மும்பை புறநகர் ரயிலில் இளைஞர் ஒருவர், கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து, கீழே விழுந்து உயிரை பறிகொடுத்த வீடியோ யூடியூபிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.
பார்ப்பவர்களை பதற வைக்கும் அந்த வீடியோவில், அந்த இளைஞர் ரயில் கம்பியை பிடித்தபடி தொங்கிக் கொண்டு பயணம் செய்கிறார்.
ஒரு கட்டத்தில் கை வழுக்கி, ரயிலில் இருந்து கீழே விழுகிறார். அந்த இளைஞர், மும்பையை அடுத்த டோம்பிவிலி புறகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான பவேஷ் நகாதே என்பது பிறகு தெரியவந்தது.
“உள்ளே செல்லுங்கள்” என கத்தியபடி வாயிலின் நடுவில் இருக்கும் கம்பியை இறுக்கமாக பிடிக்க முயலும் பவேஷின் உயிர் சில நொடிகளில் பிரிந்தது.
கோபர் மற்றும் திவா ஆகிய ரயில் நிலையங்களின் நடுவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை யாரோ ஒரு பயணி தன் செல்போனில் வீடியோ எடுக்க, சில மணி நேரங்களில், அது அதிவேகமாக பரவியது.
ரயில்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசல்கள்தான் இது போன்ற கோர விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. சென்னையைக் காட்டிலும், நான்கு மடங்கு அதிக சேவையை மும்பை புறநகர் ரயில்கள் வழங்கினாலும், சாதாரண கூட்டத்தைவிட இரண்டரை மடங்கு அதிகமாக மக்கள் ஒரே ரயிலில் பயணிக்கின்றனர்.
‘பீக் ஹவர்ஸ்’ என சொல்லப்படும், மக்கள் பணிக்கு செல்லும் மற்றும் வீடு திரும்பும் நேரங்களில் ரயில் சேவைகளை அதிகப்படுத்துவதே, இது போன்ற விபத்துகளை தடுக்கும் வழியாகும்.