போரில் உயிரிழந்த புலிகளின் உறுப்பினர்களுக்கு, அவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்த சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

”நவம்பர் மாதத்திலேயே உயிர் நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டே பொப்பி மலர் அணியும் வழக்கமும் வந்தது.

அந்த வகையில் தான் நானும் பொப்பி மலர் அணிந்து வீரர்களின் மரணத்தை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தேன்.

இதன் மூலம் ஒவ்வொரு போராளி அல்லது வீரரும் நினைவு கூரப்பட வேண்டும்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்றல்லாது நினைவு கூரல் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

ஆழியவளை, உடுத்துறை பிரதேசங்களுக்கு சென்றிருந்த போது, அங்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதையும், அவ்விடங்கள் தற்போது தென்னந்தோப்புக்களாக மாறியுள்ளதையும் காண முடிந்தது.

நவம்பர் மாதத்தில் இறந்த ஆத்மாக்கள் நினைவு கூரப்படுகின்ற நிலையில், ஆழியவளை மற்றும் உடுத்துறை பிரதேசங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு தமது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை இல்லாது செய்யப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தினால் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் ஆயுதங்களை ஏந்தவில்லை. பிரிவினையையும் கோரவில்லை. மாறாக இறந்து போன உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறே கேட்கிறோம்.

போரின் போதும், போர் காரணங்களாலும் மரணித்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply