நிறை மாதக் கர்ப்பிணியான தனது நண்பியை கழுத்தை வெட்டி படுகொலை செய்த பின்னர், அவரது வயிற்றைக் கத்தியால் கிழித்து அவரது கருப்பபையிலிருந்த குழந்தையைக் களவாடி அதனைத் தனது குழந்தையென உரிமை கோரிய பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
புரோன்க்ஸ் பிரதேசத்தைச் சேர்ந்த அஷ்லி வேட் (22 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தனது நண்பியான அன்ஜிலிக்கியு சட்டனை (22 வயது) தனது வீட்டிற்கு வரவழைத்து படுகொலை செய்து அவரது கருப்பையிலிருந்த குழந்தையை களவாடியுள்ளார்.
அன்ஜிலிக்கியு சட்டனைப் படுகொலை செய்து அவரது குழந்தையை அஷ்லி களவாடி கையில் ஏந்தியிருந்த சமயம், அங்கு வந்த அஷ்லியின் காதலரான ஏஞ்சல் பிரேலோ (27 வயது) அதிர்ச்சியடைந்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அஷ்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி குழந்தையின் தொப்பூழ்க் கொடியும் அதனை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருந்த கத்தியும் அந்த வீட்டின் குளியலறைக்கு அண்மையிலிருந்த ஓடையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் அஷ்லி தானும் கர்ப்பமடைந்திருந்ததாகவும் பிறந்த குழந்தை தன்னுடையது எனவும் ஆரம்பத்தில் பொலிஸாரிடம் உரிமை கோரியிருந்தார்.
அன்ஜிலிக்கியு சட்டன் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி குழந்தையை பிரசவிக்க இருந்த நிலையில், முன்கூட்டியே அவரது வயிற்றிலிருந்து வெட்டி அகற்றப்பட்ட அந்தக் குழந்தை உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்தக் குழந்தை மருத்துவ மனையில் விசேட கவனிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்கு ஜென்னஸிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்ஜிலிக்கியு சட்டனின் வாழ்க்கைத் துணைவரான் பற்றிக் பிரட்லி இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அவரும் அன்ஜிலிக்கியு சட்டனும் கடந்த 8 வருட காலமாக இணைந்து வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
தான் கர்ப்பமாகவுள்ளதாக தனது காதலருக்கு தெரிவித்திருந்த அஷ்லி, தனது பிரசவ தினம் கடந்த 15 ஆம் திகதி என அவருக்கு கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் அன்ஜிலிக்கியு சட்டனின் குழந்தையைக் களவாடி அதனை தனக்குப் பிறந்த குழந்தையாக காண்பிக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அஷ்லி உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.