வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார்.
இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் தியாகி செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறு கேட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி; வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறமாட்டாது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ஆ.க.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே, நாளைய தினம் பாடசாலைகள் இடம்பெறமாட்டாது அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தினத்திற்கு பதிலாக பாடசாலை இடம்பெறும் தினம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவன் தற்கொலை: யாழ் பல்கலைகழக மாணவர்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு பேரணி.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும் என குறித்த மாணவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இன்று காலை 7.45 அளவில் காங்கேசன்துறையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தின் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் யாழ்ப்பாணம் – கொக்குவில் பாடசாலையொன்றில் கல்வி பயில்பவர் என ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தொடருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசியல் கைதிகளுக்காக தமது உயிரை மாய்த்து கொண்ட மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு பேரணி ஒன்றையும், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.