“அது சிறையல்ல வதை முகாம். நிலத்துக்கு அடியிலேயே அது அமைந்துள்ளது. நான் உள்ளிட்ட எனது குழு மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம்.
அதற்குள் கொடிய விஷப்பாம்புகள் இருந்தன. ஆயிரக்கணக்கான வௌவால்கள் இருந்தன. உள்ளே செல்ல முடியவில்லை. ஒரு வகையான வாயு வெளிவந்து கொண்டிருந்தது.
எல்லோருக்கும் இருப்பது ஒரே ஒரு மலசலகூடம். அது வர்த்தமானிப்படுத்தப்பட்ட சிறையும் அல்ல. மனிதன் ஒருவனை தடுத்து வைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றது.!”
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பான விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா, கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் அளித்த சாட்சியத்தின் ஒரு பகுதியே அது.
அந்த சாட்சியமானது திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இரகசியமாக இயங்கிவந்த ‘கன்சைட்’ என்ற பெயர் கொண்ட வதை முகாம் பற்றியதாகும்.
கடந்த இரு வாரங்களுக்குள் ஐ.நா.வின் குழுவொன்று இங்கு வந்து இந்த வதை முகாம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முன்னரேயே கடந்த ஜுலை மாதம் “வீரகேசரி” பத்திரிகை 29 சாட்சியங்களை பெயரிட்டு அம்பலப்படுத்தியிருந்தது.
பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோனின் உத்தரவில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவின் வழி நடத்தலில், புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவின் பிரத்தியேக விசாரணைகளிலேயே இந்த வதை முகாம் கண்டறியப்பட்டது.
(சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா)
சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஆகியோர் இந்த விடயங்களை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர்கள் என்ற வகையில் மறக்கப்பட முடியாதவர்கள்.
உண்மையில் திருகோணமலை வதை முகாமுக்கு மேலதிகமாக கொழும்பு கோட்டை சைத்திய வீதியில் ‘ பிட்டு பம்பு’ என்ற இரகசிய தடுப்பு முகாம் இயங்கியமை தொடர்பான தகவல்களையும் நாம் வெளிப்படுத்தியிருந்தோம்.
2009.05.28 அன்று அப்போதைய கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் அப்போதைய கடற்படை தளபதி கரணாகொட, தனது பிரத்தியேக பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக செய்த முறைப்பாட்டின் விசாரணைகளே தற்போது பல கடத்தல்கள், சித்திரவதை கூடங்கள், இரகசிய முகாம்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தி வருகின்றது என்றால் அது மிகையாகாது.
ஆரம்பத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணைகளின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்கவின் மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா உள்ளிட்டோரே இந்த விசாரணையை முதலில் ஆரம்பித்து, சம்பத் முனசிங்கவை கைது செய்தனர்.
இதனிடையே குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸிடம், அப்போதைய கடற்படை உளவுப் பிரிவின் மேஜர் நெவில் பிரியந்த அத்தநாயக்கவும் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.
இதனையும் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா உள்ளிட்ட குழு விசாரணை செய்த போது வசந்த கரணாகொடவினால் சம்பத் முனசிங்கவின் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த உயிரச்சுறுத்தலுக்கான காரணம் தொடர்பில் மேஜர் அத்தநாயக்கவை நிஸாந்த தலைமையிலான பொலிஸ் குழு விசாரித்த போது தற்போதைய ரியல் அட்மிரல் உதய கீர்த்தி விஜய பண்டார தற்போதைய அமைச்சரான அர்ஜுன ரணதுங்கவை கொலை செய்ய சம்பத் முனசிங்கவிடம் கூறியுள்ளதும் அதற்கு அவர் மறுத்ததே கடற்படையூடாக அவருக்கு ஏற்பட்டிருக்கும் உயிராபத்து என மேஜர் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்த விசாரணைகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அப்பாவி தமிழர்கள் பலர் கடத்தப்பட்டமை தொடர்பான தகவல்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.
அப்போதைய கடற்படை தளபதி கரணாகொடவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சம்பத் முனசிங்கவின் அறையில் இருந்து அடையாள அட்டைகள் 4, கைத்துப்பாக்கி தோட்டாக்கள், வங்கிப் புத்தகங்கள் என 21 பொருட்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
அவற்றை ஆய்வு செய்த போது கொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்ட என்டன் ஜோன்ரீன், சூசைப்பிள்ளை அமலன் லியோன், நாகராஜா ஜகன் உள்ளிட்டோரின் அடையாள அட்டைகளும் கடவுச்சீட்டுக்களும் இருப்பது உறுதியாகியுள்ளன.
2009.06.15 அன்று தற்போதைய ரியல் அட்மிரல் உதயகீர்த்தி விஜய பண்டார, ரியல் அட்மிரல் ஜகத் ஜயசிங்க ஆகியோர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக 5 மாணவர்கள் கடத்தலில் கப்பம் கோரப்பட்டுள்ளதாக முறையிட்டிருந்தனர்.
உண்மை யில் இந்த 5 மாணவர்களும் 2008.09.17 அன்று தெஹிவளை கவுடான பகுதியில் வைத்து அவர்கள் பயணித்த கே.சி. 5559 என்ற கறுப்பு நிறகாருடன் கடத்தப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் கடந்த ஜனவரி 21 ஆம் திகதிவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையில் கடற்படையினரால், கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை, செட்டியார்தெரு, ஹெந்தல, நாயககந்த, தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் வைத்து 11 பேர் கடத்தப்பட்டுள்ளமை அம்பலமானது.
இந்த 11 பேரும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர்களான சம்பத் முனசிங்க, ஹெட்டி ஆரச்சி ஆகியோர் தலைமையிலான குழுவினரால் கடத்தப்பட்டு, கோட்டை சைத்திய வீதியில் உள்ள ‘ பிட்டு பம்பு’ எனும் இரகசிய தடுப்பு அறையிலும் பின்னர் திருகோணமலை கடற்படை முகாமின் ‘கன்சைட்’ என்ற இரகசிய நிலத்தடி வதை முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டமைக்கான வெளிப்படுத்தல்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்தனர்.
கடத்தப்பட்ட 11 பேரில் தெஹிவளையில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் விவகாரம் மிக்க அவதானத்தை பெற்றதாகும். கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம் தெமட்டகொடையைச் சேர்ந்த மொஹம்மட் சாஜித், மருதானையைச் சேர்ந்த ஜமாலின் டிலான் ஆகியோரே கடத்தப்பட்ட 5 மாணவர்களுமாவர்.
இந்த 5 மாணவர்களுடன் 2008.05.17 அன்று இரவு யூனுஸ், சப்ராஸ் என மேலும் இருவரும் கொட்டாஞ்சேனையில் உள்ள ரஜீவ் நாகநாதன் வீட்டில் இரவு உணவை உட்கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் யூனுஸும் சப்ராஸும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் செல்லவே ஏனைய ஐவரும் காரில் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு சலூனுக்கு முடிவெட்ட சென்றுள்ளனர்.
இதன் போது சாஜித் என்ற மாணவனுக்கு தெஹிவளை, கவுடானவைச் சேர்ந்த மொஹம்மட் அலி என்பர் பணம் கொடுக்க இருப்பதாக அதனை பெற்றுக் கொள்ள அனைவரும் காரில் அங்கு சென்றுள்ளனர்.
கடற்படையின் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து சம்பத் முனசிங்க உள்ளிட்டவர்களுக்கு உளவு வேலை பார்த்துத் திரிந்துள்ள மொஹம்மட் அலி இந்த ஐவரையும் திட்டம் தீட்டி தனது இல்லத்துக்கு இவ்வாறு வரவழைத்துள்ளதுடன் பின்னர் சம்பத் முனசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர்களான சம்பத் முனசிங்கவும் ஹெட்டி ஆரச்சியும் நேரடியாக சென்று 5 மாணவர்களையும் கடத்தியுள்ளனர். கடத்தும் போது மாணவர்கள் பயணித்த காரில் 1 1 /2 இலட்சம் ரூபா பணமும் இரு கையடக்கத் தொலைபேசிகளும் இருந்துள்ளன.
மாணவர்களின் கடத்தல் குறித்து பெற்றோர் கொட்டாஞ்சேனை, மருதானை, தெமட்டகொடை ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட 5 மாணவர்களும் கோட்டை ‘ பிட்டு பம்பு’ தடுப்பகத்தில் இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக முதலில் ஆதாரங்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்தன.
குறிப்பாக ரஜீவ் நாகநாதன் தனது தந்தைக்கு எடுத்த தொலைபேசி அழைப்பொன்றில் கோட்டை சைத்திய வீதியில், ஏபல் சீமன் சேனநாயக்க, ஏபல் சீமன் கித்சிறி ஆகியோரின் பாதுகாப்பின் கீழ் இருந்ததை உறுதி செய்துள்ளார்.
ரஜீவ் நாகநாதன், லண்டனுக்கு மருத்துவ படிப்பை மேற்கொள்ளச் செல்ல தயாரான போதே அவரும் அவரின் நண்பர்களும் இவ்வாறு கடத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ரஜீவ் குடும்பத்துக்கும் அப்போதைய மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா குடும்பத்துக்கும் தொடர்பிருந்த நிலையில் தனிப்பட்ட ரீதியில் பீலிக்ஸ் பெரேரா கடற்படையிடம் விசாரித்துள்ளார்.
இதனால் ரஜீவ் நாகநாதன் மீதும் அவன் கூட்டாளிகள் மீதும் கடற்படை மிகக் கவனமாகவே காய் நகர்த்தியுள்ளது.
2008 டிசம்பர் முதல் 2009ஆம் ஆண்டு மார்ச் வரை அவ்வப்போது தொலைபேசியூடாக ரஜீவ் தனது குடும்பத்தாரை அழைத்த நிலையில் அதனூடாக பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ரஜீவை கடத்தல்காரர்களான கடற்படையினர் ‘டொக்டர் புத்தா’ என்றே அழைத்துள்ளதுடன் அவனிடம் ஆங்கிலமும் கற்றுள்ளனர். ஒரு சமயம் கடற்படையின் சீருடையையும் ரஜீவுக்கு அவர்கள் அணிவித்துள்ளனர்.
இவ்வாறு தொடரும் போதே ரஜீவ் உள்ளிட்டோரை விடுதலை செய்ய, மொஹம்மட் அலி ஊடாக ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்னரேயே மருதானை பொலிஸாரினால் மெஹம்மட் அலி கைது செய்யப்பட்ட போதும் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மொஹம்மட் அலியை கடத்திய ஹெட்டி ஆரச்சி தலைமையிலான கடத்தல் குழு, அவரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியமை தொடர்பில் ரஜீவ் தொலைபேசியில் வழங்கிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே நாரம்மல கடஹபொல எனும் இடத்தில் வைத்து ‘அண்ணாச்சி’ என்ற புனைப்பெயரைக் கொண்டு சமிந்த என்பவரால் 5 மாணவர்களுக்கு மேலதிகமாக ஹெந்தல பகுதியில் வைத்து கடத்தப்பட்ட ஜோன் ரீன் தொடர்பில் அவன் தாயிடம் 5 இலட்சம் ரூபா கப்பம் பெறப்பட்டமையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடத்தப்பட்ட மாணவர்களின் நிலைமையினை அவ்வப்போது பதிவு செய்துவந்த ராஜீவ்வின் தொலைபேசி அழைப்புக்கள் 2009.03.24 ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ‘அண்ணாச்சி’ என்ற பெயரைக் கூறி மாணவர்களை விடுவிக்க சமிந்த என்பவர் 0776530482 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தியமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாகும்.
இந்நிலையில் தான் 2009.03.24 உடன் நின்று போன தொலைபேசி அழைப்பு மீண்டும் 2009 ஏப்ரல் மாதத்தில் தொடர ஆரம்பித்துள்ளது.
இதன்போது ‘ஹேஷான்’ என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்தியவர் மாணவர்களை ஹெட்டி ஆரச்சி தற்போது தனது பொறுப்பில் விட்டுள்ளதாகவும் அவர்களை தான் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன் தனது தொலைபேசி இலக்கத்துக்கு மீள்நிரப்பு பணத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
0778925790 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பலமுறை ரஜீவின் பெற்றோரை இந்த நபர் தொடர்பு கொண்டுள்ளதுடன் இவை பந்துகுமார் என அறியப்படும் கடற்படை சிப்பாயின் தொலைபேசி இலக்கம் என்பதும் அதனுடன் தொடர்புடைய மேலதிக தகவல்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த சிப்பாயை புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்த நிலையில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் திருமலை நிலத்தடி வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவுக்கு தனது உத்தியோக பூர்வ சீருடையிலேயே வந்து வாக்குமூலமளித்திருந்த அவர் ‘நான் லெப்டினன்ட் கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் அப்போது வேலைபார்த்தேன். அவர் விசேட புலனாய்வுப் பிரிவின் தலைவர்.
அவரின் கீழேயே திருகோணமலை ‘டொட்கெயார்ட்’ எனும் முகாமில் நிலத்தடி இரகசிய சிறைக் கூடங்கள் இருந்தன. நான் அவற்றை மேற்பார்வை செய்பவனாக இருந்தேன். அங்கு பாரிய நிலத்தடி ஆயுத களஞ்சியசாலை ஒன்று உள்ளது.
அதில் ஒரு பகுதியே சிறைக் கூடமாக அமைக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தடி சிறையில் ரஜீவ் உள்ளிட்ட 5 மாணவர்களும் மேலும் சிலரும் இருந்தனர். அவர்கள் மலசலகூடம் வரும்போது அவர்களுக்கு தொலைபேசியை கொடுத்து உறவினருடன் பேசச் செய்தேன்’ என தெரிவித்துள்ளார்.
தமது மகன்மார் திருகோணமலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஜீவின் பெற்றோர் பீலிக்ஸ் பெரேராவின் கவனத்திற்கு கொண்டுவரவே அவர் தனது அயல் வீட்டில் வசித்த 10 கடற்படை தளபதிகளின் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ரிய அட்மிரல் சேமால் பெர்னாண்டோவை அழைத்து தகவல் பெறுமாறு கூறியுள்ளார்.
மாணவர்களின் அடையாள அட்டை இலக்கங்களுடன் சேமால் பெர்னாண்டோ விசாரித்து பார்த்ததில் மாணவர்கள் திருகோணமலையில் உள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சேமாலின் ஆலோசனைக்கு அமைய அப்போதைய கடற்படை தளபதி கருணாகொடவுக்கு மாணவர்களின் விடுதலையை கோரி பீலிக்ஸ் பெரேரா கடிதம் எழுதியுள்ளதுடன் தொலைநகல் ஊடாக அதனை அனுப்பியுள்ளார்.
அத்துடன் வசந்த கருணாகொடவுடன் இது விடயமாக அவர் ஹெலிகொப்டர் பயணம் ஒன்றின் போதும் கலந்துரையாடியுள்ளார். இதன்போதும் மாணவர்களை விடுவிப்பதாக உறுதியளித்துள்ள வசந்த கரணாகொட இறுதிவரை அதனை நிறைவேற்றியதாக தெரியவில்லை.
ஒரு சமயம் மாணவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டமை இரகசிய வதை முகாம் பொறுப்பாளர் ரணசிங்கவுக்கு தெரியவரவே சீ.ஐ.டீ. விசாரித்தால் தாம் சிக்குவோம் என அவர் அச்சம் கொண்டுள்ளதுடன் அதன் பின்னரேயே 2009 மே மாதம் 28 ஆம் திகதியுடன் தொலைபேசி கலந்துரையாடல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணை செய்து வரும் புலனாய்வுப் பிரிவு, அப்போதைய காலகட்டத்தில் கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய, தற்போதைய கிழக்கு கட்டளை தளபதி குருகேவிடமிருந்து பல்வேறு தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
இதனைவிட அப்போதைய கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி தஸநாயக்க மாணவர் கடத்தல் தொடர்பில் நன்கு அறிந்திருந்துள்ளதுடன் தாம் ஐவரை கடத்தியதாக வசந்த கருணா கொடவுக்கும் அறிவித்துள்ளார். இது குறித்து சம்பத் முனசிங்கவின் புலனாய்வுப் பிரிவுக்கான வாக்கு மூலத்தில் தெளிவாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2009.06.17 அன்று திகதியிடப்பட்ட அப்போதைய அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் கடிதமும், கரணாகொட மாணவர் கடத்தல் தொடர்பில் அறிந்திருந்தார் என்பதற்கு பிரபல சாட்சியமாகும்.
எனினும் இன்று வரை இவ்விவகாரம் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை. வசந்த கருணாகொட, கெப்டன்ட் டீ.கே.பி. தஸநாயக்க, லெப்டினன்ட் கொமாண்டர்களான சம்பத் முனசிங்க, ஹெட்டி ஆரச்சி மற்றும் ரணசிங்க ஆகியோர் இம்மாணவர் கடத்தலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் என மேலோட்டமாக பார்க்கும் போதே உறுதியாகும் நிலையில் இன்று வரை வசந்த கருணாகொடவிடம் ஒரு வாக்கு மூலமேனும் பெறப்படவில்லை என்பது விசாரணைகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தவல்லது.
திருமலை முகாமை புலனாய்வுப் பிரிவு மன்றின் உத்தரவுக்கமைய சோதனை செய்த போது கடத்தப்படும் போது மாணவர்கள் பயணித்த கறுப்பு கார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அண்மையில் பிறிதொரு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் மீட்கப்பட்டது.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக இக்கடத்தலுடன் நேரடி தொடர்பு கொண்ட ரணசிங்க இன்றும் கடற்படையில் சேவையில் உள்ளார். ஹெட்டி ஆரச்சி கூட ரவிராஜ் கொலை விவகாரத்திலேயே கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டார்.
வசந்த கரணாகொட, தஸநாயக்க, ரணசிங்க ஹெட்டி ஆரச்சி, சம்பத் முனசிங்க என இந்த கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனைகளை வழங்காது இழுத்தடிப்பதும் வேதனைக்குரியதாகும்.
இந்த மாணவர் கடத்தல் விவகாரத்தில் கடற்படையினரை காப்பாற்ற பலமுறை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி இது விடயத்தில் அவதானம் செலுத்துவது அத்தியாவசியமானதாகும்.
புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை விட நாட்டின் நற்பெயருக்கும் கடற்படையின் ஒழுக்க விதிமுறைகளுக்கும் அப்பால் சென்று பெற்றோரின் வயற்றில் தீ மூட்டும் இத்தகைய மனிதக் கடத்தல்காரர்களின் முகமூடி கழற்றப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படல் வேண்டும்.
இறுதியாக இந்த வழக்கில் கடற்படையினரை காக்க போராடும் ஒரு குழுவின் கூற்றோடு இரகசியங்களுக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்.
கோட்டை நீதிமன்ற வளாகத்தில் காணாமல் போன மாணவர்களின் பெற்றோர் சார்பில் ஆஜராகி வெளியேறிக் கொண்டிருந்த சட்டத்தரணி அச்சலா செனவிரட்னவுக்கு கடற்படையின் சட்ட ஆலோசகர் குழுவொன்று சொன்ன வார்த்தைகள் இவை.
‘விடுதலைப் புலிகளுடன் போரில் கருணா அம்மானை அவ்வியக்கத்தில் இருந்து பிரித்தெடுத்தது மிகப் பெரிய வெற்றி. அதனை செய்ததில் சம்பத் முனசிங்கவின் பங்கு அதிகம்.
அதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு பிரச்சினை ஏற்படாது’ என்ற இந்த வார்த்தைகள் நல்லாட்சியில் சட்டம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதைத்துவிடக் கூடாது.
8 வருடங்களாக காத்திருக்கும் பெற்றோரின் எதிர்ப்பார்ப்பை சிதைத்துவிடாமல் சட்டம் தன் கடமையை செய்யும் என தொடர்ந்தும் நம்பிக்கையாய் இருப்போம்.