அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி பாப்பரசர் பிரான்சிஸ் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்க பிலடெல்பியா பிராந்தியத்துக்கு விஜயம் செய்து ஊர்வலமாக சென்ற போது குறிப்பிட்ட கியன்னா என்ற சிறுமியின் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாப்பரசர் வருவதற்கு முன்பு மேற்படி குழந்தையின் மூளையை எம்.ஆர்.ஐ. ஊடுகாட்டும் கருவி பரிசோதனைக்கு உட்படுத்திய போது எடுக்கபட்ட படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட படங்களில் அந்தக் குழந்தையின் மூளைக் கட்டியின் அளவு கணிசமான அளவில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது அந்தக் குழந்தையின் உடல் நலம் ஆரோக்கிய நிலைக்கு திரும்பியுள்ளதாக அந்தக் குழந்தையின் தாயான கிறிஸ்டன் மஸ்சியன்தோனியோவும் தந்தையான ஜோயும் தெரிவித்தனர்.
பாப்பரசர் தமது குழந்தையின் தலையில் முத்தமிட்டதாலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கியன்னாவுக்கு ஏற்பட்டிருந்த மூளைக் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.