யாழ். கோண்டாவில் பகுதியில் மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, கடிதத்தில் உள்ள கையெழுத்து குறித்த மாணவனுடையதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மாணவன் தற்கொலை செய்துகொண்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் பூதவுடல் இன்று அக்கினியல் சங்கமமானது.
யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் மாணவரான ராஜேஸ்வரன் செந்தூரன் நேற்று (26) காலை
ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவ இடத்திற்கு சற்றுத் தொலைவில் இருந்து மீட்கப்பட்ட புத்தகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கடிதமொன்று இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
உயிரிழந்த செந்தூரனின் பூதவுடல் யாழ். கோப்பாய் வடக்கில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து பூதவுடல் பாடசாலை மாணவர்களால் சுமந்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக செந்தூரன் கல்வி கற்ற தனியார் கல்வி நிறுவனமொன்றில் வைக்கப்பட்டது.
அங்கிருந்து கந்தன் காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இராஜேஸ்வரன் செந்தூரனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, இராஜேஸ்வரன் செந்தூரனின் அதிர்ச்சி தரும் தற்கொலை காரணமாக இன்று வட மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
இன்றைய பாடசாலை விடுமுறைக்கான பதில் வகுப்பு தொடர்பிலான மாற்று ஒழுங்குகளை வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிக்கவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டெடுக்கப்பட்ட கடிதத்தை நீதிமன்ற உத்தரவுடன் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களைப் பரிசோதனை செய்யும் பிரிவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.