கள்ளக்காதல் என்ற இந்த வார்த்தை இன்று எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றது. அதுவும் திருமணமாகி குடும்பம், பிள்ளைகள் என்று ஆன பிறகு மனைவிக்குத் தெரியாமல் கணவனும், கணவனுக்கு தெரியாமல் மனைவியும் என்று இரகசிய தொடர்புகளை பேணி வரும் பல சம்பவங்கள் இன்றும் தொடர்கதையாக தொடர்ந்துகொண்டே செல்கின்றன.
சில நேரங்களில் இத்தகைய சம்பவங்கள் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் சுவாரஷ்யமாக இருக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் பல குடும்பங்களில் நிம்மதியின்மை, சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு இத்தகைய இரகசிய தொடர்புகள் காரணமாக அமைகின்றன.
கடந்த காலங்களிலும் ‘குற்றம்’ பகுதிகளின் ஊடாக இத்தகைய இரகசிய காதல் தொடர்புகளினால் ஏற்பட்ட கொடூர சம்பவங்கள் தொடர்பாக நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்..
அந்தவகையில் இவ்வாரம் ‘குற்றம்’ பகுதியில் இடம்பெறுவதும் இரகசிய காதல் தொடர்பு ஒன்றினால் இரண்டு குடும்பங்கள் சின்னாபின்னமாகிய சம்பவம் பற்றியதாகும்.
செவ்வந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) அக்மீமன பிரதேசத்தில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாய். இவளுடைய கணவர் சம்பத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தார். எனவே கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்று மகிழ்ச்சிகரமாகவே குடும்ப சக்கரம் நகர்ந்தது.
சம்பத்தின் வருமானம் குடும்பத்தை கொண்டு நடத்த போதுமானதாகவிருந்தது. சம்பத் தனது மனைவியையும், குழந்தைகளையும் எந்தவித குறையுமில்லாமல் பார்த்துக் கொண்டான்
செவ்வந்தி தொழிலுக்காக வெளியில் எங்கும் செல்லவில்லை. செவ்வந்திக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சகலதையும் சம்பத் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுப்பான்.
எனினும், குழந்தைகளுக்கு சுகவீனம் ஏற்பட்டால் மட்டும் காலி, கராபிட்டிய வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்து வருவதை செவ்வந்தி. வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகளில் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டிருக்கவே குழந்தையை தூக்கிக்கொண்டு செவ்வந்தி காலி, கராபிட்டிய வைத்தியசாலைக்கு சென்றாள்.
இதன்போது வைத்தியரை சந்திப்பதற்கு மிக நீண்ட வரிசையில் நின்ற செவ்வந்திக்கு இந்திக (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
செவ்வந்திக்கு அடுத்தபடியாக வைத்தியரை சந்திப்பதற்கு வரிசையிலிருந்த இந்திக செவ்வந்தியின் கையிலிருந்த குழந்தையுடன் கொஞ்சும் மொழியில் உரையாடத் தொடங்கினான்.
குழந்தையும் தனது கள்ளம் கபடமற்ற மழலை சிரிப்பிலும், மொழியிலும் இந்திகவுடன் மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தது. இதனிடையே இந்திக செவ்வந்தியுடனும் கதைக்க ஆரம்பித்தான்.
“தங்கச்சி நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?” என்று கேட்டான். அதற்கு, செவ்வந்தி “நான் இங்கிருந்து சற்று தொலைவிலிருக்கின்றேன்.” என்று பதிலளித்ததுடன் தொடர்ந்து செவ்வந்தி “அண்ணா உங்களுக்கு என்ன வருத்தம் மருந்து எடுக்க வந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினாள். அதற்கு இந்திக
“என்னுடைய இந்த ஒரு கை சில நாட்களாகவே வலிக்கின்றது. அது தான் வைத்தியரிடம் காட்டி மருந்து கொஞ்சம் எடுப்போம் என்று வந்தேன்” என்று பதிலளித்தான்.
அதனைத் தொடர்ந்து செவ்வந்தி “அண்ணா நீங்கள் திருமணம் முடித்து விட்டீர்களா? என்று கேட்டாள். அதற்கு இந்திக- “இல்லை. எனது குடும்பத்தில் நான் ஒரே ஆண் பிள்ளை என்பதால் எனக்கு நிறைய குடும்ப பொறுப்புகள் இருந்தன.
எனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கடமை எனக்கிருந்தது. எனவே அந்த கடமைகளை செய்து முடிக்க வேண்டும் என்பதால் நான் திருமணத்தை பற்றி சிந்திக்கவில்லை. இப்போது அந்த கடமைகளும் முடித்துவிட்டன.
இனிதான் யாராவது நல்ல பெண்பிள்ளையாய் பார்த்து திருமணம் செய்யவேண்டும்” என்று கூறியதுடன், செவ்வந்தியின் குடும்ப விபரங்களையும் கேட்டறிந்து கொண்டான் இந்திக செவ்வந்தியும் தனது கணவர், குழந்தைகள் பற்றிய விபரங்களை இந்திகவுடன் பரிமாறிக் கொண்டாள்.
அதன்பின், இருவரும் வரிசையாகச் சென்று வைத்தியரை சந்தித்து நோய் நிலைமையை சொல்லி மருந்து எடுப்பதற்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, இந்திக, “நீ உன்னுடைய மருந்து பற்றுச்சீட்டை தா………நான் உனக்கும் சேர்ந்து மருந்தை எடுத்து வருகின்றேன். நீ போய் அங்கே அமர்ந்து இரு நான் வருகின்றேன்” என்று கூறி மருந்து எடுப்பதற்கான பற்றுச்சீட்டை செவ்வந்தியிடமிருந்து வாங்கிக் கொண்டு சென்றான்.
அதன்படி, இந்திக மருந்துகளை வாங்கி வரும் வரை செவ்வந்தி காத்திருந்து மருந்துகளை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு செல்ல ஆயத்தமானாள்.
எனினும், இந்திகாவின் மனம் செவ்வந்தியிடமிருந்து பிரிய இடம்கொடுக்கவில்லை. இந்திக விடாது செவ்வந்தியை பின்தொடர்ந்து சென்று ” தங்கச்சி வாங்க குளிர்பானம் ஏதாவது வாங்கி குடித்துவிட்டு செல்வோம்.” என்று செவ்வந்தியை அழைத்தான்.
அவளும் அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் சம்மதித்தாள். அதன்பின் இருவரும் வைத்தியசாலையிலிருந்த சிற்றுண்டிசாலைக்குச் சென்று குளிர்பானம் அருந்தினார்கள்.
இதன்போது இந்திக செவ்வந்தியிடம் வேண்டுகோள் ஒன்றினையும் விடுத் தாள்.
“உன்னோடு தொடர்ந்து நட்புக்கொள்ள எனக்கு ஆர்வமாகவிருக்கின்றது. நீ உன்னுடைய தொலைபேசி இலக்கத்தை தருவாயா? ” என்று கேட்டான்.
அதற்கு செவ்வந்தி “சரி தருகின்றேன். ஆனால், எக்காரணம் கொண்டும் நான் உனக்கு மிஸ்கோல் தரமால் நீ எனக்கு கோல் எடுக்கக்கூடாது. என்னுடைய கணவர் இருக்கும் நேரத்தில் நீ கோல் எடுத்தால் எனக்கு வீட்டில் பிரச்சினையாகிவிடும்.” என்று கூறி தொலைபேசி இலக்கத்தை கொடுத்து விட்டு இந்திகவிடமிருந்து விடைபெற்றுச் சென்றாள் செவ்வந்தி.
அதன்பின் ஒரு நாள் கணவர் சம்பத் வீட்டில் இல்லாத நேரத்தில் செவ்வந்தி இந்திகவின் தொலைபேசி இலக்கத்துக்கு மிஸ் கோல் ஒன்றினை வைத்தாள்.
அதனைதொடர்ந்து, செவ்வந்தியின் மிஸ்கோல் கிடைக்கப்பெற்று சில நிமிடங்களிலேயே இந்திக செவ்வந்திக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
அன்று தொடக்கம் இந்திகவுக்கும், செவ்வந்திக்கும் இடையில் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. கணவர் சம்பத் வீட்டில் இல்லாத நேரங்களில் மிஸ் கோல் வைத்து தொலைபேசியில் உரையாடுவாள்.
அதுமட்டுமின்றி இந்திகவை வீட்டுக்கு அழைத்துக்கொள்ளவும் அவள் தவறவில்லை. எனினும் இந்திக வந்திருக்கும் நேரத்தில் எதேச்சையாக கணவர் சம்பத் வந்து விட்டால் வீட்டில் பிரச்சினையாகி விடுமோ என்ற பயமும் இருவருக்குள்ளும் இருந்தது.
எனவே இருவருக்குமிடையில் இருந்து வரும் இரகசிய உறவினை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு செல்லும் முகமாக செவ்வந்தி யோசனையொன்றை இந்திகவுக்கு கூறினாள்.
“நீ எப்படியாவது என்னுடைய கணவரின் நண்பராகு” அப்போது எந்தவிதமான தங்கு தடையுமின்றி இந்த வீட்டுக்கு நீ வந்து போகலாம்.” என்று கூறினாள்.
அவனும் அதற்கு சம்மதம் தெரிவித்தான். அதன்படி எப்படியோ, சம்பத்தை தனது நண்பராகிக் கொண்ட இந்திக நாளடைவில் அவனை மதுபழக்கத்துக்கு அடிமையாக்கினான்.
பல நாட்கள் தனது வீட்டுக்கு விருந்து என்று அழைத்துச் சென்று குடிக்கசொல்லி தொந்தரவு செய்து அவன் குடிப்பதை பார்த்து ஆனந்தம் கொள்வான். அதுமட்டுமின்றி, தனது மனைவி, பிள்ளைகளையும் சம்பத்துக்கு அறிமுகப்படுத்தினான் இந்திக. எனினும், இந்திக திருமணமாகாதவன் என்றே செவ்வந்தி நினைத்திருந்தாள். ஆனால் உண்மை அதுவல்ல.
மேலும் சம்பத், இந்திகவையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது மனைவி குழந்தைகளை அறிமுகப்படுத்தினான். இதன்போது செவ்வந்தியும் இந்திகவை முன்பின் அறியாதவளைப் போல் தனது கணவர் முன் நடித்துக்கொண்டாள்.
எனவே இந்திகவினதும் செவ்வந்தியினதும் திட்டத்தின்படி சம்பத்துக்கும் இந்திகவுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு அவர்களின் இரகசியத் தொடர்புகளை பேணுவதற்கு உறுதுணையாகவிருந்தது.
எனினும், வெகு நாட்கள் செல்வதற்கு முன்பு இவ்விடயம் எப்படியோ இந்திகவின் மனைவிக்கு சந்தேகத்தை உண்டுபண்ணியது. பல நாள் இந்திக இரவு நித்திரையிலிருந்தால் கூட செவ்வந்தியின் தொலைபேசியிலிருந்து மிஸ் கோல் வந்தது.
தொலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று கதைப்பான். எனவே, தனது கணவரின் நடத்தைகளை உன்னிப்பாக அவதானித்த இந்திகாவின் மனைவி, அவனை நோக்கி சந்தேகத்துடன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.
“எந்த நேரம் பார்த்தாலும் நீங்கள் தொலைபேசியும் கையுமாக தான் அலைகின்றீர்கள் யாருடன் இப்படி கதைக்கின்றீர்கள்?
பலநாட்களாக நீங்கள் நடுநிசியில் வெளியில் நின்றுதொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதைக்கூட நான் பார்த்திருக்கின்றேன். என்ன? யாரையாவது புதிதாக காதலித்து வருகின்றீர்களா?” என்று அவனை பார்த்துக் கேட்டாள். எனினும், இந்திக “ஏய்.. உனக்கு என்ன பைத்தியமா? நான் உனக்கு துரோகம் செய்வேனா?” என்று கூறி சமாளித்தான்.
மேலும் இந்திக சம்பத்துக்கும், தனக் கும் இருந்து வரும் நட்பை காரணம் காட்டி அடிக்கடி செவ்வந்தியை பார்க்க சென்றான். அங்கு பல மணி நேரம் இந்திகவும், செவ்வந்தியும் உல்லாசமாக தமது பொழுதை கழித்தார்கள்.
எனி னும், அக்கம் பக்கத்திலிருந்திருப்பவர் கள் இது தொடர்பாக தனது கணவருக்கு தெரிவித்துவிட்டால் தனது குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் செவ்வந்திக்கு இருந்தது.
இதனால் சிலசமயங்களில் இந்திக வந்து செல்லும் நாட்களில் கணவன் தொழிலிலிருந்து வந்தவுடனே “உங்களை சந்திப்பதற்காக இந்திக அண்ணா வந்தார். நீங்கள் வீட்டிலில்லை என்று கூறியவுடன் சென்றுவிட்டார்” என்று கூறிவிடுவாள். சம்பத்தும் அதை எந்தவித சந்தேகமும் இன்றி ஏற்றுக்கொண்டான்.
இவ்வாறு இந்திக தனது மனைவிக்கு தெரியாமலும், செவ்வந்தி தனது கணவருக்கு தெரியாமலும் பல நாட்கள் தமது இரகசிய தொடர்புகளை பேணிவந்தார்கள். ஒரு கட்டத்தில் ஒருவர் இன்றி ஒருவரால் இருக்க முடியாத நிலையும் உருவானது.
இருப்பினும், இது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சம்பத் இது தொடர்பாக எப்படியோ தெரிந்து கொண்டான். அன்று தொடக்கம் சம்பத்தின் நிம்மதி பறிபோனது. சதா தனது மனைவியுடன் முரண்பட ஆரம்பித்தான்.
அவளுடைய ஒவ்வொரு அசைவையும் சந்தேகப் பார்வையுடனே பார்த்தான். அதுமட்டுமின்றி “நீ குடும்பத்தை சீரழிப்பவள். இந்த குடும்பத்தை மட்டுமல்ல அவனுடைய குடும்பத்தையும் சேர்ந்து சீரழிக்கின்றாய்.
அவனுக்கும் மனைவி, பிள்ளைகள் என்று இருக்கின்றார்கள்” என்றெல்லாம் திட்டித்தீர்த்தான். இதன்போதே இந்திக ஏற்கனவே திருமணமானவன் என்பதை செவ்வந்தி அறிந்துகொண்டாள்.
எனினும், அதன்பின்னும் செவ்வந்தி இந்திகவை விட்டு விலகிச் செல்லும் தீர்மானத்துக்கு வரவில்லை. கணவனின் ஏச்சையும், பேச்சையும் வாங்கிக் கொண்டு மறைவான இடங்களில் வைத்து இந்திகவை சந்தித்து தனது இரகசியத் தொடர்புகளை பேணி வந்தாள்.
செவ்வந்தியை பொறுத்தவரை கணவர் அவளுக்கு வழங்கும் அறிவுரைகள் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல் பயனற்றதாகவிருந்தது.
எனவே, சம்பத் செவ்வந்தியை வெறுக்க ஆரம்பித்தான். இறுதியில் “உனக்கு என்னோடு இருக்க முடியாது என்றால், பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவனோடு சென்றுவிடு. ” என்று கூறிவிட்டான்.
இந்நிலையில் கடந்த ஏழாம் திகதி செவ்வந்தியின் தொலைபேசியிலிருந்து சம்பத்தினால் இந்திகாவின் தொலைபேசிக்கு குறுந்தகவலொன்று பரிமாறப்பட்டது.
அக்குறுங் தகவலில் “சம்பத் நாளைக்கு வீட்டில் இல்லை. நீ காலை 9 மணியளவில் வந்துவிடு” என்று இருந்தது. எனினும் அது செவ்வந்தியினால் அனுப்பப்பட்ட குறுந்கவல் அல்ல. இந்திகவை வீட்டுக்கு வரவழைப்பதற்காக சம்பத் அனுப்பிய குறுந்தகவல். ஆயினும் அதை இந்திக அறிந்திருக்கவில்லை.
குறுந்தகவலின் படி அடுத்த நாள் காலை சரியாக 9 மணியளவில் செவ்வந்தியை சந்திக்க வந்தான் இந்திக. அப்போது சம்பத் வீட்டிலிருந்தான். அதை இந்திக சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சம்பத் இந்திகாவின் முன்நின்றுகொண்டு “ஏய் என்ன பார்க்கின்றாய். நான் எப்படி இந்த நேரம் வீட்டில் இருக்கின்றேன் என்று பார்க்கின்றாயா? உன்னை எப்படியாவது கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று தான் உன் அருமை காதலி அனுப்புவது போல் உனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி இங்கு வரவழைத்தேன். சரி போகட்டும் உட்காரு பேசுவோம் ” என்று கூறினான் சம்பத்.
இந்திகவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனினும் பிரச்சினையில்லாமல் சமரசமாய் பேசுவோம் என்ற முடிவெடுத்து கதிரையில் அமர்ந்தான்.
தொடர்ந்து சம்பத் “இங்க பாரு இனிமேல் செவ்வந்தியுடன் என்னால் குடும்பம் நடத்த முடியாது. உன்னோடு இருக்கும் தொடர்பினை துண்டித்து விடுமாறு பல முறை அவளுக்கு அறிவுரை வழங்கினேன்.
எனினும் அவள் அதை ஏற்பதாய் இல்லை. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்? ஆகவே பிள்ளைகளையும், செவ்வந்தியை அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு போவோம் அங்கு வைத்து பிள்ளைகளையும், அவளையும் நீயே பொறுப்பெடுத்துக்கொள்.” என்று கூறினான்.
அதற்கு இந்திக “ஏய் நான் எப்படி உன்னுடைய மனைவியையும், பிள்ளைகளையும் பொறுப்பெடுத்துக் கொள்வது. எனக்கும் மனைவி, பிள்ளைகள் என்று இருக்கின்றார்கள்.” என்று பதிலளித்தவாறு கதிரையிலிருந்து எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டான்.
எனினும் சம்பத் அவனை விடுவதாய் இல்லை. “ஏய் எங்கே போகின்றாய். என்னால் உன்னை அவ்வளவு சீக்கிரமாய் போகவிட முடியாது. வா பொலிஸ் நிலையத்துக்கு போவோம்.” என்று கூறி இந்திகவை இடை மறித்தான்.
எனினும் இந்திக சம்பத்தின் பிடியிலிருந்து தப்பிச்செல்ல பலவாறு முயற்சித்தான். ஆயினும் சம்பத் விடுவதாய் இல்லை. இதனால் இருவருக்குமிடையில் மிக நீண்ட நேரம் வாக்குவாதம் தொடர்ந்து.
இறுதியில் சம்பத் சமையலறையிலிருந்து கத்தியொன்றையும் எடுத்து வந்து இந்திகவை தாக்க முற்பட்டான். சம்பத்தின் கையிலிருந்த கத்தி இந்திகவின் கழுத்துப் பகுதியை பதம் பார்த்தது.
இந்திக வலி தாங்க முடியாமல் பலமாக கத்தியவாறு மயங்கி கீழே வீழ்ந்தான். இதன்போதே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சம்பவ இடத்தைநோக்கி வந்தார்கள்.
அதுமட்டுமின்றி, இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த இந்திகவை அயலவர்கள் அனைவரும் சேர்ந்து காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்ந்தார்கள். எனினும் இந்திகவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
சிகிச்சை பலனளிக்காது இந்திக உயிரிழந்தான். மேலும் இக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சம்பத்தை அவனது வீட்டில் வைத்து அக்மீமன பொலிஸார் கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றினர்.
மேலும் இது தொடர்பாக சம்பத்தை பொலிஸார் விசாரித்த போது “சேர்…. இந்திகவை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்து நான் கொலை செய்யவில்லை.
இந்திகவுடனான இரகசிய தொடர்பினை துண்டித்து விடுமாறு பலமுறை எனது மனைவிக்கு அறிவுரை வழங்கினேன். ஆயினும் அவள் கேட்பதாய் இல்லை.
இதனால் அவளை நான் மனத்தால் வெறுத்துவிட்டேன். இரண்டு பேரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து ஒப்படைக்கத் தான் அவனை வீட்டுக்கு வரவழைத்தேன்.
எனினும் அவன் வர மறுத்து விட்டதால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றி சமையலறைலியிருந்த கத்தியை எடுத்து அவனை தாக்கினேன். அவன் இறந்துவிட்டான். குருவிக் கூடுபோல் இருந்த என் குடும்பம் அந்த பாவியினால் சீரழிந்து விட்டது” என்று கண்ணீர் மல்க தெரிவித்தான்.
ஆகவே காதல், ஆசை, காமம் என்பன மனித உணர்வுகள் தான். இருப்பினும் அவை எமது கலாசார, பண்பாட்டு வரையறைகளுக்குட்பட்டதாக அமையவேண்டும். திருமணம், குடும்பம், பிள்ளைகள் என்று ஆன பிறகு இத்தகைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது வீணான பிரச்சினைகளுக்கும், இழப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதே யதார்த்தம்.
மூலம்: சிங்கள நாளேடு