வடக்கில் நாளை விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க, சிறிலங்கா காவல்துறை அனுமதிக்காது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாத அமைப்பைக் கொண்டாடுவது அல்லது அதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை தனியாகவோ, குழுவாகவோ ஒழுங்கமைப்பதும், பங்கேற்பதும், சட்டவிரோதமாகும்.

மாவீரர் நாள் என்பது, விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளில் ஒன்று. புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இத்தகைய நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது.

வவுனியாவில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது குறித்து விசாரித்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

maveerar-posterஅதேவேளை யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், பல்கலைக்கழகத்துக்குள் நுழைய காவல்துறைக்கு அனுமதி இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மாவீரர் நாள் தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, வடக்கில் மட்டுமன்றி, நாடு முழுவதும் அமைதியான, சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படும் நிலைமையே உள்ளது.

இதுகுறித்து கண்காணிக்கப்படும். அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு, காவல்துறைக்கு உதவுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நாளை மாவீரர்களை அமைதியான முறையில் நினைவுகூருமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்தார்.

Share.
Leave A Reply