருகிறார்.
இந்தக் கூட்டணியில் மஹிந்த தரப்புக்கு ஆதரவான மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகியனவும் மஹிந்த ராஜபக் ஷ தரப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கூட்டணியில் சோமவன்ச அமரசிங்கவின் ஜனதா சேவக கட்சியும் இணைந்து போட்டியிடுமெனத் தெரிய வருகின்றது.
இந்த வைபவத்தில் உரையாற்றிய ஜாதிக சேவக் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஜே.வி.பி. இப்போது மூன்று பேரின் கட்டுப்பாட்டிலுள்ளது. அக்கட்சி மேலும் பிளவுபடும் சாத்தியங்கள் காணப்படுவதாக விமர்சித்துள்ளார்.
சூடு பிடிக்கும் எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரம்
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் அமைச்சர்கள் மட்டத்தில் இப்போது மோதல் உக்கிரமடைந்துள்ளது. எவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பாக பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விவாதத்தில் எவன்கார்ட் ஆயுதக் கப்பலுக்கு ஆதரவாக உரையாற்றிய சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை ராஜினாமா செய்தது தெரிந்ததே.
அமைச்சர்களான திலக் மாரப்பன, விஜேதாச ராஜபக் ஷ, வஜிர அபேவர்த்தன ஆகியோர் எவன் கார்ட் மிதக்கும் கப்பல் விவகாரத்துக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்போது அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவும் இந் தக் குழுவில் இணைந்துள்ளார்.
ஆரம்பம் முதலே எவன்கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரத்துக்கு எதிராக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டாலி சம்பிக ரணவக, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விஷேட அமைச்சரவைக் கூட்டமொன்றும் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எவன்கார்ட் கப்பல் விவகாரத்துக்கு ஆதரவாக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்த அமைச்சர்கள் எவரும் வாய் திறக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை முடிவு களை வெளியிடும் செய்தியாளர் மாநாட் டில் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவன்கார்ட் கப்பல் நிறுவனத்தை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டுள்ளார். இப்போது கடற்படையினர் எவன்கார்ட் கப்பலையும் அதிலுள்ள ஆயு தங்களையும் பொறுப்பேற்கும் நடவடிக் கைகளை ஆரம்பித்துள்ளனர்.
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் விவகாரம்
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் மீது 182 குற்றச் சாட்டுகளை சுமத்தி ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் வழக்கொன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளில் 62 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் தெரி வித்திருந்தது.
இதன் காரணமாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக 2016 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை யொன்றை சமர்ப்பிக்கும் படி உயர் நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.
நீதிமன்றில் ஆஜராகும்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அழைப்பாணை
2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது மஹிந்த ராஜபக் ஷ பயன்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பஸ்க ளுக்கு பணம் செலுத்தாதது தொடர்பாக கொழும்பு நீதிமன்றம் கடந்த வெள்ளிக் கிழமை மஹிந்த ராஜபக் ஷ உட்பட எழு பேரை 2016 மார்ச் மாதம் 10ஆம் திகதி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி அழைப் பாணை பிறப்பித்துள்ளது.
-எஸ். கணேசன்-