ஆடொன்றும் , புலியொன்றும் ஒன்றாக இருக்க முடியுமா ? இது சாத்தியமா …..? ரஷ்யாவை சேர்ந்த புலி ஒன்று ஆடொன்றுடன் நெருங்கிய நட்பை கொண்டுள்ளது. ஆட்டின் பெயர் ‘டிமுர்’ புலியின் பெயர் ‘ஆமுர்’ இவர்களின் நட்பு மிருகக்காட்சிசாலையில் ஏற்ப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் புலியொன்றுக்கு உணவாக அனுப்பப்பட்ட உயிருள்ள ஆடொன்றை அப்புலி தனது நண்பனாக்கிக் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் ஜப்பானிய கடல் மற்றும் வடகொரியாவுடனான எல்லைப் பகுதியிலுள்ள மிருகக்காட்சி சாலையொன்றில் இப்புலி உள்ளது.
அமுர் என அழைக்கப்படும் இப்புலிக்கு உணவாக உயிருள்ள ஆடு ஒன்றை ஊழியர்கள் அனுப்பினர். இந்த ஆட்டை இப்புலி வழக்கம் போல வேட்டையாடி உட்கொள்ளும் என ஊழியர்கள் கருதினர்.
ஆனால், அந்த ஆட்டை கொல்வதற்குப் பதிலாக அதனுடன் நட்பாக பழக ஆரம்பித்தது புலி.
“ஆடுகளையும் முயல்களையும் எப்படி வேட்டையாடுவது என்பதை இப்புலி நன்றாக அறிந்துள்ளது.
ஆனால், இந்த ஆட்டை வேட்டையாடுவதற்கு இப்புலி மறுக்கிறது. தைமூர் என பெயரிடப்பட்ட இந்த ஆடும் புலியும் நண்பர்களாக விளங்குகின்றமை எமக்கு பெரும் வியப்பளிக்கிறது” என இம்மிருகக்காட்சி சாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆட்டின் அருகில் ஊழியர்கள் யாரும் சென்றால், எச்சரிக்கும் விதத்தில் புலி உறுமுகிறது. இதற்குமுன் ஊழியர்களிடம் இப்புலி இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொண்டதில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்புலியும் ஆடும் நட்புடன் பழகுகின்றபோதிலும், ஆட்டின் பாதுகாப்பு கருதி அதை புலியிடமிருந்து பிரிக்க வேண்டும் என மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஆட்டை பாதுகாக்கும் வகையில் புலி செயற்படுவதால் இவ்விரு மிருகங்களையும் பிரிப்பது கடினமானது என மேற்படி ஊழியர் தெரிவித்துள்ளார்.