ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இந்திய பெண் பிரபாவின் நினைவாக, கடைசியாக அவர் நடந்து சென்ற பாதைக்கு அவரது பெயரை சிட்னி நகர நிர்வாகம் சூட்டியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் பிரபா அருண்குமார். என்ஜினீயரான இவர் கடந்த மார்ச் மாதம் சிட்னி நகரில் ஒரு நடைபாதையில் தன்னந்தனியாக நடந்து சென்றபோது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் யார்?, எதற்காக பிரபா கொல்லப்பட்டார்? என்பது இதுவரை தெரிய வரவில்லை.
இந்த நிலையில் பிரபாவின் 42-வது பிறந்தநாளையட்டி அவருடைய நினைவாக அவர் கடைசியாக நடந்து சென்ற சாலைக்கு ‘பிரபா நடைபாதை‘ என்ற பெயரை சிட்னி நகர நிர்வாகம் சூட்டியது.
இதற்கான வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது அங்கு பிரார்த்தனையும், மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. சிட்னி நகர நிர்வாக அழைப்பின்பேரில், இந்தியாவில் இருந்து பிரபாவின் கணவர் அருண்குமார், மகள் மற்றும் பிரபாவின் குடும்பத்தினர் சிட்னி சென்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.