1960ஆம் ஆண்டு மார்ச் 19இல் நடந்த பொதுத் தேர்தலில் 151 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.

டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 50 ஆசனங்களையும், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆதரவுடன், சி.பி.டி சில்வா தலைமையில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 46 ஆசனங்களையும் பெற்றிருந்தது.

தமிழர் பகுதிகளில் சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி 15 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரேயொரு ஆசனத்தை உடுப்பிட்டித் தொகுதியில் ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ எம்.சிவசிதம்பரம் வென்றிருந்தார்.

யாழ்ப்பாணத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அல்ப்றட் துரையப்பா, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தைத் தோற்கடித்து நாடாளுமன்றம் ஏகினார்.

தனது பதிவு செய்யப்படாத ஈழத் தமிழ் ஒற்றுமை முன்னணி சார்பில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ‘அடங்காத் தமிழன்’ சி. சுந்தரலிங்கம் வவுனியா தொகுதியில் மற்றொரு சுயேட்சை வேட்பாளரான ரி.சிவசிதம்பரத்திடம் தோல்விகண்டார்.

101 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்த லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும், 89 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்த மஹஜனஎக்ஸத் பெரமுண 10 ஆசனங்களையும், பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தலைமையில் அவர் புதிதாக உருவாக்கியிருந்த லங்கா பிரஜாதாந்த்ர பக்ஷய 4 ஆசனங்களையும் பெற்றிருந்தது.

தனது சொந்தத் தொகுதியான காலி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் விஜயானந்த தஹநாயக்க தோல்வியடைந்தார். தனது கட்சிக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்த நிலையில் தனது சொந்தத் தொகுதியில் சிறப்பாக பிரசாரம் செய்ய முடியாது போனது பிரதமர் தஹநாயக்க தோற்றதற்கு காரணமாக இருக்குமென அன்றைய பிரதமரின் செயலாளராக இருந்த பிரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார்.

தான் புதிதாகத் தொடங்கிய போதிஸத்வ பண்டாரநாயக்க பக்ஷயவில் கம்பஹா தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டி.பண்டாரநாயக்க வெற்றிபெற்றிருந்தார்.

கட்சிகளைத் தாண்டி, தொகுதிகளில் தனிநபர்களின் அரசியல் செல்வாக்குக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படும் வரை இதுபோன்ற தொகுதி ரீதியில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைமைகளைக் காணக்கூடியதாக இருந்தது.

தேர்தல் முடிவுகளின் பின், எந்தவொரு தனிக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்காத நிலையில் ஆளுநர் ஒலிவர் குணத்திலக்க, அதிகளவான ஆசனங்களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான டட்லி சேனநாயக்கவை ஆட்சியமைக்க அழைத்தார்.

வெறும் எட்டு கபினட் அமைச்சர்களுடன், டட்லி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.

சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ‘மஹ களு சிங்ஹளயா’ (பெரும் கறுப்புச் சிங்களவன்) என வர்ணிக்கப்பட்ட பிலிப் குணவர்த்தன தலைமையிலான மஹஜன எக்ஸத் பெரமுண என்பவற்றின் ஆதரவை அவர் எதிர்பார்த்தார்.

தமிழரசுக் கட்சி – தமிழ்மொழிக்குரிய அந்தஸ்து உள்ளிட்ட சில குறைந்தபட்சக் கோரிக்கைகளை முன்வைத்தே ஆதரவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டிலிருந்தது.

இது டட்லி சேனநாயக்கவுக்கு கடும் சவாலாக இருந்தது. ‘தனிச்சிங்களச்‘ சட்டத்தை முழுமையாக அமுலாக்கும் கொள்கையோடு போட்டியிட்டவர்களால், எப்படி தமிழரசுக் கட்சியின் குறைந்தபட்சக் கோரிக்கைகளோடு சமரசம் செய்து கொள்வது இலகுவாக இருக்கவில்லை.

இந்நிலையில் டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் சிம்மாசன உரை தோற்கடிக்கப்பட்டது.

டட்லி, சிறிதேனும் தாமதமின்றி நாடாளுமன்றத்தைக் கலைத்து மீளத் தேர்தல் நடத்துமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தினார். இதன்படி, 1960ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

1960ஆம் ஆண்டு ஜூலைத் தேர்தலைப் பொறுத்தவரையில், களநிலைமைகள் மாறியிருந்தன. 1960 மே 24ஆம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தேர்தலில் மேலும் வலுச் சேர்த்தது. ஆனால், அவர் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை. பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கொல்லப்பட்டபின், அரசியலுக்கு வருவதை விரும்பாத, பிரதமர் பதவியை தட்டிலே வைத்துத் தந்தாலும் ஏற்கமாட்டேன் என்று சொன்ன ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, 8 மாதங்கள் கடந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

‘எனது கணவர் பண்டாரநாயக்கவின் ஜனநாயக சோசலிசக் கொள்கைகளுக்கு மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தார்கள். நான் அதனைப் பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் அடக்குமுறையைப் பிரயோகிக்கும் சக்திகள் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும்.

எந்த அடக்குமுறைக்கு எதிராக எனது கணவர் தன் உயிரைத் தியாகம் செய்தாரோ, அது தலைதூக்கினால் அவர் தியாகம் வீண்போகும்’ என உணர்ச்சி பொங்க தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க.

‘பண்டாரநாயக்கவை’ சுற்றியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்தத் தேர்தல் பிரசாரம் அமைந்தது. சிங்கள இனத்துக்காக தன் வாழ்வைத் தியாகம் செய்த ‘போதிசத்துவர்’ பண்டாரநாயக்க என்ற உணர்ச்சி அலை சிங்களக் கிராமங்கள் தோறும் பரவியது என சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

‘தனிச்சிங்கள’ சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், இந்திய வம்சாவளி மக்களை திருப்பியனுப்புதல் ஆகிய கொள்கைகளில் ஸ்ரீமாவோ உறுதியாக இருந்தார்.

0a4781fc-2427-4f8f-b087-f2ae941430f7_S_secvpf.gifமறுதரப்பில் எதிர்க்கட்சிகள், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை கடுமையாக விமர்சித்தன. தனது கணவனின் உயிரிழப்பிலிருந்து ஸ்ரீமா ஆதாயம் தேடுவதாக விமர்சித்தன.

ஸ்ரீமாவை ‘அழுகின்ற விதவை’ (‘வாந றநநிiபெ றனைழற’) என்றழைத்தன. இவ்வளவுக்கும் ஸ்ரீமாவோ நேரடியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை.

1960 மார்ச் தேர்தலில் தனித்துக் களம் கண்ட லங்கா சமசமாஜக் கட்சி ஒரு விடயத்தைப் புரிந்துகொண்டது. தனியே இடதுசாரிச் சோசலிசக் கொள்கைகள் மட்டும் இலங்கையில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு பெறுவதற்குப் பேதாது.

முன்னாள் மார்க்ஸிஸப் புரட்சியாளனும், இந்நாள் ‘மஹ களு சிங்ஹளயாவுமான’ பிலிப் குணவர்தன நிரூபித்துக் காட்டியது போல, சிங்கள-பௌத்த பேரினவாத ஆதரவு நிலையும் அவசியம்.

சோசலிசக் கொள்கைகளும், சிங்கள-பௌத்த தேசியவாதமும் இணையும்போதுதான் வெற்றி கிட்டுகிறது என்பதை லங்கா சமசமாஜக் கட்சி புரிந்துகொண்டது போலும்.

இந்தத் தேர்தலில் பண்டாரநாயக்கவின் உறவினரும், பிரபல சட்டத்தரணியுமான ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் முயற்சியில், 1956 போலவே,

ஸ்ரீ லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டியில்லா ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன.

1960 ஜூலை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 98 வேட்பாளர்களைக் களமிறக்கி, 75 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக் கட்சி 128 வேட்பாளர்களைக் களமிறக்கி, வெறும் 30 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது.

இலங்கை தமிழரசுக் கட்சி 20 வேட்பாளர்களைக் களமிறக்கி, 16 ஆசனங்களைக் கைப்பறியிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டியில்லா ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும், முறையே 21 வேட்பாளர்களைக் களமிறக்கி 12 ஆசனங்களையும், 7 வேட்பாளர்களைக் களமிறக்கி 4 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.

மஹஜன எக்ஸத் பெரமுண 55 வேட்பாளர்களைக் களமிறக்கி வெறும் 3 ஆசனங்களையே கைப்பற்றியிருந்தது. தனது லங்கா பிரஜாதாந்த்ர பக்ஷயவில் போட்டியிட்டிருந்த முன்னாள் பிரதமர் விஜயானந்த தஹநாயக்க, மார்ச் மாத தேர்தலில் தோல்விகண்டபோதும், இம்முறை 444 வாக்குகள் வித்தியாசத்தில் காலி தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 10 வேட்பாளர்களைக் களமிறக்கியபோதும், உடுப்பிட்டி தொகுதியில் எம்.சிவசிதம்பரம் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் அல்‡ப்றட் துரையப்பா 298 வாக்குகள் வித்தியாசத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தை வெற்றிகொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவி ஏற்றார். உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.

உலகமே இலங்கையைத் திரும்பிப் பார்த்த தருணம் அது. பிரித்தானிய பத்திரிகைகள் இதனை சிலாகித்து எழுதியிருந்தன. இந்திரா காந்தி (இந்தியா), கோல்டா மெயர் (இஸ்ரேல்), மார்கிரட் தட்சர் (பிரித்தானியா) என இவருக்குப் பின்பு பலம்பொருந்திய பல பெண் பிரதமர்கள் உருவாகியிருந்தாலும், உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமை ஸ்ரீமாவோ-வையே சாரும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அன்று தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை.

சோல்பரி யாப்பின் படியான அன்றைய நாடாளுமன்றம், இரு அவைகளைக் கொண்டதாக இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் என்ற கீழவையையும், செனட் சபை என்ற மேலவையையும் கொண்டதாக, ‘வெஸ்ட்மினிஸ்டர்’ நாடாளுமன்றத்தையொத்த அமைப்பில் காணப்பட்டது.

30 அங்கத்தவர்களைக் கொண்ட செனட் சபையின் 15 அங்கத்தவர்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். மற்றைய 15 அங்கத்தவர்கள் கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பான செனட்டர் எம்.பி. டி ஸொய்ஸா பதவி விலகி வழிவிட, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார்.

செனட் சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். இது ‘வெஸ்மினிஸ்டர்’ மரபுக்கு மாறுபாடாதொன்றாக இருந்தது.

‘வெஸ்மினிஸ்டர்’ மரபின்படி பிரதமர் எப்போதும் கீழவையான மக்கள் பிரதிநிதிகள் சபையிலிருந்தே நியமிக்கப்படுவார். இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று வகைசொல்லும், பதிலுரைக்கும் கடமைப்பாடு.

மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டியது கடமை, அதனைச் செய்வதற்கு அவர் மக்கள் பிரதிநிதிகள் சபையில் இருப்பது அவசியமாகிறது. இந்த மரபு தகர்க்கப்பட்டு செனட் சபையிலிருந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில், குறிப்பாக இனப்பிரச்சினை வரலாற்றில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க எவ்வளவு முக்கியமான ஒருவரோ, அவரைவிட ஸ்ரீமாவோ முக்கியமான ஒருவராவார்.

ஸ்ரீமாவின் ஆட்சிக் காலங்கள் சிறுபான்மை மக்களுக்கு மிகச் சவாலானவையாகவே இருந்திருக்கின்றன. 1960-1965, 1970-1977 என அவர் பிரதமராக இருந்த முதலிரண்டு முறையும் சிறுபான்மையினருக்கெதிரான அநேக அநீதிகள் அரங்கேறின.

அத்தனையும் சுதேசியம், தேசியம், சமத்துவம், சோசலிசம் என்ற முகமூடிகளை அணிந்து கொண்டிருந்தன. ஆனால், அவற்றின் விளைவுகள் சிறுபான்மையினரையே பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது.

சிம்மாசன உரையின் போது ‘தனிச்சிங்கள’ சட்டமும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டமும் அமுல்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும், அரசாங்கத்துக்குமிடையில் 1960 நவம்பர் 8ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. ஸ்ரீமாவோவின் ஆட்சியில் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்திக்க சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் தயாராகினார்கள்.

(அடுத்தவாரம் தொடரும்…)

என்.கே.அஷோக்பரன் LLB(Hons)

முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?

Share.
Leave A Reply