வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சம்மதித்தால் அடுத்த நிமிடமே தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமைப்பதவியை கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக அதன் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதலமைச்சர் கைகாட்டுபவருக்கு தன்னுடைய பதவியையும் (செயலாளர்) வழங்கத்தயார் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
தமிழ் மக்கள் மத்தியிலும் நாட்டினுடயதும் நன்மதிப்பை பெற்ற முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டு அவருடன் முரண்படுவதோ அவரைப்பற்றி அவதூறாக பேசுவதோ அவர் மீது தேவையற்ற விதத்தில் விமர்சனங்களை முன்வைப்பதோ ஏற்றதொன்றல்ல.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அவர் நீதியரசராக இருந்த பொழுது எந்த வழியில் பயனித்தரோ அதே வழியில் தான் இன்றும் பயனித்துகொண்டிருகிறார்.
அவருடைய செயற்பாடுகளில் அதிருப்தி இருந்தால் அது அவருடைய பதவியை மனதில் வைத்துகொண்டு அவருடன் சுமுகமாக பேசி தீர்க்கவேண்டுமே தவிர அதை விடுத்து அவருடன் முரண்படுவது உகந்த செயற்பாடு அல்ல.
சிறந்ததொரு மனிதனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு அதை திரும்பவும் பறிப்பதற்கு முழு மூச்சுடன் செயற்படுவதை ஒருபொழுதும் ஏற்க முடியாது.
அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எத்தருணத்திலும் இடம் கொடுக்க முடியாது. அவ்வாறன செயற்பாட்டை தடுப்பதற்கு என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்துகொண்டிருப்பேன்.
மேலும் வட மாகாண முதலமைச்சர் சம்மதித்தால் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக்குவதற்கு நான் என்றும் தயாராயிருக்கிறேன்.அதேபோல் அவர் கூறுபவரை கட்சியின் செயலாளரர் ஆக்குவதற்கும் தயாராயிருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.