வடக்கு மாகாணசபையில் நயினாதீவு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அரசியல் அரங்கில், சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நயினாதீவின் பின்னணி, வடக்கு மாகாணசபையின் தீர்மானம் இந்த இரண்டையும் சரிவரத் தெரிந்து கொள்ளாமலேயே, சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாகபூசணி அம்மன் ஆலயத்தினால் வரலாற்று ரீதியாகப் பிரபல்யம் பெற்றிருந்த நயினாதீவு, இப்போது நாகவிகாரையினால், “நாகதீப” என்று மாறும் நிலையை எட்டியிருக்கிறது.
இலங்கைக்கு இரண்டாவது தடவை வருகை தந்தபோது நாகதீபவில் புத்தர் ஓய்வெடுத்தார் என்று மகாவம்சம் போன்ற சிங்கள, பௌத்த வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
அதேவேளை, நயினாதீவு, முன்னர் தமிழ் பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்த ஒன்று என்ற வரலாற்றுத் தகவல்களும் உள்ளன. இப்போது, நயினாதீவின் வரலாற்றுச் சூழல் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
காலா காலமாகவே, நயினாதீவு என்ற நிர்வாகப் பெயரினால் அழைக்கப்பட்டு வந்த இந்த சிறிய தீவு, இப்போது நாகதீப என்று அரசாங்க பதிவுகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சினால் நியமிக்கப்பட்ட, உள்ளூராட்சி எல்லைகளை மீளாய்வு செய்யும் குழுவின் தகவல்களின் அடிப்படையில், நில அளவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வேலணைப் பிரதேச சபையின் வட்டார வரைபடத்தில், நயினாதீவு என்பது நாகதீப என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலணைப் பிரதேசசபையின் இரண்டு வட்டாரங்கள் நயினாதீவில் உள்ளன.
இவை முன்னர் நயினாதீவு 8ஆம் வட்டாரம், நயினாதீவு 12ஆம் வட்டாரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
ஆனால், புதிய வரைபடத்தில், நயினாதீவு 8ஆம் வட்டாரம் என்பது நாகதீப வடக்கு என்றும், நயினாதீவு 12ஆம் வட்டாரம் என்றும் நாகதீப தெற்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நயினாதீவு என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென அது நாகதீப என்று மாற்றப்பட்டதன் பின்னணி சர்ச்சைக்குரியது.
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், தான் நயினாதீவில், பௌத்த பிக்கு ஒருவர் சிறியளவிலான பௌத்த மதவழிபாட்டை ஆரம்பித்திருந்தார்.
அதன் பின்னர் அது நாகவிகாரையாக மாறியது. இப்போது, அது இரண்டு விகாரைகளாக உருவெடுத்திருப்பதுடன், அங்கு சுமார் 50 அடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்று அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேவேளை, நயினாதீவு இப்போது பௌத்தர்களின் முக்கிய யாத்திரைத் தலமாகவும் மாறியிருக்கிறது.
புத்தர் வருகை தந்த இடம் என்ற வரலாற்றுக் கதைகள் இருப்பதால், நயினாதீவு பௌத்தர்களின் ஒரு யாத்திரைத் தலமாக மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை.
ஆனால், இதனை வைத்து, முற்றிலும் தமிழர்கள் வாழும் பிரதேசம் மெதுமெதுவாக சிங்கள மயப்படுத்தப்படுவது தான் ஆபத்தானது.
நயினாதீவு என்ற பெயரே, அரசாங்க பதிவேடுகளில் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்ற நிலையில், திடீரென அது நாகதீப என்று மாற்றப்பட்டது, நிச்சயம் உள்நோக்கமுடைய செயலாகவே இருக்கும்.
இந்த இடத்தில், நயினாதீவு தமிழ்ப் பெயர் அல்ல அதுவும், வடமொழிப் பெயரே என்றும், நாகதீபம் தான் சரியான தமிழ்பெயர் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
நாகதீபம் என்று அரசாங்கப் பதிவேடுகள் இப்போது மாற்றப்படவில்லை. அது நாகதீப என்றே மாற்றப்பட்டுள்ளது.
நாகதுவீப என்ற சிங்களச் சொல் மருவி நாகதீப என்று மாறியிருக்கிறது.
இந்த பெயர் மாற்றம், முன்னைய ஆட்சியின் போது இடம்பெற்றது என்றாலும், அத்தகைய தவறுகளைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்துக்கும் இருக்கிறது.
நாகதீப வடக்கு, நாகதீப தெற்கு என்று சிங்களத்தில் அழைக்கப்படுவது சர்ச்சையல்ல.
தமிழில் யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படுவது சிங்களத்தில் யாப்பனய என்றும், பருத்தித்துறையை அவர்கள் பேதுருதுடுவ என்றும் அழைக்கின்றனர். அது சர்ச்சைகளுக்குரிய விடயமன்று.
ஆனால், நயினாதீவு விவகாரத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாகதீப என்று திணிக்கப்பட்டுள்ளது தான் தமிழ்மக்களை விசனம் கொள்ள வைத்திருக்கிறது.
இந்த சிக்கலுக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சுத் தான் காரணம்.
இதனால் தான், இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டி, நயினாதீவு என்ற பெயரை மீண்டும் குறிப்பிட வேண்டும் என்று வடக்கு மாகாணசபை தீர்மானத்தை நிறைவேற்றியது.
உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிரதி குறிப்பிட்ட அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, வடக்கு மாகாணசபை, நாகதீப என்ற பெயரை நயினாதீவு என்று பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும், ஊர்களின் பெயர்களை மாற்றும் அதிகாரம் வடக்கு மாகாணசபைக்கு கிடையாது என்றும் கூக்குரல் எழுப்பினார்.
மஹிந்த ராஜபக் ஷ இந்த தீர்மானத்தை தெளிவாகப் புரிந்து கொண்டும், அவ்வாறு கூறியிருந்தாரேயானால், நாகதீப என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அவரும் இருந்திருக்கிறார் என்றே கருத வேண்டும்.
இப்போது, சிங்கள இனவாதம் கக்கும் அரசியல் தலைவர்கள், நாகதீபவை நயினாதீவு என்று அழைக்க வேண்டும் என்று வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாகதீபவின் பெயரை மாற்றினால், இலங்கையிலுள்ள அத்தனை தமிழ்க் கிராமங்களின் பெயர்களையும் அழிப்போம் என்று சூளுரைத்திருக்கிறது இராவண பலய என்ற அமைப்பு.
இதற்கிடையே, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும், இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல், நாகதீபவின் பெயரை மாற்ற முடியாது என்று கூறியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கூட, நாகதீப என்பதை நயினாதீவு என்று பெயர் மாற்றப்படுவதை தாம் ஏற்கவில்லை என்றும், வடக்கு மாகாணசபைத் தீர்மானம் முட்டாள்தனமானது என்று தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டிருந்தது.
இந்தச் செய்தி திரிபுபடுத்தப்பட்டதாக இருக்கலாம் என்ற போதிலும், அதற்கு, இதுவரை சம்பந்தன் மறுப்பு எதையும் வெளியிடவில்லை என்பதைக் கொண்டு, அதனை அவரது கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நயினாதீவு விவகாரத்தில், உண்மையையும் பின்னணியையும் தெரியாமல் தான் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போதைய சூழலில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முக்கியமான விடயமாக பேசப்படுகிறது.
ஆனால், நயினாதீவு விவகாரத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக அவநம்பிக்கையும் அச்சமும் தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாண குடாநாட்டு மக்களிடையே நயினாதீவு என்று அழைக்கப்பட்ட இடம், திடீரென நாகதீப என்று மாற்றப்படும் போது, தமிழ் மக்கள் அதனை அச்சத்துடன் தான் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முற்றிலும், தமிழர்கள் வாழ்ந்த, பகுதிகளை சிங்களப் பெயர்களின் ஊடாக அழைக்க முற்படும் போது அது தமிழ் மக்களைச் சந்தேகம் கொள்ள வைக்கும்.
முன்னர் எந்த விகாரையும் இல்லாத பகுதிகளில் எல்லாம் இப்போது விகாரைகள் முளைத்திருக்கின்றன. அரசமரங்களின் கீழ் பிள்ளையார் அமர்ந்திருந்த இடங்களில் இப்போது புத்தர் வீற்றிருக்கிறார்.
மாதகலில் சம்பில்துறைப் பகுதி ஜம்புகோளபட்டுன என்று பெயர் மாற்றப்பட்டு, அங்கும் ஒரு விகாரை முளைத்திருக்கிறது. அந்த விகாரையைக் கட்டியது கடற்படையே.
இதுபோன்று வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இலங்கையின் வடக்கில் தமிழ் பௌத்தம் இருந்ததற்கான வரலாற்றுத் தடயங்கள் மறைக்கப்பட்டு, இப்போது வடக்கையும் சிங்கள பௌத்த மயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
முல்லைத்தீவில், கொக்கிளாயில், மாங்குளத்தில், மாதகலில், நாவற்குழியில் என்று புதிய விகாரைகள் முளைக்கின்றன.
இந்த விகாரைகள் தனியே வழிபாட்டு இடங்களாகவோ யாத்திரைத் தலங்களாகவோ மட்டும் இருந்து விடப் போவதில்லை.
அவை காலப்போக்கில், சிங்களப் பெயரில் அழைக்கப்பட்டு, சிங்கள இடமாக- குடியிருப்புகளாக மாற்றப்பட்டு விடும் ஆபத்து உள்ளது தான் பிரச்சினை.
நயினாதீவு, நாகதீப ஆக்கப்பட்டது போன்று தான், வடக்கிலும் கிழக்கிலும் பல தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டன.
இதனால், தமிழரின் பூர்வீக நிலங்களாக இருந்த அந்தக் கிராமங்கள் இப்போது சிங்களக் கிராமங்களாக மட்டும் மாறவில்லை.
அவற்றுக்கு வரலாற்றுக் கதைகள் இட்டுக்கட்டப்பட்டும் வருகின்றன.
முல்லைத்தீவுக்குத் தெற்கே மணலாறு மறைந்து வெலிஓயா நிலைத்துப் போனது. மண்கிண்டிமலை, பின்னர் ஜனகபுர ஆனது.
திருகோணமலையில் முதலிக்குளம், மொரவெவ ஆகிப்போனது. குமரேசன்கடவை, கோமரக்கடவெல ஆனது.
வவுனியாவில் கொக்கடிவான்குளம், கலாபோவெவ என்று மாறியது. பாவற்குளம் அவரந்தலாவ ஆனது. கொக்குவெளி, கொக்கெலிய ஆக மாறியது.
இப்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழரின் பூர்வீக கிராமங்களும் நிலங்களும், சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சி தான் நயினாதீவுக்கும் நடந்திருக்கிறது.
நயினாதீவு என்ற பெயர் அரச நிர்வாகப் பதிவேடுகளில், நாகதீப என்று மாற்றப்படும் போது காலப்போக்கில் அதுவே நிலைத்து விடும் ஆபத்து உள்ளது.
இது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் தான். அதனைத் தான் முன்னைய அரசாங்கம் செய்திருந்தது.
ஆனால், இப்போதைய அரசாங்கமும் அதற்குத் துணைபோகிறது என்பதையே, நயினாதீவில் பெரஹெர மாவத்தை என்று, அண்மையில் அங்குள்ள வீதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ள சம்பவம் உறுதி செய்திருக்கிறது.
நயினாதீவில் உள்ள ஒரு வீதிக்கு பெயர் சூட்டும் அதிகாரம், ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது.
ஏனென்றால், அந்த வீதியை திறந்து வைத்தவர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர குணவர்த்தன தான்.
கடந்த 3ஆம், 4ஆம் திகதிகளில் புதிய நாகதீப திரிபிடக மாகாசெய தூபிக்கு முடி அணிவிக்கும் நிகழ்வின் போது தான் இந்த வீதியும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் வழக்கில் இல்லாத பெரஹெர மாவத்த என்ற பெயர் முற்றிலும் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சூட்டப்பட்டதை உள்நோக்கமற்ற செயலெனக் கருத முடியாது.
நயினாதீவு பௌத்தர்களின் வழிபாட்டுத் தலமாக இருப்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் தவறானதொன்றாக பார்க்கப்படாது.
ஆனால், அதனை சிங்கள பௌத்த மயப்படுத்த முற்படும் போது, அது மதத் தலம் என்பதற்கு அப்பாற்பட்டதாக மாறிவிடும்.
நயினாதீவு விவகாரம் அதனை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறது.
அதனால் தான், வடமாகாணசபையின் தீர்மானத்தை சிங்கள அரசியல் தலைமைகள் இந்தளவுக்கு இனவாதப் பிரச்சாரமாக்கியிருக்கின்றனர்.
-கபில்-