சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது.
சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டம் – அம்னெஸ்டி
55 பேர் “பயங்கரவாதக் குற்றங்களுக்காக” மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது.
ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில், 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக்க் கூறப்பட்டிருந்த்து.
இதில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஷியா முஸ்லீம் பிரிவினரும் அடங்குவர் என்று கருதப்படுகிறது.
இந்த ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட எண்ணிக்கையில் காணப்பட்ட அதிகரிப்பை வைத்து பார்க்கும்போது, இந்த செய்திகளை உண்மையாக இருக்கக்கூடுமென்று கருதாமல் இருக்கமுடியவில்லை என்று அம்னெஸ்டி கூறியது.
குறைந்த்து 151 பேராவது இந்த ஆண்டு இதுவரைக்கும் சௌதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று அம்னெஸ்டி நம்புகிறது.
இதுதான் 1995லிருந்து பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும்.
2014ம் ஆண்டில் 90 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்னும் சில தினங்களில் மரண தண்டனையை எதிர்நோக்குபவர்கள், அல் கைதா “பயங்கரவாதிகள்” மற்றும் அவாமியா பகுதியை சார்ந்தவர்கள் என்று சவுதி செய்தித்தாள்கள் கூறுகின்றன.
அரசைக் கவிழ்க்க இந்த அல் கைதா தீவிரவாதிகள் முயன்றதாக ‘ஓக்காஸ்’ பத்திரிகை தெரிவிக்கிறது.
“தீவிரவாத ஒழிப்புப் போர்வையில் பழிவாங்கல்கள்”
சவுதி அரபிய அதிகாரிகள் தீவிரவாதத்தை ஒழிக்கும் போர்வையில், அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுகின்றனர் என்று அம்னெஸ்டியின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் துணை இயக்குனர், ஜேம்ஸ் லின்ச், கூறியுள்ளார்.
அவமியா பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும், பஹரெனில் கலவரத்தில் ஈடுபட்டதிற்காகவும் கொல்லப்படவிருக்கிறார்கள்.
அவாமியவை சேர்ந்த 6 ஷியா பிரிவினருக்கு நியாயமற்ற விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி தெரிவிக்கிறது.
அந்த 6 பேரில் மூன்று பேர் குழந்தைகளாக இருக்கும் போது செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் குற்றங்களை ஒப்புக்கொள்வதற்காக சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அம்னெஸ்டி கூறுகிறது.
ஆனால் எல்லா மரணதண்டனைகளும் ஷாரிய முறைப்படியும் நியாயமான விசாரணை மூலமாகவும் நடப்பதாக சௌதி அரபியா வாதிடுகிகிறது.