75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ், பாரதிராஜாவின் “கடலோரக் கவிதைகள்” மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். 100-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன், “வேதம் புதிது”, “பெரியார்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற படங்களில் மாறுபட்ட குணச்சித்திர வேடங்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.

படிக்கிற நாட்களில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர் சத்யராஜ்.

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“அடிப்படையில் எங்களுடையது விவசாயக் குடும்பம். கோவை டவுன் பகுதியில் எங்கள் வீடு இருந்தது. அப்பா டாக்டராக இருந்தார். என் சிறு வயதில் அப்பா -அம்மா இருவரும் கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டார்கள். நான் வளர்ந்ததெல்லாம் அம்மாவிடம்தான்.

சிறு வயதில் சினிமாதான் என் பொழுதுபோக்கு. அந்த வயதில் அதிகம் பார்த்தது எம்.ஜி.ஆர். படங்கள்தான். தனது வீரதீர சாகச நடிப்பால் என்னை எம்.ஜி.ஆர். வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தார்.

நான் 5-வது படிக்கும்போது எம்.ஜி.ஆர். நடித்த “வேட்டைக்காரன்” படத்தை எத்தனை தடவை பார்த்தேன் என்பது எனக்கே நினைவில்லை.

பள்ளிப்படிப்பு முடித்ததும் கோவை அரசு கலைக்கல்லூரியில் “பி.எஸ்.சி”யில் சேர்ந்தேன். இதில் `பாட்டனி’யை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். படிப்பில் பெரிசாக சொல்ல ஒன்றுமில்லை. பாஸ் பண்ணினதே பெரிய சாதனைதான்!

அப்போது, அந்தப் படிப்புக்கு அதிகபட்சமாக மாதம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும். ஆனால், அதுகூட கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. வேலை பார்த்துத்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை.

ஏற்கனவே, வசதியான குடும்பம். ஆனால் என் சின்ன வயசில், குடும்ப சூழல் காரணமாக நிலபுலன்களையெல்லாம் விற்றுவிட்டதால், விவசாயத்தில் இறங்க முடியாத நிலை.

எனக்கு அண்ணன் முறையான `மாதம்பட்டி’ சிவகுமார் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்தார். இவர் தவிர, எங்க ஊரில் இருந்து நடிக்க வந்தவர் நடிகர் சிவகுமார். இவர்கள் இரண்டு பேரும் தான் எனக்குத் தெரிந்த சினிமா சம்பந்தப்பட்டவர்கள்.

நான் பார்த்த முதல் ஷூட்டிங்கே சிவகுமார் அண்ணன் நடிச்ச “அன்னக்கிளி” படம்தான். பண்ணாரியம்மன் கோவிலை அடுத்த `தெங்கு மரகடா’ என்ற கிராமத்தில், “அன்னக்கிளி’ படத்தின் ஷூட்டிங் நடந்தது.

நான் என் நண்பர்கள் ஏழெட்டு பேருடன் ஷூட்டிங் பார்க்கப் போனேன். பிரியாணி, சிக்கன் வறுவல் என்று பார்சல் கட்டி எடுத்துச் சென்றோம்.

400sathyaraj-wallpaper-09002அந்த ஊரிலோ, சுற்று வட்டாரத்திலோ லாட்ஜ் வசதியெல்லாம் கிடையாது. என்றாலும் நாங்களும் அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரோடு சேர்ந்து 2 நாள் தங்கினோம்.

சிவகுமார் அண்ணனும் அப்படி அங்கே ஒரு வீட்டில் தங்கியிருந்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவரை சந்தித்துப் பேசியபோது, பலநாள் பார்த்து பழகியது போல் பேசினார். நம்ம ஊரில் (கோவை) இருந்து ஒருத்தர் பெரிய நடிகராக இருக்கிறார் என்ற சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது.

சின்ன வயசிலேயே நன்றாக `மனப்பாடம் பண்ணுகிற ஆற்றல்’ எனக்கு இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களைப் பார்த்தால், அதில் வருகிற வசனங்களை அப்படியே கடகட என்று சொல்வேன்.

டைரக்டர் ஸ்ரீதரின்  “காதலிக்க நேரமில்லை” படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு   நாகேஷ் கதை சொல்ற போர்ஷன் எனக்கு ரொம்ப பிடிச்சது.

அப்போது அது இசைத் தட்டாகவே வந்தது. வாங்கி கேட்டுக்கேட்டு முழு வசனமும் எனக்கு மனப்பாடம்.

அதோடு நடிகர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே ஸ்டைலில் `மிமிக்ரி’ பண்றதையும் விளையாட்டாய் கற்றுக்கொண்டேன்.என் சினிமா ஆர்வம், வசனம் பேசுகிற அளவுக்கு வளர்ந்து, `மிமிக்ரி’யிலும் முன்னேறியது.

இது அண்ணன் மாதம்பட்டி சிவகுமாருக்குள் ஒரு எண்ணத்தை எழுப்பியிருந்தது. “இவன் சினிமாவில் நடிக்கலாம் போலிருக்கிறதே” என்று கருதியவர், ஒருநாள் என்னிடம் கேட்டும்விட்டார்.

“வசனம் நல்லா பேசறே! மிமிக்ரியில் ஒவ்வொருத்தரோட மேனரிசத்தையும் கொண்டுவரே! நீ ஏன் சினிமாவுக்கு வரக்கூடாது?” என்றார்.

அண்ணன் அப்போது சினிமா தயாரிப்பாளராக ஆகாத நேரம். அவரிடம், “அண்ணே! அம்மா ஒத்துக்க மாட்டாங்களே” என்றேன். அப்ப இருந்த காலகட்டத்துல, சினிமாவுக்குப் போனா பையன் கெட்டுப்போயிடுவான் என்பது அம்மா எண்ணமாக இருந்தது.

“அம்மாவின் அனுமதி பெற்று உன்னை நான் சென்னைக்கு அழைத்துச் செல்கிறேன். முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே” என்று அண்ணன் கூறினார்.

சொன்னதுபோல அவர்தான் என்னை சென்னைக்கு அழைத்தும் வந்தார். ஒரு `மொபட்’ வண்டி வாங்கி என்னிடம் தந்தவர், கையில் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தார்.

“சினிமா கம்பெனிகளில் போய் வாய்ப்பு கேட்க இந்த வண்டியை பயன்படுத்திக்கொள். பணம் தீர்ந்ததும் வாங்கிக்கொள்” என்றார்.

அன்றைய 1975-ம் ஆண்டுவாக்கில் என்ன தான் அதிகமாய் செலவழித்தாலும் மாதம் 500 ரூபாய்க்கு மேல் செலவாகாது. எனவே, அண்ணன் கொடுத்த 5 ஆயிரம் ரூபாய் எனக்கு மிகப்பெரிய தொகையாக இருந்தது.

நடிகர் சிவகுமார் அண்ணன் சென்னையில்தானே இருக்கிறார். அவரிடம் கேட்டால் சினிமா வாய்ப்பு பற்றிய ஐடியா கிடைக்கும் என்று தோன்றியது. அவரது வீட்டு அட்ரஸ் கண்டுபிடிச்சு போய் பார்த்தேன்.

நான் நடிப்பதற்காக சென்னை வந்து இருப்பதை சொன்னதும், “முதலில் உனக்கு ஒரு வேலை தேடிக்கொள். வேலையில் கிடைக்கிற வருமானம் செலவுக்கு கைகொடுக்கும்.

வேலை பார்த்துக்கொண்டே நடிக்கவும் முயற்சி செய்யலாம். வெறுமனே சினிமாவுக்கு மட்டும் முயற்சி செய்து, உடனடியாக வாய்ப்பு கிடைக்காவிட்டால் சிரமம். சிலருக்கு ஐந்து வருஷத்துக்குப் பிறகுதான் சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சிலர் 10 வருஷம் தாண்டியும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே முதலில் வேலையை தேடிக்கொள். நானும் எனக்குத் தெரிஞ்ச கம்பெனிகளில் உனக்காக சொல்லி வைக்கிறேன்” என்றார்.

அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் `சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் இருந்து கோமல் சுவாமிநாதன் பிரிந்து `ஸ்டேஜ் பிரண்ட்ஸ்’ என்ற புதிய நாடக குழுவை தொடங்கி நடத்தி வந்தார்.

அந்த நாடக குழுவில் சிவகுமார் என்னை சேர்த்து விட்டார். சஹஸ்ரநாமத்தின் நாடக குழுவில் இருந்துதான் நடிகர் முத்துராமன், நடிகை தேவிகா இருவரும் சினிமாவுக்கு வந்திருந்தார்கள்.

எனவே சினிமாவுக்கு முன்னோடியாக நாடகம் இருக்கட்டும் என்று, கோமல் சாரின் குழுவில் சேர்ந்து கொண்டேன்.

அதற்காக ஹீரோ வேடத்தில் நடித்தேன் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். சின்னச்சின்ன கேரக்டர்கள்தான். நாடகம் முடிந்த பிறகு சம்பளமாக பத்து ரூபாய் தருவார்கள்.

இவர்கள் நடத்திய “கோலங்கள் இல்லாத கோடுகள்” நாடகத்தில்தான் முதன் முதலாக நடித்து பத்து ரூபாய் சம்பளமும் வாங்கினேன்.

நான் `பி.எஸ்.சி’ பட்டதாரிதானே தவிர, சரளமாக ஆங்கிலம் பேச வராது. பெரிய கம்பெனிகளில் இண்டர்விïவுக்குப் போனால், அவர்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல வேண்டும்.

இதற்காக வேலை வாய்ப்பை தவிர்த்து வந்தேன். ஆங்கிலத்தில் பேசினால், தப்பும் தவறுமாக பேசி விடுவேனோ என்ற பயம்தான் என்னை ஆங்கில உரையாடலுக்குள் விடாமலேயே வைத்திருந்தது. இப்போதும்கூட அதே நிலைதான்.

சமீபத்தில் கோவாவில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு நான் நடித்த “பெரியார்” படமும் தேர்வாகி இருந்தது. நானும் போயிருந்தேன். அங்குள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என்னிடம், “படத்தில் நடித்தது பற்றி பேசுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

சர்வதேச விழாவில் ஆங்கிலத்தில்தானே பேசியாக வேண்டும். எனக்குத்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேச வராதே! அதனால் தயங்கினேன். நிர்வாகிகளிடம் உண்மையை கூறினேன்.

“வேண்டுமானால் ஆங்கிலத்தில் எழுதி மேடையில் படிக்கட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள் சரி என்று சொன்ன பிறகு, ஆங்கிலத்தில் எழுதி வைத்துத்தான் மேடையில் படித்தேன்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Share.
Leave A Reply