திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள கோத்தா முகாம் தொடர்பில் முழுமையான விசாரணை வேண்டுமென நான் பாராளுமன்றத்தில் கூறியபோது அத்தகையதொரு முகாமில்லையென பிரதமர் மறுத்தார்.
ஆனால், இன்று ஐ.நா. வின் காணாமல்போனோர் குறித்த செயற்குழுவினர் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இரகசிய தடுப்பு முகாமொன்று இருப்பதை நாங்கள் அவதானித்தோம் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு அரசாங்கமும் பிரதமரும் என்ன பதில் கூறப்போகின்றார்கள்?
இவ்வாறு வினாவெழுப்பினார் ஈ.பி.ஆர்.எல்.எப். பின் தலைவரும் முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இரகசிய தடுப்பு முகாமொன்று இருப்பதை நாங்கள் அவதானித்தோம் என ஐ.நா.வின் காணாமல்போனோர் குறித்த செயற்குழுவின் பிரதிநிதிகள் தமது விஜயத்தையும் விசாரணைகளையும் முடித்த பின்னர் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் முகாம் குறித்து கூறிய விடயம் தொடர்பாக விசாரித்த போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நான் கடந்த பெப்ரவரி மாதம் பாராளு மன்றில் கோத்தா முகாம் குறித்த உண்மையை வெளியிட்டிருந்தேன்.
திருகோணமலையில் இருக்கக் கூடிய கடற்படை முகாமில் 35 குடும்பங்களும் அதே இடத்தில் கோத்தா முகாம் என்று அழைக்கப்படுகின்ற பிறிதொரு முகாமில் 700 பேருக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு என்ன நடந்தது? கோத்தா முகாம் தொடர்பில் முழுமையான விசாரணை வேண்டும். சாட்சிகளுக்கு உயிர் உத்தரவாதம் தரப்படுமானால் சாட்சியங்களையும் வழங்க தயாராகவுள்ளோமென நான் பாராளுமன்றில் தெரிவித்திருந்தேன்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் தான் இராணுவத்தளபதியிடமும் கடற்படைத் தளபதியிடமும் விசாரித்ததாகவும் அவ்வாறான முகாம்கள் எதுவும் இல்லையென அன்று கூறினார்.
இன்று என்ன நடந்துள்ளது? காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை இலங்கைக்கு விஜயம் செய்து மேற்கொண்ட குழுவினரின் பிரதிநிதிகளே திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இரகசிய தடுப்பு முகாமொன்று இருப்பதை நாங்கள் அவதா னித்தோம்.
நாம் அவதானம் செலுத்திய பகுதியில் 12 அறைகள் எவ்வித வசதிகளுமின்றி காணப்பட்டன. 2010 ஆம் ஆண்டுவரை இதில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நாம் சந்தே கம் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது? யுத் தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் 2009 மே இற்கு பின்னும் சித்திரவதைகளும் கடத்தல்களும் காணா மல் போனமையும் இடம்பெற்றுள்ளது என்பது நிரூபணமாகிறது.
மேற்படி முகாமில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டு கொடிகாமம் பகுதிக்கு வந்திருப்பதை நான் நன்றாக அறிவேன்.
எனவே, ஐ.நா. குழுவினர் கூறிய அனைத்து விடயங்களும் உண்மையானவையே. குறித்த முகாமில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது? விடுதலை செய்யப்பட்டார்களா? இல்லையா? என்ற இரகசியம் யாருக்குமே தெரியாது.
விட்டதற்கும் சாட்சிய மில்லை. சுருக்கமாகக் கூறப் போனால் எதற்குமே பதிவில்லை.
ஆனால், இது தொடர்பில் புலனாய் வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றார்களென்று தற்பொழுது அரசாங் கம் கூறுகிறது.
ஏற்கனவே, இவ்வாறானதொரு முகாமில்லை. விசாரணைகள் அவசியமற்றவையெனக் கூறி வந்த அரசாங்கம், தற்பொழுது விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கிறோமென முன்னுக்குப் பின் முரணாக கூறி வருகிறது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் திருகோணமலை கடற்படை முகாம் தொடர்பில் ஐ.நா. நிபுணர்கள் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை வெளியுறவு அமைச் சின் பேச்சாளர் மஹசினி கொலன்னே உறுதியளித்துள் ளார்.
திருகோணமலையில் இயங்கிய இரகசிய முகாம் தொடர்பில் ஐ.நா. குழுவினர் இன் னும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். 2008ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்ட 11 பேர் திருகோணமலையில் இயங்கிய மேற்படி முகாமுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அங்கு வைத்து கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது தொடர்பிலும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கானோர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் இதுவரை விசாரணைகள் நடத்தப்படவுமில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவுமில்லை.
எனவே, அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு வாக்குறுதி அளித்தவாறு காணா மல்போனோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்த வேண்டியது அவசியமாகுமெனவும் ஐ.நா. குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் குறித்து அக்குழுவினர் இன்னும் பல அவதானிப்புக்களை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
அது யாதெனில், கடற்படை தளத்தடி நிலத்தடி தடுப்பு முகாமில் பெரும் எண்ணிக்கையானோர் நீண்ட காலம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டிருக்கலாம். இவ்விடயம் உயர்மட்டங்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
சித்திரவதைக்கென்றே மாறுபட்ட விதத்தில் தடுப்பு முகாம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேற்படி முகாம் சுவர்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களால் பல கூற்றுக்கள் எழுதப்பட்டுள்ளன.
2009ஆம் ஆண்டிலிருந்தே விசாரணைகள் ஆரம் பிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதும் இரகசிய முகாமில் 2010 வரை பலர் தடுத்து வைக்கப்பட்ட தடயங்கள் தெரியப்படுகிறது என ஐ.நா. குழுவினர் தமது சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றனர்.
ஏலவே, இவ்வாறானதொரு முகாம் எங்கும் இல்லையென அடித்துக் கூறிய இந்த அரசாங்கமும் பிரதமரும் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள் என் பதை பொறுத்திருந்து பார்ப்போமென சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.