வழக்கில் தண்டிக்கப்பட்டு கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் தலையெழுத்து இன்னும் சரியாக ஏழு நாட்களில் முடிவாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றவாளிகள் என தெரிவிக்கப்படும் 7 பேரும் விடுதலையானவர்களா அல்லது தங்களது வாழ்நாளின் எஞ்சிய நாட்களை சிறையிலேயே கழிக்கப் போகிறார்களா என்பது எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதிக்குள் முடிவாகப் போகிறது.
காரணம் இந்த எழுவரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி முடிந்து விட்டது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இம்மனுக்களை விசாரித்தது. அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி ஹெச். எல்.தத்து டிசம்பர் 2 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.
ஆகவே அதற்கு முன்பாக தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு அளிக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. இந்த அமர்வின் மற்ற நீதிபதிகள் ஃபகீர் முகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோஹர் சப்ரே மற்றும் உதய் உமேஷ் லலித். ஆகியோராவர்.
ஆகவே ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரின் விதி நீதிபதி தத்து தலைமையிலான அமர்வின் கையில்தான் தற்போது உள்ளது.
2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய முடிவுகள் எடுக்கலாம் என்று கூறியது.
அதற்கிணங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறுநாளே தமிழக சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி விடுதலை செய்ய எனது தலைமையில் இன்று காலையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்து விட்டது.
இவர்கள் மத்திய அரசு சட்டங்களின் படியும், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மூலமாகவும் விசாரிக்கப்பட்டதால் இந்த விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் உரிய முடிவெடுக்குமாறு மத்திய அரசைக் கோருகிறோம்.
இந்த மூன்று நாட்களுக்குள் இவர்களின் விடுதலையை மத்திய அரசு உறுதி செய்யா விட்டால் எனது தலைமையிலான அரசு இந்த ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்துவிடும்,’ என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பால் கடும் கோபமடைந்த அப்போதைய, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், பெப்ரவரி 21 ஆம்திகதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அவசர பொதுநல மனுவைத் தாக்கல் செய்தது.
இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் இந்த எழுவரையும் விடுவிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது விசாரணையை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது.
இதன்படி ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்தததை உறுதி செய்ததுடன்,
இந்த எழுவரின் விடுதலையில் பல்வேறு விதமான அரசியல் சாசன மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் அதிகார வரம்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டியிருப்பதால் விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாகத் தெரிவித்து விட்டது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆகஸ்ட் 12 ஆம் திகதி விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் மாநில அரசுக்கு அவர்களது விடுதலை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பல மாநில அரசுகள் வாதிட்டன. ஆயினும் மத்திய அரசு எழுவரின் விடுதலையை கடுமையாக எதிர்த்தது.
ராஜீவ் காந்தி கொலையென்பது இந்திய இறையாண்மையின் மீதான கொடூரத் தாக்குதல் என்றும் இதில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கொல்லப்பட்டனர் என்றும் ஆகவே எழுவரின் விடுதலையை அனுமதிக்க முடியாதென்றும் வாதிட்டது.
மேலும் முருகன், நளினி, சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையானது ஏற்கனவே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டதால் அவர்கள் மேலும் சலுகையை எதிர்பார்க்க முடியாதென்றும் கூறியது.
இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங் அரசின் நிலைப்பாடும், மோடி அரசின் நிலைப்பாடும் ஒன்றுதான் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விரைவில் இவ் வழக்கின் தீர்ப்பு வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.